தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : ஆக 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள இந்துமதி ஆன்ட்டி,

நான், 8ம் வகுப்பு மாணவி. என் அம்மா, அப்பாவுக்கு கடைசி குழந்தை. அம்மாவும், அப்பாவும் முதல் குழந்தையே ஆணாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால், முதலில் அக்கா பிறந்தாள்.

அடுத்தது, ஒரு ஆண் குழந்தை பெற்று, அதோடு நிறுத்திக் கொள்ள நினைத்தனர். ஒரு ஆண், ஒரு பெண் என்று, அழகான குடும்பத்தை எதிர்பார்த்தனர். இரண்டாவதும் பெண்ணாக அக்கா பிறந்ததும், மனமுடைந்தனர்.

பின், இரண்டாண்டு இடைவெளி விட்டு, மகன் வேண்டுமென்று வேண்டி, கோவில், கோவிலாக அலைந்து, நிச்சயம் இந்த முறை ஆண் குழந்தை தான் என்று உறுதியாக இருந்தபோது, நான் பிறந்து விட்டேனாம்.

என்னிடம், 'அக்கம் - பக்கம், உற்றார் -உறவினர்களுக்கு எல்லாம் தெரிந்த காரணத்தால் தான், உன்னை வளர்த்து தொலைக்கிறோம். இல்லாவிட்டால், ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விட்டிருப்போம்...' என்கின்றனர் பெற்றோர். என்னைப் பார்க்கும் போதே, அவர்களுக்கு வெறுப்பு வருகிறது.

சின்ன விஷயங்களுக்கு எல்லாம் திட்டுகின்றனர்; எரிந்து விழுகின்றனர். அப்பா, அம்மாவிற்கு பிடிக்காத காரணத்தால் இரண்டு அக்காக்களும் என்னை ஏளனப்படுத்துகின்றனர். எங்காவது ஓடிப் போய் விடலாமா என்றிருக்கிறது. எங்கு போவதென்று தெரியவில்லை. செத்துப் போய் விடலாம் என்றாலும், எப்படி சாவதென்று தெரியவில்லை. நான் என்ன செய்வேன், ஆன்ட்டி?

- இப்படிக்கு,

பவித்ரா.



அன்பு மகளே பவித்ரா,

நீ இப்படி கேட்கலாமா... கேட்பது இருக்கட்டும். இவ்வாறெல்லாம் நினைக்கலாமா... செத்துப் போவது என்பது, அத்தனை சுலபமா...

எல்லாரும் தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் என்பர். என்னைப் பொறுத்தவரை, அதற்கு மனோதிடம் வேண்டும்; மிகுந்த தைரியம் வேண்டும்; துணிவு வேண்டும். மரண பயம், மரணத்தை விடக் கொடியது. மரணத்துக்கு முயன்று, குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்தால், என்ன செய்வாய்...

எனவே, இதுபோன்ற தகாத எண்ணங்களை விட்டு விடு.

இரண்டாவதாக, ஓடிப் போகிற விஷயம்...

இது, தற்கொலையை விட ஆபத்தானது. நீ, செய்தித்தாள், 'டிவி' செய்திகளை பார்க்கிறாய் அல்லவா... 2, 3 வயதில் பெண் குழந்தைகளும், 60, 70 வயது முதியோரும் கூட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்படுகின்றனர்.

எட்டாம் வகுப்பு படிக்கிற பெண்ணான உனக்கு, என்னவாகும் என்று யோசி. இப்படிப்பட்ட புத்தியற்ற, அசட்டுத்தனமான நினைவே, உனக்குள் எழக் கூடாது. வேறு யாருக்காவது நம்மை பிடிக்கவில்லை என்றால், அவர்களை ஒதுக்கி வைத்து விடலாம் அல்லது ஒதுங்கி விடலாம். பெற்றவர்களுக்கும், கூடப் பிறந்தவர்களுக்கும் பிடிக்காது போனால், என்னென்ன செய்யலாமென்று சற்று யோசி.

நீ படிக்கிற பெண்...

'போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் துாற்றுவோர் துாற்றட்டும். எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்!' என்று படித்திருப்பாய் தானே...

மகாகவி பாரதியின் புத்தகம் உன்னிடம் உள்ளதா... அதேபோல், சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்... இரண்டும் இல்லாவிட்டால், உன் பள்ளி நுாலகத்தில் நிச்சயம் இருக்கும்... தேடி எடுத்துப் படி.

'ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி, இவ்வையம் தழைக்குமாம்' என்ற பாரதியின் வரிகளை, உன் வீட்டு நடுக்கூடத்தில் உட்கார்ந்து, அம்மா, அப்பா காதில் விழும்படி, சத்தம் போட்டு படி. கேட்டால், 'பள்ளியில் மனப்பாடம் செய்து வர கூறினர்...' என்று சொல்.

முதலில், உனக்கு தன்னம்பிக்கை வேண்டும். உன்னை பெற்றது தாய், தந்தையாக இருக்கலாம்; ஆனால், படைத்தது கடவுள். காரணமின்றியா ஒருவரைப் படைத்திருப்பான், இறைவன்?

அதை, உன் குடும்பம் புரிந்து கொள்ளாது போனாலும், நீ புரிந்து கொள்.

'எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்' என்று, உன் கடமையை செய்.

இப்போது, உன்னை வெற்று காகிதமாக நினைப்போருக்கு முன், பட்டமாக பறக்க வேண்டும் என்று, முடிவு செய்து கொள்.

பெரும் சாதனைகள் செய்ய, மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும் என்பார், சுவாமி விவேகானந்தர். அவை, ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம்.

முதலில் உன்னை எதிர்ப்போரை, ஏளனம் செய்யும் அக்காக்களை, அங்கீகரிக்க மறுக்கும் பெற்றோரை, அவர்கள் ஏச்சு, பேச்சுக்களை மனதில் ஏற்றி பாரமாக சுமக்காமல், துாசு மாதிரி ஊதி தள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள். செருப்பு தைப்பவர் மகனான ஆபிரகாம் லிங்கன், அமெரிக்க அதிபதியானது உனக்கு தெரியும் தானே.

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லுாரில், பீடி சுற்றும் அம்மாவின் இரண்டாவது மகள், அஷ்வீதா, அமெரிக்கா ஹார்டுவர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று, நாடு திரும்பி இருக்கிறார். இதுபோல், சாதனை படைத்தவர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை நம்பு மகளே... நீயும் சாதிக்கத்தான் பிறந்திருக்கிறாய். காயங்கள் குணமாக காலம் வரும் காத்திரு... கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு!

கனவு காண் மகளே... பட்டமாகப் பறக்கிற கனவு காண். என்னை நம்பாது போனாலும், மகாகவி பாரதியையும், சுவாமி விவேகானந்தரையும் நம்பு.

நீ வெற்று காகிதமல்ல... ஒரு நாள், பட்டமாகப் பறக்கத்தான் போகிறாய்... உன் பெற்றோரும், அக்காக்களும் அதை அண்ணாந்து பார்க்கத்தான் போகின்றனர்!

- இப்படிக்கு, இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us