தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : ஆக 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா,

விழுப்புரம் மாவட்டம், பரையந்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் மாணவ, மாணவியர் நாங்கள். பள்ளியில் படிக்கும் எங்கள் பிரச்னையை, உங்கள் அன்பான பார்வைக்கு கொண்டு வருகிறோம்...

எங்கள் கிராமம், மத்திய, மாநில விருதுகள் பெற்றது. மின்சாரம், கழிப்பறை வசதிகள் உள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கடைகள் உண்டு. நல்ல சாலை வசதியும் இருக்கிறது; ஆனால், பஸ் வசதி மட்டுமில்லை. இதனால், கிராமத்தில் இருந்து பள்ளிக்கு, 5 கி.மீ., நடந்து தான் செல்கிறோம். மாலை, பள்ளியில் வகுப்புகள் முடிந்ததும், நடந்து வீட்டுக்கு வருவதற்குள், இருட்டி விடுகிறது.

காலையும், மாலையும் சேர்த்து, 10 கி.மீ ., நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. கால்வலியும், உடல் சோர்வும், படிப்பில் கவனம் செலுத்த விடுவதில்லை. இரு சக்கர வாகனமும், சைக்கிளும் வைத்திருக்கும் குடும்பத்தை சேர்ந்தோர், அதில் போய் விடுகின்றனர்.

என் போன்ற வசதியற்ற குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் தான் அவஸ்தை படுகிறோம். அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிகளில், எத்தனையோ மனுக்கள் அளித்து விட்டோம்; பலனில்லை. மாணவ, மாணவியரான எங்கள் துன்பம் தீர, வழியேதும் பிறக்குமா அம்மா.

இப்படிக்கு,

பரையந்தாங்கல் கிராம மாணவ, மாணவியர்.



அன்புள்ள மாணவச் செல்வங்களே,

உங்கள் இன்னலை, புரிந்து கொள்கிறேன். நீண்ட துாரம் நடந்து, பள்ளிக்கு சென்று திரும்பும் காரணத்தால் ஏற்படும் உடற்களைப்பையும், மனச்சோர்வையும் உணர்கிறேன். மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்ற கிராமத்திற்கே இந்த நிலை என்றால், என்ன சொல்வது...

பொதுவாக, மலைவாழ் மக்கள் வாழும் இடங்களில் தான், போக்குவரத்துக்கு பேருந்து இல்லாத நிலை இருக்கும். பேருந்து செல்ல முடியாத மலைப் பாதைகளும், இடையில் குறுக்கிடும் நீரோட்டங்களுமே அதற்கு காரணமாக சொல்லப்படும். சலசலக்கும் ஓடைகளும், சின்ன சின்ன அருவிகளும், சூரிய ஒளி புகாத பெரிய பெரிய மரங்களும் இடையூறாகும்.

ஆனால், விழுப்புரம் போன்ற நகரத்தின் அருகே உள்ள கிராமத்துக்கு, அரசு பேருந்து இயக்குவதில் என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. இரு கழக ஆட்சிகளிலும் நிறைவேறாத உங்கள் கோரிக்கையை, கல்வி அமைச்சருக்கும், முதல்வருக்கும் அனுப்பி வையுங்கள்.

தமிழக அரசின் சேவைகளை நேரடியாக, 'வாட்ஸ் - அப்' வழியாக பெறலாம். எங்கும், எப்போதும், 'வாட்ஸ் - அப்'புக்கு செய்தி வருகிறது.

தமிழக அரசு, 'வாட்ஸ் - அப் சாட்பாட்' வழியாக, 20 துறைகளின், 66 சேவைகளை பெறலாம்...' என்கிறது. அதற்கு, 78452 52525 என்ற அலைபேசி எண்ணுக்கு, 'வணக்கம்/Hi' என செய்தி அனுப்பி, சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறது.

நான் சொன்னது போல் கோரிக்கை மனுக்கள் அனுப்புவதுடன், இதையும் செய்து பாருங்களேன். விரைவில் கஷ்டங்களில் இருந்து விடுதலையும், பிரச்னைக்கு தீர்வும் கிடைக்கும் என்ற நம்புகிறேன்.



அன்புடன்,

இந்துமதி.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us