PUBLISHED ON : அக் 03, 2026

அன்புள்ள இந்துமதி ஆன்ட்டி,
நான், 10ம் வகுப்பு மாணவன். என் பாட்டியை எனக்கு மிகவும் பிடிக்கும். ரொம்ப அன்பானவர்; பொறுமைசாலி. தாத்தா இறந்த போது, பாட்டிக்கு, 28 வயதாம். சம்பிரதாயப்படி, அந்த வயதில் பாட்டியின் தலையை மொட்டை அடித்து, நார்மடிப் புடவை கட்டி, தலையை அப்புடவையின் தலைப்பால், முக்காடு போட்டு விட்டனராம். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், பாட்டியை நான் காணும் கோலம் இது தான்.
எதிர்பாராத விதமாக தாத்தா, மாரடைப்பால் இறந்து போனதும், அப்பாவுக்கு பின் பிறந்த இரு பெண் குழந்தைகளோடு பாட்டி, சென்னை, கிருஷ்ணப்ப நாயக்கர் அக்ராஹாரத்தில் நாதியற்று தனித்து விடப்பட்டிருக்கிறார்.
நாலு வீடுகளில் சமையல் செய்து, திருமணம், வளைகாப்பு, சீமந்தம் என, விசேஷங்களுக்கு சமைக்கும் கிட்டாவய்யர் குழுவில் ஒருவராக சேர்ந்துள்ளார்.
மீதமுள்ள நேரத்தில் வீட்டிலேயே அப்பளம் செய்து விற்ற வருமானத்தில், அப்பாவை அந்தக் காலத்திலேயே பி.காம்., படிக்க வைத்துள்ளார். தான் சமைக்கப் போகும் பெரிய இடத்தில் சிபாரிசு பிடித்து, அப்பாவை வங்கி ஒன்றில் வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறார்.
தன், இரு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்த பின், அப்பாவுக்கும் சற்று பணக்கார பெண்ணாக பார்த்து, திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
சற்று வசதியான இடத்திலிருந்து வந்த காரணத்தாலும், பாட்டி சமையல் வேலை செய்தவர் என்பதாலும், ஆரம்பத்திலிருந்தே பாட்டியை மரியாதை குறைவாக நடத்தியிருக்கிறார், அம்மா.
மேலும், பாட்டி, அம்மாவுக்கு வேண்டாத சுமையானார். அப்பாவின் எதிரிலேயே பாட்டியை கண்டபடி திட்டுவார், என் அம்மா.
தகாத வார்த்தை எல்லாம் சொல்வார். 'நீ, வா, போ' என்று ஒருமையில் தான் பேசுவார்.
பாட்டி, அழுதால், 'அவ குணம் தான் தெரியுமேம்மா... அதை ஏன் பெரிசா எடுத்துக்கற... நீ பெரியவ. கொஞ்சம் அனுசரிச்சு பொறுமையா போயேம்மா...' என்பார் அப்பா. அதன்பின் பாட்டி, எதுவுமே சொல்வதில்லை.
பாட்டி, பாவம் ஆன்ட்டி. அப்பா ஏன் அம்மாவை கண்டிக்க மாட்டேன் என்கிறார்.
இப்படிக்கு,
- வேத நாராயணன்.
அன்பு வேத நாராயணன்,
உனக்கு பெயர் வைத்தவர், பாராட்டுக்கு உரியவர். 10ம் வகுப்பு படிக்கிறாய் என்றால், உனக்கு, 15 வயதிற்குள் தான் இருக்கும்; வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகள் அறியாத கள்ளம்கபடமற்ற பருவம்.
கள்ளம் கபடமற்றோரிடம் தான் அன்பு, பாசம், ஈவு, இரக்கம் எல்லாம் குடி கொண்டிருக்கும். வயது ஏற, ஏற இவை அனைத்தும் மாறும். உள்ளத்தில் கள்ளத்தனம் புகுந்து, சுயநலம் மேலோங்கும்.
அதுபோன்ற சுயநலம் மேலோங்கிய காரணத்தால் தான், உன் அப்பா, உன் பாட்டியிடம் அப்படி நடந்து கொள்கிறார். இனி, பாட்டியால் அவருக்கு உபயோகமில்லை. பாட்டி செய்வதை அம்மா செய்யலாம். ஆனால், அம்மா செய்வதை எல்லாம், பாட்டியால் செய்ய முடியாது.
இந்த மகா சூத்திரம் தெரிந்திருக்கும் காரணத்தால் தான், பாட்டியை விட்டுக் கொடுத்துப் போக சொல்கிறார், அப்பா. அதுமட்டுமின்றி, உன் அப்பாவுக்கு அம்மாவிடம் பயம். அறைக்குள் அப்பாவுக்கும், செம டோசும், அடியும் விழும் போல.
தம்பி... பெரும்பாலான வீடுகளில் இதுதான் நடக்கிறது. முக்கால்வாசி வீட்டு அப்பாக்கள், மனைவிக்கு அஞ்சியவர்கள். மனைவியின் தேவையை உணர்ந்தவர்கள். பெற்ற தாய், தந்தையால் இனி பயனில்லை என்பதை தெரிந்து கொண்டிருப்பவர்கள். தோலுரித்து பழத்தை சாப்பிட்ட பின், தோலை வைத்துக் கொண்டிருக்கவா செய்கிறோம்?
தோலை சிலர் துாக்கி போடுவதற்கு பதிலாக, வீட்டின் மூலையிலும், முதியோர் இல்லங்களிலும் போட்டு விடுகின்றனர்.
தங்களுக்கும் வயதாகும், தாங்களும் பாட்டி, தாத்தா ஆவோம் என்பது தெரிந்தாலும் உணராதவர்கள்.
ஆனால், காலமும், கடவுளும் சும்மா இருக்கப்போவதில்லை. வினைப் பயனை அனுபவிக்கத்தான் வேண்டும். கர்மாவை அனுபவித்து கழிக்காமல் குறைக்கவோ, நீட்டவோ யாராலும் முடியாது. யாரிடமும் அந்த அதிகாரம் கொடுக்கப்படவில்லை. யாரும் அந்த அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
நீ பெரியவனான பின், உன் கண்ணால் நீயே இதை காண்பாய். நீயே புரிந்து கொள்வாய் பார்.
ஆனால், நீ ஒரு போதும், உன் அப்பா போல்ஆகி விடாதே. அப்பாவான பின்பும், பெற்ற அம்மா, அப்பாவை மறக்காதே... அப்போது, அந்த வயதில் அவர்களுக்கு தேவையானதெல்லாம் பசிக்கு சோறும், மனதிற்கு இதமான அன்பான வார்த்தைகளும் தான்!
இப்படிக்கு,
இந்துமதி.
