PUBLISHED ON : ஆக 08, 2026

விழுப்புரம் மாவட்டம், அனுமந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில், 1975ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எனக்கு, விளையாட்டில் ஆர்வம் அதிகமிருந்தது. விளையாட்டு ஆசிரியர் மாதவன், ஊக்குவிப்பால், கபடி குழுவில் பங்கேற்றேன். மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த, போட்டிகளில் எங்கள் அணி வெற்றிகளை குவிக்க காரணமாய் இருந்தேன்.
மாணவர் தலைவர் தேர்வில் என்னை முன்னிறுத்தி, வெற்றி பெற செய்தார், விளையாட்டு ஆசிரியர். பொதுநலப் பணிகளை திறம்பட செய்து, பாராட்டு பெற்றேன். ஆனால். படிப்பில் கவனம் செலுத்தாததால், பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தேன்.
சான்றிதழ் வாங்கியதும், விளையாட்டு ஆசிரியர் பாதங்களில் பணிந்தேன். என்னை தேற்றி, 'பாதுகாப்பு சார்ந்த பணி உனக்கு கிடைக்கும்...' என, நம்பிக்கையூட்டினார். பின், முயன்று காவல் துறையில் சேர்ந்தேன். பயிற்சி முடித்தவுடன், அந்த ஆசிரியரை வணங்கி கண்ணீர் விட்டேன். அப்போது, 'நான் சொன்னது உண்மை ஆகி விட்டது பார்த்தாயா...' என மகிழ்ந்து வாழ்த்தினார்.
தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் மற்றும் உளவுப் பிரிவுகளில் பணியாற்றினேன். உதவி ஆய்வாளராக உயர்ந்து ஓய்வு பெற்றேன். தற்போது என் வயது, 69. பள்ளியில் அறிவுரை கூறி வழிகாட்டிய, விளையாட்டு ஆசிரியர் மாதவனின் மாணவன் என கூறுவதில், பெருமை கொள்கிறேன்.
-- எஸ்.லிங்கேஸ்வரன், சென்னை.
