தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : ஆக 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள இந்துமதி ஆன்ட்டி,

எங்கள் வீட்டில் தினமும், 'தினமலர்' நாளிதழ் வாங்கி வருகிறோம். சனிக்கிழமைகளில், சிறுவர்மலர் இதழில் வெளியாகும், 'இளஸ் மனஸ்' பகுதியும், ஞாயிற்றுக் கிழமை, வாரமலர் இதழில் வரும் தொடர்கதை, சிறுகதைகளையும் விடாமல் படிப்பார் என் அம்மா. அவர் படிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

குடும்பத்தில் அப்பா, அம்மா, பாட்டி, நான், என் தங்கை என, ஐந்து பேர் மட்டும் இருக்கிறோம். பள்ளி ஆண்டு விடுமுறைக்கு, தன் இரு பிள்ளைகளுடன் வருவார், என் அத்தை. அவர்களை அழைத்து வந்து விட்டு, சில நாட்களுக்கு பின் அழைத்து செல்ல மட்டும் வருவார், மாமா.

இரண்டிரண்டு நாட்கள் தங்குவார். அத்தையும், எங்கள் வயதுடைய கோபியும், கிருஷ்ணாவும் ஒரு மாதத்துக்கு மேல், எங்களோடு இருப்பர். அத்தை வரும் போது, கூடை கூடையாக பழங்கள், தின்பண்டங்கள், வட மாநிலங்களில் தயாராகும் விசேஷ இனிப்பு வகைகள் கூடவே வரும்.

நான், தங்கை விஜி, கோபி, கிருஷ்ணா நால்வரும், தெரு பிள்ளைகளோடு வீதியில் ஐஸ்பாய்ஸ், கிரிக்கெட் விளையாடுவோம். பகலில் வெயில் காரணமாக வீட்டினுள், 'டிரேட், லுாடோ, கேரம்' எல்லாம் விளையாடுவோம். ஒன்றாக படுத்து, ஒன்றாக துாங்கி, சந்தோஷமாக இருப்போம்.

மூன்று மாதங்களுக்கு முன், திடீரென்று மாரடைப்பால் காலமாகி விட்டார், மாமா. வட மாநிலம் ஒன்றில், இரு சிறு பிள்ளைகளோடு தனியாக வாழ முடியாது என்பதால், எங்களோடு வந்து விட்டார், அத்தை.

ஐந்து பேராக இருந்த வீடு, கூடுதலாக மூன்று பேர் சேர்ந்து, எட்டாகி விட்டது.

அப்பா, பிசினஸ்மேன். நன்றாகத் தான் சம்பாதிக்கிறார். தன் தங்கை இப்படியாகி வந்ததில், அப்பாவுக்கு மிகுந்த மன கஷ்டம் தானே தவிர, பாரமாக எண்ணவில்லை. ஆனால், இத்தனை நாட்கள், விடுமுறைக்கு குழந்தைகளோடு வந்த அத்தையை நன்றாக நடத்திய அம்மா, இப்போது வெறுக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இடித்து பேசுகிறார்.

பூஸ்ட், பால் என எதுவும் எனக்கும், விஜிக்கும் நன்றாக தரும் அம்மா, கோபிக்கும், கிருஷ்ணாவுக்கும் நீர் ஊற்றி தருகிறார். அப்பா வாங்கி வரும் பழங்களையும், தின்பண்டங்களையும் படுக்கையறையில் மறைத்து வைத்து, அறைக்கதவை தாழ்ப்பாள் போட்டு, எங்களுக்கு மட்டும் தருகிறார்.

'இங்கேயே சாப்பிட்டு போங்கள். அங்கே அந்த சனியன்கள் இருக்கும்...' என்கிறார்.

எனக்கு அவர்களை விட்டு, தனியாக சாப்பிடப் பிடிக்கவில்லை. கஷ்டமாக இருக்கிறது; மனம் வலிக்கிறது. பாவம் அத்தையும், குழந்தைகளும் என்ன செய்வர். மாமா இருந்திருந்தால், அவர்கள் இங்கு வந்திருக்க மாட்டார்களே...

நால்வரும் ஒன்றாக பள்ளிக்கு சென்று, ஒன்றாகத் தான் திரும்புகிறோம். வீட்டுக்கு வரும் போதே கிருஷ்ணா, 'பசிக்குதுடா...' என்பான். என்னையும், விஜியையும் அறைக்கு அழைத்து சென்று, வெண்ணெய் தடவிய பிரெட், ஸ்வீட் பன், முறுக்கு, தட்டை என்று தருகிற அம்மா, அவர்களுக்கும் தந்தால் என்ன ஆன்ட்டி... அம்மாவின் மனம் மாறும்படி பதில் எழுதுங்கள்.

இப்படிக்கு, முகுந்தன்.

அன்பு முகுந்தா,

எனக்கும் மனம் வலிக்கிறது. மிகவும் வேதனை அளிக்கிறது. தன்னுயிரைப் போல் மன்னுயிரை எத்தனைப் பேர் நினைப்பர்? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பதை, எத்தனைப் பேர் நினைப்பர்?

அதிலும், வாழ்ந்து கெட்டவர்கள் வீட்டுக்கு வந்தால், பெரும்பாலும் இப்படித்தான் நடக்கிறது; நடத்துகின்றனர்.

'தேஷி' என்று கையேந்தி வந்து விட்டவர்களுக்கு, முதலில் உண்ணக் கொடுத்து, பின்னர், தாங்கள் சாப்பிடுவது தான் நம் பண்பாடு.

வாயில் போட்டு தொண்டையில் இறங்கிய பின், எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், கடைசியில் அது, மலமாகத் தான் வெளியேறும். இது தான் இயற்கை; இறைவன் விதித்தது. இதை உன் தாய் புரிந்து கொள்ள வேண்டும். உண்ணும் பொருட்களில் தன் பிள்ளைகள் வேறு, மற்ற பிள்ளைகள் வேறு என்று பிரித்து பேதம் பார்ப்பது, தாய் மனமே அல்ல... அது பேய் மனம் தான்.

அத்தை, கூடை கூடையாக பழங்களும், தின்பண்டங்களும் கொண்டு வந்த போது, நன்றாக நடத்திய உன் அம்மா... கணவனை இழந்து இரு பிள்ளைகளோடு அத்தை, வேறு கதியற்று, திக்கற்று, தாய் வீட்டுக்கு வந்ததும், பாரமாகவும், வேண்டாதவளாகவும் நினைக்கிறார். இதுவே, தன் உடன் பிறந்தவளாக இருந்தால், இப்படி செய்வாரா?

கணவனின் உடன் பிறப்புகள் வேறு... தன் உடன் பிறப்புகள் வேறு என்று பிரித்து பார்த்து, தரம் தாழ்ந்து போவதை, சிறியவனான உன்னாலேயே தாங்க முடியாத போது, உன் அத்தை, பாட்டியின் மனம் எவ்வளவு சங்கடப்படும்?

யாரும் இந்த உலகில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை; எதுவும் நிரந்தரமில்லை. படுத்தால் காலை எழுந்திருப்பது நிச்சயமில்லை. கோடி கோடியாக சேர்த்தவர்கள் என்ன கொண்டு போயினர்... போகும் போது எது அவர்களுடன் போனது...

'காதறுந்த ஊசியும் கூட வராது காண்' என்றாரே தமிழ் புலவர் பட்டினத்தார்.

'தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்பதையும் காட்டினாரே...

உலகம் முழுதும் வெற்றி கொண்ட கிரேக்க மன்னர், அலெக்சாண்டர் இறந்த பின், சவப்பெட்டியின் வெளியே, தன் விரித்த கை விரல்களை எல்லாருக்கும் தெரியும்படி வைக்கச் சொன்னாராம்.

இதன் பொருள், 'உலகையே வெற்றி கண்ட நான், ஒரு சிறு துரும்பைக் கூட கையில் கொண்டு போகவில்லை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்' என்பது தான்.

இதை உன் தாய் புரிந்து கொள்ளட்டும். எல்லாருக்கும் வாயும், வயிறும் ஒன்று என தெரிந்து கொள்ளட்டும். எல்லா பிள்ளைகளும் ஒன்றே என்ற அறிவை, ஆண்டவன் தரட்டும். உன் மனம் சங்கடம் நீங்கி, அமைதி பெறட்டும்.

அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us