தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்...

இளஸ்... மனஸ்...

இளஸ்... மனஸ்...


PUBLISHED ON : செப் 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஆன்ட்டி...

என் பெயர் ராகவ். நல்ல வசதியான குடும்பத்தில் ஒரே மகன். எனக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை. காரணம், என் பிறப்பு. பிறக்கும் போதே என் இரு கால்களும் வளைந்திருந்தனவாம். இரண்டு வயது வரை நடக்கவில்லையாம். பேச்சு வரவில்லையாம். சிறு குழந்தையாக இருந்த போது, என் பெற்றோர் என்னை துாக்கி சென்று ரயில் நிலையத்தில் ரயிலை காட்டுவர். அதன் சத்தத்தில் கை தட்டி மகிழ்வேனாம்.

என் முதல் பிறந்த நாளுக்கு அப்பாவின் சிங்கப்பூர் நண்பர், தண்டவாளத்தில் ஓடி, மேலே ஏறி இறங்கும் ரயில் வண்டி பொம்மையை பரிசாக அனுப்பியிருந்தாராம். அதை ஓட விட்டு காட்டிய போது, 'ரயில்னா சத்தம் போடணுமே... இந்த ரயில் ஏன் சத்தமே போடல...' என்று கேட்டேனாம்.

ஆனால், அந்த ரயில் சத்தம் போட்டிருக்கிறது. எனக்கு இரு காதுகளும் கேட்கவில்லை என்பதை தெரிந்து கொண்ட என் பெற்றோர், பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றுள்ளனர்; கோவில் கோவிலாக சுற்றியிருக்கின்றனர்.

என் இரண்டு வயதுக்கு மேல் நடக்கவும், பேசவும் ஆரம்பித்தேனாம். ஆனால், காதுகள் மட்டும் இன்று வரை கேட்கவே இல்லை. சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டதும், குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்பதால், என் ஒருவனோடு நிறுத்தி விட்டனர், பெற்றோர்.

காது கேட்கும் கருவி துணையுடன் ஓரளவு கேட்கும் திறன் பெற்ற நான், பள்ளியிலும், கல்லுாரியிலும் முதல் மாணவனாக திகழ்ந்தேன். எல்லாவற்றிலும் முதல் பரிசு பெற்றேன்.

இந்தியாவின் தலைசிறந்த கல்லுாரியில் மிகச் சிறந்த பட்டம் பெற்ற என்னை 'கேம்பஸ் இன்டர்வியூ' எதிலும் தேர்வு செய்யவில்லை. மொபைல் போனில் பேசுவதை கேட்க முடியாததே காரணமாக செ ால்லப்பட்டது. இதற்காக, என் பெற்றோர் மனமுடைந்து போய் விட்டனர். ஆனால், என் படிப்பிற்கும், திறமைக்கும் நிச்சயமாக நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். காது கேளாமை என்பது அவ்வளவு பெரிய குறையா ஆன்ட்டி...

இப்படிக்கு, ராகவ்.

அன்பு ராகவ்...

உன் தன்னம்பிக்கை என்னை மகிழ்விக்கிறது. அதை மனமாற பாராட்டுகிறேன். மகனே... உன் அறிவையும், திறமையையும் இந்த உலகம் மதிக்க வேண்டும். கண்களின் குறைபாட்டிற்கு கண்ணாடி அணிவதை ஏற்றுக் கொள்ளும் மனங்கள், காது கேளாமைக்கு, 'ஹியரிங் எய்ட்' கருவி பொருத்திக் கொள்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காது கேளாத, வாய் பேச முடியாத, பார்வை இழந்தோர் எல்லாம் சாதனை செய்து, உலக சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கின்றனர். பார்வை இழந்தும், காது கேளாத நிலையிலும் உழைப்பால் உலகில் புகழ் பரப்பிய ெஹலன் கெல்லர், ஸ்டீபன் ஹாக்கின்ஸ், லாரா பிரிட்ஜ் மேன், ராபர்ட் ஸ்மித்தாஸ் போன்றோர் பற்றி, உன் பெற்றோருக்கு எடுத்துச் சொல். அவர்கள் வாழ்க்கை சரித்திரங்கள் புத்தகங்களாக வந்திருக்கின்றன. மலிவு விலைப்பதிப்புகளும் உண்டு. அவற்றை வாங்கி தந்து படிக்க வை.

ஆனால், ஒன்றை உனக்கு சொல்கிறேன் ராகவ். எந்த பெற்றோரும் தங்களுக்கு வரும் துன்பங்களை சகித்து கொள்வர்; ஆனால், தங்கள் குழந்தைகளின் இன்னல்களை பொறுத்து கொள்ளவே மாட்டார்கள். இது தான் பெற்றோர் பாசம். இதை நீ உணர்ந்தும், புரிந்தும் கொள்ள வேண்டும்.

மாற்ற முடியாததை, இயலாததை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உனக்கு இருப்பதைப் போல் அவர்களுக்கும் வர வேண்டும்; வரும்.

உன் நம்பிக்கையை அவர்களும் பெறுவர். பெற வேண்டும் என மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன் மகனே!

- அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us