PUBLISHED ON : அக் 31, 2026

அன்பு ஆன்ட்டி...
என் பெற்றோர் பணிபுரிகின்றனர். எனக்கு எட்டு வயசு; தங்கச்சி பாப்பாவுக்கு ரெண்டு வயசு; பெற்றோர் இருவரும் இருசக்கர வாகனத்துல என்னை ஸ்கூல்ல விட்டுட்டு தங்கச்சி பாப்பாவை, 'க்ரஷ்ல' ஒப்படைச்சுட்டு வேலைக்கு போவாங்க. சாயந்திரம் நான் வீட்டுக்கு வந்திடுவேன். அவங்க தங்கச்சிப் பாப்பாவை துாக்கிட்டு வீட்டுக்கு வருவாங்க. 7:00 மணி ஆகிவிடும்.
ஆனால், இப்போல்லாம் தங்கச்சியை நினைச்சா பயமா இருக்கு. க்ரஷ்ல குழந்தைங்க அழுதா, வாஷிங் மெஷின் உள்ளே போடுறாங்களாம். சேட்டை செய்ற குழந்தைங்களை பாத்ரூம்ல வெச்சு, 'டியூப்' வழியா வாய்ல தண்ணீரை பீச்சி அடிக்கிறாங்களாம். இதையெல்லாம், 'டிவி'யிலும், செய்தித்தாள்களிலும் பார்த்து பயம் வருது. தங்கச்சிப் பாப்பாவை பத்திரமா, வேறு எந்த இடத்தில் விடலாம் ஆன்ட்டி...
இப்படிக்கு,
ரமணன்.
அன்பு ரமணா...
பெங்களூரில் நடந்ததாக செய்தித்தாள்களிலும், மீடியாக்களிலும் வந்ததை நீ குறிப்பிடுகிறாய் என்று நினைக்கிறேன்.
பூகம்பம் ஒரு இடத்தில் வந்தால் எல்லா இடங்களிலுமா வருகிறது. ஒரு மாநிலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதென்றால் அதே வெள்ளம் எல்லா மாநிலங்களிலுமா பெருக்கெடுக்கிறது.
இல்லை அல்லவா...
அதுபோல் தான் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. மனிதநேயமும், பொறுமையும், அன்பும் இல்லாதோர் முதியோர் இல்லங்களோ, குழந்தை காப்பகங்களோ நடத்தக் கூடாது.
இவை இலவச சேவை நிலையங்கள் அல்ல. குழந்தைகளைப் பார்த்து கொள்ளவும், முதியோரை கவனிக்கவும் கட்டணம் வசூலிக்கின்றனர்.
இலவச காப்பகங்கள் நடத்துவோர் கருணையாலும், பரந்த அன்பாலும் நடத்துகின்றனர் என்கிற போது, கட்டணம் வசூலிக்கும் இவர்கள் இன்னும் அன்பாகவும், கருணையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அந்த குழந்தைகளும், முதியோரும் தான் தங்களின் வாழ்வாதாரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது...
எதற்குமே மறுபக்கம் உண்டல்லவா... நம் வீட்டிலேயே, துறு துறு என்றிருக்கும் குழந்தைகளையும் சோபா மீது ஏறி கீழே குதித்து பொருட்களை தள்ளி விட்டு அமர்க்களம் பண்ணும், 'ஹைப்பர் ஆக்டிவ்' குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களே, சில நேரம் பொறுமை இழந்து முதுகில் ஒன்று போடுவது உண்டு.
ஒரு குழந்தையையே சமாளிக்க முடியாத போது, 20 குழந்தைகளை உடைய காப்பகமோ, பால்வாடி, அங்கன்வாடி பணியாளர்களோ சில சமயம் பொறுமையிழந்து தான் போவர்.
எப்போதாவது மிக அபூர்வமாக இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது உண்டு. இதுபோன்ற வேலைகளுக்கு இளைஞர்களையோ, இளம் பெண்களையோ வைக்கவே கூடாது.
குழந்தைகளை பெற்று வளர்த்தவர்களுக்கு தான், குழந்தைகளின் அருமை தெரியும். அப்படிப்பட்டவர்களே இப்பணிகளுக்கு ஏற்றவர்கள். அதனால், குழந்தைகளையோ, முதியவர்களையோ காப்பகங்களில் விடும் போது எப்படிப்பட்ட பணியாளர்கள் அங்கு இருக்கின்றனர் என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
காலையில் விட்டு மாலையில் அழைத்து வருவதை வழக்கமாக கொள்ளாமல், இடையிடையே சென்று பார்த்து கவனிக்க வேண்டும். அதனால், ரமணா... எங்கோ நடந்த ஒரு விஷயத்தை நினைத்து, நீயும், உன் பெற்றோரும் கவலையும், பயமும் கொள்ள வேண்டாம்.
மேற்கூறிய விஷயங்களை மனதில் கொண்டு, உன் பெற்றோரை அலுவலகத்தில், 'பர்மிஷன்' போட்டு அடிக்கடி சென்று தங்கச்சி பாப்பாவைப் பார்த்து வர சொல்லு!
எப்போது வேண்டுமானாலும் பெற்றோர் வருவர், கண்காணிப்பர் என்ற பயம் அவர்களுக்கும் இருக்கும்.
அன்புடன்,
இந்துமதி.
