தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : நவ 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஆன்ட்டி...

என் அப்பாவுக்கு வயது 75; அம்மாவுக்கு 70. குடும்பத்தில் நாங்கள் இரண்டு பெண்கள். எனக்கு வயது 46; என் தங்கைக்கு 40 வயதாகிறது. இரண்டு பேருக்கும் கல்யாணமாகவில்லை. பட்டப்படிப்பு முடித்துள்ளோம். வீட்டில் என் அப்பா உட்பட மூன்று பேரும் அம்மா பேச்சை தான் கேட்க வேண்டும். அம்மா சொல்படி தான் நடக்க வேண்டும்.

அப்பா, அம்மாவுக்கு பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணம் தான். அப்பாவின் அப்பாவும், அம்மாவின் அப்பாவும் பிசினஸ் பார்ட்னர்கள். ஒன்றாக பழகி, நன்கு தெரிந்த குடும்பங்கள் தான். கல்யாணத்திற்குப் பின் அப்பாவின் அம்மா, அதாவது எங்கள் பாட்டி, அம்மாவை சரியாக நடத்தவில்லையாம். சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டார்களாம்.

அதனால், 'நான் தாயற்ற பெண் என்பது தெரிந்தும் இப்படி நடத்தினார்களே உங்கம்மா...' என்று இன்றும் அப்பாவோடு சண்டை போடுகிறார் அம்மா. பாட்டி மறைந்து பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால், இன்னும் அம்மாவுக்கு கோபமும், வெறுப்பும் குறையவில்லை. அனைத்தையும் எங்கள் மீது காட்டுகிறார்.

அம்மா, ஏன் இப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை.

நாங்கள் தனி வீட்டில் வசிக்கிறோம். அப்பாவை அவர் குடும்பத்தில் யாருடனும் பேச விடுவதில்லை அம்மா. உடன் பிறப்புகளின் நல்லது கெட்டதுக்கு போக அனுமதிப்பதில்லை.

எங்களால் தான் அம்மாவை எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை. அம்மா என்கிற ஸ்தானமும், வயதில் பெரியவர் என்பதும் தடுக்கிறது.

ஆனால், அப்பாவுக்கென்ன... அவரது மனைவி தானே... கேட்கலாமல்லவா... அவர் ஏன் இப்படி இருக்கிறார். அப்பாவுக்கு நன்கு உரைக்கும்படி சொல்லுங்க ஆன்ட்டி...

- இப்படிக்கு,

பெயர் குறிப்பிட விரும்பாத பெண்.



அன்பு மகளே...

நீயே குறிப்பிட்டு எழுதியிருந்த மாதிரி உன் தாய் உங்களை சொர்க்கத்தில் வைத்திருக்கவில்லை தான். உன் தந்தை உட்பட உன்னையும், உன் தங்கையையும் நடத்துகிற முறை சரியில்லை என்பதோடு, மிகவும் தவறான அணுகுமுறை எனவும் சொல்ல வேண்டியிருக்கிறது.

மொபைல் போனில் சினேகிதியருடன் பேச கூட அனுமதியில்லை என்பது எப்பேர்ப்பட்ட தண்டனை. உன் அப்பாவும் அதற்கு கட்டுப்படுவதிலிருந்து, உன் தாயை கேள்வி கேட்கும் தைரியமில்லை என்பது தெரிகிறது. நீயும், உன் தங்கையும் திருமணமின்றி வீட்டை விட்டு வெளியில் வராமல் வேலைகளை செய்து கொண்டிருப்பது மகா கொடுமை!

இதேமாதிரி என் பதின் வயதில், என் தாய் வீட்டிற்கு பக்கத்தில் சாந்தி என்றொரு பெண், அவரது தாயாரால் வீட்டு சிறை வைக்கப்பட்டிருந்தார். சரியாக சாப்பாடு கூட கிடைக்காத அப்பெண்ணிற்கு, வேலியருகில் சென்று, இட்லி, தோசை, அடை, தின்பண்டங்கள் என்று கொடுத்து உதவுவோம்.

அப்பெண்ணின் தந்தை, ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். பர்மாவில் யுத்தத்தின் போது தங்கள் வீடு, கார் என, அனைத்தும் கண்ணெதிரில் சாம்பலானதை கண்டு தரைவழியாக நடந்தும், ஓடியும் தப்பித்து வந்தவர்கள். அந்த தாயின் மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது என்றே கூறினர்.

சாந்தியின் தம்பி இந்திய விமானப்படையில் உயர் அதிகாரி. தங்கை கல்லுாரி விரிவுரையாளர். காதலித்து திருமணம் செய்து இருவரும் வீட்டை விட்டு சென்று விட, கடைசி வரை தாயுடன் கஷ்டப்பட்டே அப்பெண் இறந்தார்.

அந்த தாய்க்காவது மனநிலை சரியில்லை. உங்கள் தாய்க்கு என்ன? சாந்தியின் சகோதரரும், சகோதரியும் செய்தது மாதிரி நீயும், உன் தங்கையும் போக கூடாதா... நீ ஆங்கில இலக்கியப் பட்டதாரி. உன் தங்கை மனநலம் படித்த பட்டதாரி. படித்த பெண்கள் நியாயமானவற்றிற்கு போராட வேண்டாமா...

'ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்கள்' என்றான் மகாகவி பாரதி.

'அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டும்...' என்று இடித்துரைத்தான்.

நீ மகாகவி பாரதி படைப்புகளை படித்திருக்க வேண்டும். இல்லையென்றால் பாரதி கவிதை புத்தகத்தை வாங்கி பெண் விடுதலை பற்றிய பாடல்களை படி!

உன் தந்தை பாவம். தாய்க்கு கட்டுப்பட்டு காலத்தை கடத்தி விட்டவர்.

இந்த 75 வயதில் அவருக்கு புத்தி சொல்வதை விட, உனக்கு தான் சொல்வேன். உன் தாய்க்கு பணிந்து, குனிந்து உன் தந்தைக்கு கூன் விழுந்து விட்டது. அதை நிமிர்த்துவதற்கு பதிலாக நீ நிமிர்ந்து நில்!

உன் தாயிடம், 'அடிமை வாழ்க்கை இனிமேல் வாழ முடியாது' என்று சொல். திருமணம் செய்து வைக்க கூறு! குடும்ப வாழ்க்கை அவசியம் என தெரியப்படுத்து. இரு பெண்களும் தனித்து வாழ முடியாது என்பதை உணர்த்து!

வீறு கொண்டு எழ வேண்டியது நீயும், உன் தங்கையும் தானே தவிர, உன் அப்பா அல்ல... அவர்கள் வாழ்ந்து முடித்தவர்கள்; இரு பெண்களைப் பெற்றவர்கள். நீங்கள் வாழ வேண்டியவர்கள்... மண வாழ்க்கை ஒரு பெண்ணிற்கு மிகவும் முக்கியம். இதை யாராலும் மறுக்க முடியாது. நீயும் உணர்ந்து, உன் தாய்க்கும் உணர்த்த வேண்டியது உன் கடமை பெண்ணே!

- இப்படிக்கு, இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us