தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : நவ 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஆன்ட்டி...

நான் இருப்பது அடுக்குமாடி கட்டடம். எங்கள் குடியிருப்பில் வசிப்போரில் பலக் குடும்பத்தை சேர்ந்தோர் ஒரே பள்ளியில் தான் படிக்கிறோம். ஒன்றாக தான் ஆட்டோவில் போகிறோம். பக்கத்து ப்ளாட்டில் என் வகுப்பு தோழி வசிக்கிறாள். அதனால், அடிக்கடி அங்கு போவேன்.

தோழியின் அம்மா என் எதிரிலேயே தோழிக்கு சாப்பிட நொறுக்கு தீனி கொடுப்பார். ஆனால், எனக்கு கொடுக்க மாட்டார். என் தோழி, தனக்கு கொடுக்கப்பட்டதில் கொஞ்சம் எனக்கு கொடுத்தால் கூட தடுத்து, 'எல்லாம் அவ சாப்பிட்டு வந்திருப்பா... நீ சாப்பிடு...' என்பார்.

அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்மணியோடு, அவரது, 10 வயது மகளும் உடன் வருவாள். எங்களோடு பேசிப் பழகுவாள். அது கூட அந்தம்மாவுக்குப் பிடிக்காது.

'அவுங்க கூட உனக்கென்ன பேச்சு... போய் உங்கம்மா கூட வேலை செய்...' என்பார். அச்சிறுமியின் முகம் வாடி விடும்.

ஒருமுறை, வேலை செய்யும் பெண்ணுக்கு உடம்பு சரியில்லாமல் போயிற்று. மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். பத்து நாட்கள், 'லீவு' கேட்டார் பணிபுரியும் பெண்.

'பத்து நாளெல்லாம் முடியாது. உன் பொண்ணை பள்ளிக்கு, 'லீவு' போட்டு வந்து வேலை செய்ய சொல்...' என்றார் தோழியின் அம்மா. பாவம் அந்த சிறுமி வந்து வேலை செய்தாள். இப்படிக் கூட நேயமற்று ஒரு பெண் இருப்பாரா ஆன்ட்டி... இவர்களை எல்லாம் யார் திருத்துவது...

- இப்படிக்கு,

ஷாலினி.



அன்பு ஷாலினி...

இதை விட மோசமானவர்களும், கொடுமைக்காரர்களும் இருக்கின்றனர்; அன்பு, பாசம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. தன்னுயிர் போல் மன்னுயிரை நினைக்க அவர்களால் முடியாது.

பணிபுரிபவரின் மகள், சரிசமமாக உன்னோடு அமர்வதையே பொறுக்க முடியாததை என்னவென்று சொல்வது... அச்சிறுமியும் படிக்கிற பெண் தானே, பள்ளிக்கு, 'லீவு' போட்டு, 10 நாட்கள் வீட்டு வேலை செய்யச் சொல்லலாமா... அவளின் படிப்பு கெடாதா... வருகை பதிவேடு என்னவாகும்...

இதையெல்லாம் யோசிக்கிற மென்மையான மனது இருந்திருக்குமானால் அப்படி சொல்லியிருக்கவே மாட்டார்.

தாய்மை என்பது எல்லாரிடமும் இருக்காது. 'தங்கச்சி பிள்ளை தன் பிள்ளையானால் தவத்திற்குப் போவானேன்' என்றொரு சொலவடை உண்டு. குழந்தையற்ற மூத்த சகோதரி, குழந்தை பெற்ற தன் தங்கையின் குழந்தையை தன் குழந்தையாக நினைப்பாளேயானால் பிள்ளை வரம் வேண்டி கோவில் கோவிலாக அலைய மாட்டாள் என்பது தான் அதன் பொருள்.

தோழிக்கு தின்பண்டம் கொடுத்து விட்டு பக்கத்திலிருக்கும் உனக்கு கொடுக்காததோடு, 'அவ சாப்பிட்டு வந்திருப்பா...' என்று சொல்வதை என்னவென்று எடுத்து கொள்வது. வாய் வரை தான் ருசி. தொண்டைக்கு கீழே போனால் எல்லாருக்கும் எல்லாம் ஒன்று தான். இது தெரியாமல் தங்களுக்கு மட்டும் என வாழ்வோரை திருத்தவே முடியாது.

என்னைப் பொறுத்தவரை அவர்கள் மனநோயாளிகளே...

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்...' என்று சொன்ன வள்ளலார் பிறந்த மண் இது!

' தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தை அழித்திடுவோம்...' என்று பாடிய மகாகவி பாரதி வாழ்ந்த பூமி இது!

இங்கு பிறந்தோர் இப்படியெல்லாம் இருக்கின்றனரே என்று வருத்தமாகத்தான் இருக்கிறது.

வீட்டில் வேலை செய்யும் பெண் நடமாடுகிற இடத்தில், தாங்கள் மட்டும் முறுக்கு, சிப்ஸ், பகோடா என்று சாப்பிடுபவர்களை நான் அறிவேன். என்னால் அப்படியெல்லாம் நடந்து கொள்ளவே முடியாது. பழங்களோ, இனிப்புகளோ, ஐஸ்க்ரீமோ, கேக்கோ என் தட்டில் விழுவதைப் போல் அவர்களின் தட்டிலும் விழுந்தால் தான் என்னால் சாப்பிட முடியும். என் மனம் நிறைவடையும்.

சிறு வயதிலிருந்து கொடுக்கும் பழக்கத்தையும், பகிர்ந்துண்ணுதலையும் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். பாரபட்சம் காட்டாத பெற்றோரிடம் தான் பாரபட்சமும் இருக்காது. பெற்றவர்களிடம் அன்பு இருந்தால் குழந்தைகளிடமும் வரும்.

இந்த கால குழந்தைகள், பெற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பவர்களாக தான் இருக்கின்றனர். 'தோழிக்கு தராவிட்டால் நானும் சாப்பிட மாட்டேன்' என்று தோழியால் மறுக்க முடியும். பணியாளர் பெண்ணை பள்ளிக்கு, 'லீவு' போட்டு விட்டு வந்து வேலை செய்ய சொல்வது கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு செய்கையும், சொல்லும், அன்பையும், பகிருதலையுமே உணர்த்த வேண்டும்.

- அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us