PUBLISHED ON : செப் 12, 2026

அன்புள்ள இந்துமதி அம்மா...
நான், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன். கல்லுாரிக்கு செல்லும் போது மருத்துவ சம்பந்தப்பட்ட உயர் படிப்பு படிக்க விரும்புகிறேன். அதற்கு, 'நீட்' தேர்வு எழுத வேண்டும் என்கின்றனர். நீட் என்றாலே பயமாக இருக்கிறது. அதை எழுதி வெற்றி பெற முடியாமல் நிறைய பேர் தற்கொலை செய்து கொள்கின்றனரே...
ஆரம்பத்தில், 2017ல், அரியலுாரில் அனிதா என்ற மாணவி தான் தமிழகத்தில் முதல் முதலில் நீட் தேர்விற்கு பயந்து, தற்கொலை செய்து கொண்டார். தற்போது, சேலம் வெள்ளாபுரம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த மாணவி சோபிகா, 2026 ஜூன் 19ல் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
நீட் என்ன அவ்வளவு கடினமான பரீட்சையா...
மருத்துவம் படிக்க ஆசைப்படும் என் போன்றோருக்கு இவற்றையெல்லாம் செய்தித்தாள்களில் படித்தும், 'டிவி' சேனல்களில் பார்த்தும் கவலையும், பயமும் அடைகிறோம்.
நீட் என்பது என்ன... கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்.
இப்படிக்கு,
- திருஞானசம்பந்தன்
அன்பு மகனே...
அற்புதமான பெயரை வைத்துக் கொண்டா நீ கவலைப்படுகிறாய்... பயப்படுகிறாய். என் அப்பன் ஈசன், இந்த பெயருக்கே அருள் பாலிப்பானேப்பா... அவனருளைப் பெற்றவர்கள் எதற்குமே அஞ்ச மாட்டார்களே... நீ வெறும் 'நீட்' தேர்வை நினைத்து அஞ்சலாமா... நீட் என்பது வேறு ஒன்றும் இல்லையப்பா... 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' என்பதன் சுருக்கம் தான் நீட்.
இது, மருத்துவ கல்லுாரியில் சேர விரும்பும் மாணவ - மாணவியருக்கு நாடு தழுவிய அளவில் நடக்கும் தேர்வு. அகில இந்திய தேர்வு; வெறும் நுழைவு தேர்வு மட்டுமே! இது என்னவோ தமிழ் மாநிலத்திற்கு மட்டுமானது போல அரசியல்வாதிகளால் சித்தரிக்கப்படுகிறது.
எல்லா மாநிலங்களிலும் மருத்துவத் துறையில் ஆர்வம் உடைய மாணவ - மாணவியர், நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மருத்துவ கல்லுாரியில் சேர முடியும்.
எம்.பி.பி.எஸ்., என்பது 'பேச்சுலர் ஆப் மெடிசன் பேச்சுலர் ஆப் சர்ஜரி' என்பதாகும். இது மருத்துவத்திற்கான இளநிலைப் பட்டம். இதில் தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவர் ஆக முடியும். இப்பட்டம் பெற, 4 ஆண்டு படிப்பும், அதன்பின் ஒரு ஆண்டு பயிற்சி அதாவது, 'இன்டர்ன்ஷிப்' எனப்படும், 'ஹவுஸ் சர்ஜன்' கட்டாயப் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த, 5 ஆண்டு கல்வியை, உரிய காலத்தில் படித்து தேர்ச்சி பெற்றாக வேண்டும். திறமை மிக்க மருத்துவர் என்று பேர் எடுக்க, வெறும் எம்.பி.பி.எஸ் ., போதாது. எம்.எஸ்., - எம்.டி., என்ற மேற்படிப்பும் வேண்டும். அதற்கும் நீட் எழுத வேண்டும்.
பி.டி.எஸ்., என்ற பல் மருத்துவம், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கும், பி.வி.எஸ்சி., அண்ட் ஏ.எச்., என்ற மாடு, ஆடு, கோழி, நாய், பூனை போன்ற பிராணிகளுக்கான மருத்துவ படிப்புகளில் சேரவும் இந்த தேர்வு எழுத வேண்டும்.
இத்தனைப் பிரிவுகளுக்கான நீட் தேர்வில் தேர்வு பெறும் மாணவ - மாணவியர் எய்ம்ஸ், ஜிப்மர், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளிலும் சேர்ந்து படிக்கலாம்.
நீட் தேர்வில் வெற்றி பெற எடுக்க வேண்டிய மதிப்பெண் 720. தேர்வு எழுத, 3 மணி 20 நிமிட நேரம் அனுமதிக்கப்படும்.
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது, குறைந்தபட்ச வயது, 17 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சம் வயது உச்சவரம்பு இல்லை.
'நர்சிங், பார்மசி, பிசியோதெரபி, பயோமெடிக்கல்' போன்றவை, நீட் தேர்வு எழுத தேவையற்ற மருத்துவம் சார்ந்த சில முக்கிய படிப்புகள்.
எம்.பி.பி.எஸ்., - எம்.டி., - எம்.எஸ்., படித்து, பெரிய மருத்துவராகி விட்டால் மட்டும் போதுமா. நர்சிங் படித்த செவிலியர் இன்றி, டாக்டர் எழுதி தரும் மருந்துகளை வாங்கும் பார்மசி இன்றி, எலும்பு மருத்துவர்களின் ஆப்ரேஷனுக்குப் பின், இந்த பிசியோ தெரபிகளின் உதவி இன்றி, நோயாளிகள் குணமாவரா... குணப்படுத்தத்தான் முடியுமா...
ஒரு கட்டடம் கட்ட இன்ஜினியர் இருந்தாலும், மேஸ்திரி, சித்தாள் தேவை எவ்வளவு முக்கியமோ அப்படித்தான்.
நீட் எழுதி தேர்வு பெற்று, மருத்துவக் கல்லுாரியில் ஐந்தாண்டுகள் படித்து, அதற்கு மேல், எம்.எஸ்., - எம்.டி., என பட்டமும், பெயரும் பெற்றாலும், நீட் தேர்வு எழுதாமல், நர்சிங், பார்மசி, பிசியோதெரபி, பாராமெடிக்கல் படித்தோர் உதவி இன்றி, எந்த மருத்துவரும், மருத்துவமனைகளும் இயங்க முடியாது. இவை ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை; பின்னிப் பிணைந்தவை.
அப்பனே திருஞானசம்பந்தா... நீட் தேர்வு ஒன்று தான் உலகமா... ஒருமுறை தேறாது போனால் மீண்டும் நன்றாக படித்து மறுமுறை எழுதி தேர்வடைய முடியும். ஆனால், நீட் தேர்வை எமனாக நினைத்து உயிரை மாய்த்து கொள்ளும் முட்டாள் தனத்தை என்ன சொல்வது... ஒருமுறை தவறினால் மறுமுறை தேர்வு எழுத முடியும். ஒருமுறை உயிர் போனால் மறுமுறை வருமா...
இந்த தெளிவும், தன்னம்பிக்கையும் இல்லாதோர், நோயாளிகளுக்கு தெளிவும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் மருத்துவர்களாகவா இருப்பர்.
நீயே யோசித்து பார் தம்பி... நீட் தேர்வுக்கு பயந்து உயிரை மாய்த்து கொள்வோரின் மடத்தனமும், முட்டாள்தனமும் பிடிபடும்.
அன்புடன், இந்துமதி.
