தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : ஆக 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா,

நான், அரசுப் பள்ளியில், தமிழ் வழி கல்வி பயிலும், 8ம் வகுப்பு மாணவன். இப்போது அனைவரும் ஜெமினி, குரோக், ஏ.ஐ., என்றெல்லாம் சொல்கின்றனரே... அவைகளெல்லாம் என்ன?

எனக்கு தெரியவில்லை. எனக்கு மட்டுமில்லை, நான் படிக்கும் பள்ளி மாணவ - மாணவியருக்கும் தெரியாதது, குறைபாடாக உள்ளது. இவை பற்றி சற்று விளக்கமாகக் கூறுவீர்களா?

இப்படிக்கு,

எம்.குமரன்.



அன்புள்ள குமரன்,

உங்கள் பள்ளி மாணவ - மாணவியருக்கு மட்டுமல்ல, நிறைய பேருக்கு தெரியாத விஷயங்கள் இவை.

நவீன கணிதம் கூட, இன்றைய தலைமுறை பெற்றோருக்கு புரிவதில்லை. பிள்ளைகள் வீட்டுக் கணக்கில் சந்தேகம் கேட்டால், 'எங்கள் காலத்தில் இந்த கணக்கெல்லாம் இல்லை; உங்க மிஸ் கிட்டேயே கேளு போ...' என்பர்; இல்லாவிட்டால், 'டியூஷன்' வகுப்பில் சேர்த்து விடுவர்.

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர, அதற்கு தகுந்த மாதிரி படிப்பின் தரம் மாறிக் கொண்டே வருகிறது. இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம், அதாவது, 'டெக்னாலஜி' முக்கியமானதாகி விட்டது. செயற்கை நுண்ணறிவு, ஜெமினி, குரோக் ஏ.ஐ., சாட் ஜி.பி.டி., போன்ற, ஏ.ஐ.,களே, இனி உங்களை வழிநடத்தப் போகின்றன. இவையே, இனி உங்கள் எதிர்காலமாக மாறப் போகின்றன.

அன்றாட வாழ்க்கையில் காற்றும், உணவும், தண்ணீரும் எவ்வளவு முக்கியமோ, அதை போலவே செயற்கை நுண்ணறிவும் முக்கியத்துவம் பெறப் போகிறது. ஏன், அது பயன்பாட்டுக்கு வந்து விட்டது என்றே சொல்லலாம்.

'நீரின்றி அமையாது உலகு' என்பது போல், 'செயற்கை நுண்ணறிவின்றி அமையாது வாழ்க்கை' என்ற காலம் வந்து விட்டது.

ரஜினியின், எந்திரன் திரைப்படம் பார்த்திருப்பாய். அதில் வரும் 'சிட்டி' என்ற, 'ரோபோ'வை உருவாக்கியது யார் என்று உன்னிடம் கேட்டால், ரஜினி என்பாய் அல்லது இயக்குனர் ஷங்கர் என்பாய். ஆனால், உண்மையில் எந்திரனை உருவாக்கிய மூளை, எழுத்தாளர் சுஜாதாவினுடையது. சிட்டியின் சிருஷ்டி கர்த்தா அவரே.

இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என, வடிவமைத்து வைத்து விட்டால், அவற்றை ரோபோ செய்து முடிக்கும். இப்போது வீடு பெருக்கக் கூட, ரோபோக்கள் வந்து விட்டன. கட்டிலடி, சோபாக்களின் கீழ் குனிந்து பெருக்க முடியாத, துடைப்பம் நுழையாத இடங்களில் எல்லாம் கூட, இந்த வட்ட வடிவ ரோபோக்கள், திறமையான நடனப் பெண்மணி போன்று, அழகாக சுழன்று, நுழைந்து சுத்தமாக பெருக்குகின்றன.

கல்லுரலுக்கு பதிலாக, கிரைண்டர், அம்மிக்கல் குழவிக்கு பதிலாக மிக்ஸி, துணி துவைக்கும் கல்லுக்கு பதிலாக, வாஷிங்மிஷின், சாமான் தேய்க்க டிஷ் வாஷர், டைப்ரைட்டருக்கு பதிலாக, கம்ப்யூட்டர், பிரின்டர், நகல் எடுக்கும் மிஷின் என, மனித உழைப்பை இயந்திரங்கள் செய்வது போல், மனித அறிவுக்கு வேலையின்றி அனைத்தையும், ஏ.ஐ., செய்யும்.

உங்களால் கேட்கப்படும் சரியான கேள்விகளுக்கு சரியான பதிலை தரும். நீங்கள் அகராதியை புரட்ட வேண்டாம்; புத்தகங்களில் தேட வேண்டாம்; நுாலகங்களுக்கு செல்ல வேண்டாம்; 'ஐயோ இதற்கு விடை என்ன...' என்று மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கேள்வியை கேட்பது மட்டுமே. சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. மூளைக்கோ, அறிவிற்கோ வேலை இல்லை. கேட்கப்பட்ட கேள்விக்கு வினாடி நேரத்தில் பதில் கிடைத்து விடும்.இனி-

கணிதமா...

ஏ.ஐ.,யிடம் கேளுங்கள்.

பாடலா...

கண்ணதாசனோ, வைரமுத்துவோ, சினேகனோ தேவையே இல்லை. 'சிச்சுவேஷன்' சொன்னால், பாடலை ஏ.ஐ., தரும்.

இசையமைப்பா...

ஏ.ஆர்.ரகுமானும், இளையராஜாவும், அனிருத்தும் தேவையே இல்லை.

ஏ.ஐ., இசையமைத்து கொடுத்து விடும்.

என்னை போன்ற கதாசிரியர்களும் தேவையில்லை.

ஏ.ஐ.,யே, கேட்டபடி எல்லாம் கதை எழுதி தரும்.

திரைக்கதை, வசனம் எல்லாம் ஏ.ஐ., செய்து முடிக்கும்.

எப்படி, மனித உழைப்பு ஓரம் கட்டப்பட்டதோ, அதே மாதிரி மனித அறிவு, ஓரம் கட்டப்படும். சுய சிந்தனை, தேடுதல், ஆற்றல் எதுவுமற்று மனிதன், வெற்று காகிதம் ஆக்கப்படுகிறான். அவனுக்குள் தேடல் இல்லாமல் போகிறது. அழகுணர்ச்சி, ரசனை, கவித்துவம், புத்திகூர்மை எல்லாம் மழுங்குகிறது. கற்பனை வளம் குன்றுகிறது.

ஓவியம் வரைந்து விடும். இப்போதெல்லாம் அனைத்து புத்தக அட்டைகளும் ஏ.ஐ., தயாரிப்பவையே. இதெல்லாம் இருக்கட்டும்... ஏ.ஐ., நாட்டியம் ஆடுமா... கச்சேரி செய்யுமா? சிற்பம் செதுக்குமா; தாகத்திற்கு தண்ணீர் கொடுக்குமா; பசிக்கு சோறு போடுமா; நெல்லும், தானியங்களும் விளைவித்து விவசாயி ஆகுமா?

இவை எனக்குள் எழும் கேள்விகள். ஏ.ஐ.,யிடம் கேட்டு யாராவது பதில் சொல்லுங்களேன்!

அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us