தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : ஆக 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா,

நான், 10ம் வகுப்பு மாணவன். எனக்கு, 'சைக்காலஜி'யில் மிகுந்த ஆர்வம் உண்டு. பிளஸ் 2 வகுப்பு படித்த பின், இந்த துறையில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். 'சைக்கியாட்ரிஸ்ட்' ஆக, உளவியல் துறையில் என்னவெல்லாம் படிப்புகள் உள்ளன. பிற்கால வாய்ப்புகள் பற்றியும் சற்று விரிவாக கூற முடியுமா... நீங்கள், ஐ.ஏ.எஸ்., பற்றி, விளக்கமாக எழுதி இருந்ததை படித்தேன். அதேபோல், எனக்கு சைக்காலஜி பற்றி கூறுங்களேன், ப்ளீஸ்.

இப்படிக்கு,

கிரீஷ்.



அன்பு கிரீஷ்,

உன் விருப்பம் என்னையும் ஆர்வப்படுத்துகிறது; மகிழ்ச்சி அளிக்கிறது. சைக்காலஜி என்பது, வெறும் மனநலம் சார்ந்த துறை மட்டுமல்ல; மிகவும் பரந்து விரிந்தது; மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது.

எதை செய்வதானாலும், எதைப் படிப்பதானாலும் உடல் ஆரோக்கியத்தோடு, மன நலமும் மிகவும் முக்கியம். மனித மனங்களை, செயல்பாடுகளை புரிந்து கொண்டால் தான், சரிவர இயங்க முடியும்.

சக மாணவியர், ஆசிரியர்கள், உடன் பணிபுரிவோர், மேலதிகாரிகள், ஏன் பேருந்திலும், ரயிலிலும், உடன் பயணிப்போர் என, அன்றாடம் பழகும், சந்திக்கும் மக்களோடு புரிதல் இன்றி வாழவே முடியாது. இந்தப் புரிதலுக்கும், ஆழ் மனதை அறிவதற்கும், சைக்காலஜி எனப்படும், உளவியல் மிகவும் உதவும்.

இதில் பல பிரிவுகள் உண்டு. அவை பற்றி பார்ப்போம்...

கிளினிக்கல் சைக்காலஜி

இது, உளவியலில் மிகவும் முக்கியமான, பிரபலமான பிரிவு. இதில் தான் மனநலக் கோளாறுகள், குறைபாடுகள், உள் மனச் சிக்கல்கள் அனைத்தும் அடங்கும். ஓ.சி.டி., எனப்படும், ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்வது, மன நல பாதிப்பு, இரு நிலை கொன்ட மனம் என, எல்லா பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிப்பதை கற்று கொள்ளலாம்.

சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் என அழைக்கப்படும் மனநல மருத்துவர், 'கிளினிக்கல் சைக்காலஜி' பட்டம் பெற்றவரே. மனநல மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியலாம். இன்றைய கால கட்டத்தில், அதிக கட்டணம் வாங்குவோர் மனநல மருத்துவர்களே. ஒவ்வொரு நோயாளிகளிடமும் 10 நிமிடம், 15 நிமிடம் பேசுவதற்கு, நிமிடத்தை கணக்கிட்டு பணம் பெறுவர். நேரம் அதிகரிக்கும் நிலையில், மருத்துவர்களின் கட்டணமும் எகிறும்.

எஜுகேஷனல் சைக்காலஜி

பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் கல்வித் தரத்தை அதிகரிக்க, 'எஜுகேஷனல் சைக்காலஜி' உதவுகிறது. ஒரு மாணவன் எதனால் படிப்பில் பின்தங்குகிறான்; ஏன் முன்னேற முடியாமல் தவிக்கிறான் என்பதை கண்டறிந்து, கல்வித் தரத்தை உயர்த்துவதே இதன் நோக்கம். இதை கற்றால், கல்வி நிறுவனங்களில் ஆலோசகராகப் பணிபுரியலாம்.

டெவலப்மென்ட் சைக்காலஜி

மனிதர்களுக்கு மிக முக்கியமானதாகும். மனிதன் பிறப்பு முதல், இறப்பு வரை, அதாவது, கருவறையில் இருந்து கல்லறை வரை உடல், மன ரீதியாக எவ்வாறு வளர்கிறான் என்பதை போதிக்கும், சைக்காலஜி இது. குழந்தை மற்றும் முதியோர் நடவடிக்கையை ஆராய்ந்து உதவி புரிவதே, 'டெவலப்மென்ட் சைக்காலஜி' குழந்தைகள், முதியோர் காப்பகம், சமூக நல அமைப்புகளில் பணிபுரியலாம்.

காக்னிட்டிவ் சைக்காலஜி

ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு மிகவும் உதவும் துறை. மனித மூளை எப்படியெல்லாம் வேலை செய்கிறது; எல்லாத் தகவல்களையும் எவ்வாறு சேமிக்கிறது; பிரச்னைகளுக்கான தீர்வுகளை எப்படி எடுக்கிறது ஆகியவற்றை ஆராய்கிறது, காக்னிட்டிவ் சைக்காலஜி.

ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி

விளையாட்டு வீரர்களுக்கு உதவுகிற, மிக முக்கியமான சைக்காலஜி இது. விளையாட்டு வீரர்கள், தங்களின் குறிக்கோளான வெற்றியை அடைய மனரீதியாக அவர்களுக்கு உதவுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு நோய் வந்தாலோ, விளையாட்டில் எலும்பு முறிவு, தசை பிடிப்பு ஏற்பட்டாலோ, மருத்துவர்களின் சிகிச்சையோடு, 'ஸ்போர்ட்ஸ் சைக்கியாட்ரிஸ்ட்' என்ற மனநல நல சிகிச்சை, மிக மிக முக்கியம்.

இண்டஸ்ட்ரியல் அண்டு ஆர்கனைசேஷனல் சைக்காலஜி

பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், முக்கியமாக ஐ.டி., நிறுவனங்களுக்கு, இந்த சைக்காலஜி படித்தோர் அவசியம் தேவை. ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பது, வேலையை சுமையாக கருதாமல், 'கிரியேட்டிவ்' ஆக செய்வது, மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது, சுற்றுச்சூழல் இறுக்கமற்று தளர்வாக்கி கொள்வது போன்றவற்றுக்கு இந்தப் பிரிவு பயன்படுகிறது.

பயோ சைக்காலஜி

மரபணு மற்றும் ஹார்மோன், மனித மனதையும், உணர்வுகளையும் எப்படி மாற்றுகிறது; நரம்பு மண்டலம் செயல்படும் விதத்தை எல்லாம், 'பயோ சைக்காலஜி' விளக்குகிறது. நரம்பியல் ஆராய்ச்சி மையங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரியலாம்.

கன்ஸ்யூமர் சைக்காலஜி

இது, வணிகம் சம்பந்தப்பட்டது. அநேகமாக, எல்லா வியாபாரிகளுக்கும் இது தெரிந்திரு க்கும். கார் விற்பனையாளரில் இருந்து, நடைபாதை கடை வியாபாரி வரை, 'கன்ஸ்யூமர் சைக்காலஜி' அறிந்தோர் அதிகம். 'டிவி' மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மக்களை ஈர்க்கும் விதங்களை கன்ஸ்யூமர் சைக்காலஜி கற்றுத் தருகிறது.

நான் அறிந்த, எனக்கு தெரிந்த, என் சிற்றறிவுக்கு எட்டிய அனைத்தையும் கூறி விட்டேன். இதில் விருப்பமானதை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது உன் பொறுப்பு. எதைப் படித்தாலும் அதில், 'நம்பர் ஒன்' ஆக திகழ்ந்து வெற்றி பெற வாழ்த்துகள் !

அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us