தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : நவ 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஆன்ட்டி,

நான் ஏழை வீட்டு சிறுவன். அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறேன். இரண்டு தங்கைகள். அம்மா வீட்டு வேலை செய்கிறார். அப்பா இரும்பு ஜன்னல், கேட் செய்யும் கடையில் வெல்டராக இருக்கிறார். சென்னையில் கூவம் கரை ஓரத்தில் சாதாரண ஷீட் ஓடு போட்டது தான் எங்கள் வீடு.

எனக்கு கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம். அர்ஜென்டினா நாட்டு கால்பந்து வீரர் மெஸ்ஸி, ஸ்பெயின் நாட்டு வீரர் யாமின் யமால் போல் கால்பந்து விளையாட்டில் பேரும், புகழும் பெற வேண்டும் என விரும்புகிறேன். இதன் வழியாக பணம் சம்பாதித்து, பெற்றோர், தங்கைகளை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்கிற ஆசை மனதில் இருக்கிறது. அதற்கு எப்படி என்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அறிவுரை தாருங்கள்.

– இப்படிக்கு,

முருகவேல்.

அப்பா முருகவேல்...

உன்னுடன், தமிழ் கடவுள் முருகரும், அவரது ஆயுதமான வேலும் இருக்கும் போது என்ன கவலை. எத்தனைத் தடைகள் வந்தாலும், உன்னால் உடைத்தெறிய முடியும். பிரபல கால்பந்தாட்ட வீரர்கள் மெஸ்ஸி, யாமின் யமால் போல் புகழ் பெற வேண்டுமானால், கடுமையாக உழைக்க நீ முன் வர வேண்டும். உன் பேச்சும், மூச்சும் கால்பந்தாட்டமாகவே இருக்க வேண்டும்.

படிப்பை புறம் தள்ளும் தைரியம் வேண்டும். பெயரும், புகழும் பெற்ற முக்கால்வாசி விளையாட்டு வீரர்கள், மெத்தப்படித்தவர்கள் அல்ல; அவர்களுக்கு படிக்க நேரம் இருக்காது.

ஒரு நாளின் அதிகாலை எழுந்து, உடலை தகுதி பெற செய்ய, ‘வார்ம் அப்’ முடிக்க வேண்டும். பின், மைதானத்தில் ஓட வேண்டும். ஓட்டம் என்றால் சாதாரணமானது இல்லை. பல கி.மீ., கூட இருக்கலாம். பின், உடற்பயிற்சி செய்ய வேண்டும். தகுந்த பயிற்சியாளரை தேர்ந்தெடுத்து ‘கோச்சிங்’ சென்று அங்கேயும் பளு துாக்குதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

அதை முடித்து வீடு திரும்பினால் களைத்து போவாய். மீண்டும் மாலையில், உடற்பயிற்சி, கோச்சிங் பிராக்டீஸ்... இவை தான் தினமும். இதனால் தான் விளையாட்டு துறையை தேர்ந்தெடுப்போரால் படிப்பை முழுமையாக தொடர முடிவதில்லை.

நாள் முழுதும் உழைக்க தயாராக வேண்டும். இதற்கு நீ மட்டும் முயன்றால் போதாது. உன் பெற்றோரது ஒத்துழைப்பும் தேவை.

கால்பந்தாட்ட வீரர் யாமின் யமால் வசதியான குடும்பத்தில் பிறந்தவரல்ல; உன் தந்தையைப் போலவே யமாலின் தந்தையும், பழைய இரும்பு பொருட்களை சேகரிக்கும் வேலை தான் செய்தார். தாய், உணவகத்தில் பணிபுரிந்தார். அவர்களது சொற்ப சம்பாத்தியம் தான், குடும்ப வறுமையையும், பசியையும் தணித்தது.

ஆனாலும், வருமானத்தில் பெரும் பகுதியை யமாலின் கால்பந்தாட்டக் கனவிற்கு ஒதுக்கி, முழு ஆதரவையும் தந்தனர் பெற்றோர். யமால் ஆசைப்பட்டபடி பெரும் கால்பந்தாட்ட வீரராக புகழ் பெற வேண்டுமென பாடுபட்டனர் அவரது குடும்பத்தினர். அவர்களின் உழைப்பு வீணாகவில்லை.

யமாலின் பாட்டியும் அதற்காகவே பணி செய்தார். ஆறு வயதில் லாமேஸியா அகாடமியில் யமாலை சேர்த்தது, அவரது பாட்டி தான். யமாலின் கடின உழைப்பு, 15 வயதில் பார்சிலோனாவுக்காக விளையாடிய ஆட்டம் வியக்க வைத்தது.

கோபா ட்ரோபியில் இருமுறை வென்றுள்ளார். தன், 18 வயதில் உலகின் உச்ச விளையாட்டு வீரர்களுடன் போட்டி போட்டு கால்பந்தாட்ட ஹீரோவாக மிளிர்ந்துள்ளார். அர்ஜென்டினா நாட்டு வீரரான மெஸ்ஸியை, 2026 உலக கோப்பையில், ஸ்பெயின் அணி வெற்றி கொள்ள, யாமின் யமால் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

எத்தனை வெற்றிகள் பெற்றாலும், பேரும், புகழும் பெற்றாலும், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அனைத்திற்கும் அடிப்படை அன்பு, பாசமுமாக இருக்க வேண்டும். புகழின் உச்சியில் நின்றாலும், அன்பையும், பாசத்தையும் மறக்க கூடாது. இந்த அடிப்படை தத்துவத்தை, யமால் நெஞ்சில் பதிய வைத்தது அவரது பாட்டி.

இதுபோன்ற நல்ல விஷயங்களை கற்று தர வீட்டில் பெரியோர் இருக்க வேண்டும். மரியாதையுடன் பேச, அன்பு, பாசத்தை பொழிய பெற்றோர், பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

நற்குணங்கள் மீதும், நல்லொழுக்கம் மீதும் கட்டமைக்கப்படும் வெற்றியே நிலைத்திருக்கும். நீண்ட புகழையும் தேடித்தரும்.

நீ எங்கிருந்து வருகிறாய், உன் பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர் என்பதெல்லாம் முக்கியமல்ல... எங்கு போக வேண்டும் என்பதை உள்ளத்தில் ஆணித்தரமாக நிறுத்தி, இலக்கை அடைய எப்படி உழைக்கிறாய் என்பதே முக்கியம். இதை உணர்ந்து செயல்பட்டால் நீ இன்னொரு மெஸ்ஸியாக, யாமின் யமால் போல் புகழ் பெற்ற விளையாட்டு வீரனாவது நிச்சயம்.

– அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us