PUBLISHED ON : செப் 19, 2026

அன்பு ஆன்ட்டி,
நான், வைபவ் சூரியவன்ஷி ஆகணும். அதுக்கு என்ன செய்யணும். எனக்கும் அதே, 16 வயது தான்.
இப்படிக்கு, ராகுல்.
ந ல்ல கேள்வி ராகுல். இந்த பெயரை வைத்துக் கொண்டு, சூரியவன்ஷி ஆகணும்... அதுக்கு என்ன செய்யணும்ன்னு கேள்வி கேட்டுள்ளாய்.
அதுக்கு சுலபமான வழி உள்ளது. ராகுல் என்ற உன் பெயரை, வைபவ் சூர்யவன்ஷின்னு மாற்றி, 'கெசட்டில்' பதிவு செய்துவிடு. மறு நிமிடமே நீ, சூரியவன்ஷி ஆகிவிடுவாய். அதே, 16 வயது தான் என்கிறாய். வயசு ஒன்று தான் தகுதி என, நினைக்கிறாயா தம்பி.
வைபவ் சூரியவன்ஷி, கிரிக்கெட்டில் நுழைந்து, பேரும், புகழும் பெற ஆரம்பித்தபோது, அந்த பிள்ளையின் வயது, 14. வைபவ் சூரியவன்ஷி எல்லாம், அதிசயக் குழந்தைகள்; பூர்வ ஜென்ம தொடர்ச்சி.
நீ மகாபாரதத்தில் அபிமன்யு பற்றி கேள்விப்பட்டிருக்கிறாய் இல்லையா! அர்ஜுனனின் மகன். சுபத்திரா, அர்ஜுனனின் மனைவி; கிருஷ்ணனின் தங்கை. போரில் வகுக்கப்படும் சக்கரவியூகத்தை உடைத்து, உள்ளே நுழைகிற வித்தையை, அர்ஜுனன் தன் மனைவிக்கு கூறி கொண்டிருந்த போது, சுபத்திராவின் வயிற்றில் குழந்தையாக இருந்த அபிமன்யு, வயிற்றினுள்ளிருந்து அதை கேட்டு கற்று, குருஷேத்திரப் போரில், சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே நுழைந்து, தன்னந்தனி பாலகனாக நின்று மாவீரனாக போரிட்டார்.
அந்த அபிமன்யு போல, வைபவ் சூர்யவன்ஷியும், தாயின் வயிற்றில் இருந்த போதே கிரிக்கெட் விளையாட்டை கற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும்.அவரது பெற்றோர் அல்லது வீட்டிலிருந்த யாரோ, கிரிக்கெட் மோகம் கொண்டவராக இருந்திருக்க வேண்டும். வைபவ் சூர்யவன்ஷியின் மரபணுவில், கிரிக்கெட் கலந்திருக்க வேண்டும்.
அது மட்டும் காரணமில்லை ராகுல்.
அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தகுதியையும், திறமையையும் வளர்த்த விதம் எல்லாம் சேர்ந்ததே இந்த வெற்றிக்கும், புகழுக்கும் காரணமாக அமைந்துள்ளது. அர்ப்பணிப்பு என்றால், சாதாரண அர்ப்பணிப்பல்ல மகனே... எதை நீ குறிக்கோளாக சொல்கிறாயோ, அதுவாகவே மாறி விடுகிற அர்ப்பணிப்பு.
காந்திஜியின் அர்ப்பணிப்பு, தேசத்தின் மீது இருந்தது; எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அர்ப்பணிப்பு, கர்நாடக சங்கீதத்தின் மீது இருந்தது; குமாரி கமலாவின் அர்ப்பணிப்பு, நாட்டியத்தின் மீது இருந்தது; சிவாஜிகணேசனின் அர்ப்பணிப்பு, நடிப்பின் மீது இருந்தது.
வைபவ் சூர்யவன்ஷியின் அர்ப்பணிப்பு, கிரிக்கெட் மீது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இவர்களெல்லாம் உலகம் தழுவிய பாராட்டைப் பெற்றிருக்க முடியாது. நீயும் அதுபோல் உன்னை கிரிக்கெட்டிற்கு அர்ப்பணி. உன் பேச்சு, மூச்சு எல்லாம் கிரிக்கெட்டாக மாறட்டும்.
தன்னம்பிக்கையோடு இடைவிடாமல் பாடு படு! பிறகு சூரியவன்ஷி என்ன... சோபர்ஸ் மாதிரி ஆறு பந்துகளுக்கும், ஆறு சிக்சர்கள் அடிக்கலாம். கிரிக்கெட் பந்து, மண்டையை பதம் பார்த்தாலும், கிரிக்கெட் சரித்திரத்தில் முதலிடம் பெற்ற மாதிரி, நீயும் இடம் பெறுவாய்!
அன்புடன், இந்துமதி.
