PUBLISHED ON : மே 30, 2026

திண்டுக்கல் மாவட்டம், திருமங்கலம், பி.கே.என்.மேல்நிலைப் பள்ளியில், 1983ல், 8ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார், சவுந்திரபாண்டியன். மாணவர்களிடம், 'அழகான கையெழுத்து, தவறான கருத்தைக் கூட மறைத்து விடும்...' என்று கூறி பயிற்சி அளித்தார். சுமாராக இருந்த என் கையெழுத்து அழகாக மாறியது.
பின், ஜம்புலியம்பட்டி, யெகோவா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், சேர்ந்தேன். ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அகஸ்டியன், ஆங்கில பாடம் எடுத்தார். வகுப்பில் அவர் சொல்ல, சொல்ல பாடங்களை கட்டுரை நோட்டில் எழுத வேண்டும்.
அன்று மாணவர்கள் எழுதியதை திடீரென சோதனையிட்டார். சாதாரண நோட்டில் எழுதியோரை திட்டினார். கடைசியாக என்னிடம் வந்தார். நான் நாட்குறிப்பு நோட்டு புத்தகத்தில் பாடத்தை எழுதி இருந்தேன். என் கையெழுத்து அழகாகவும், சரியாகவும் இருந்ததால் திட்டவில்லை.
கண்டிப்புடன்,'இனி கட்டுரை நோட்டில் தான் எழுத வேண்டும்...' என்று கூறிச் சென்றார்.
பின், அவர் இயற்றிய நாடகங்களை என் கையெழுத்தில் எழுத சொன்னார். நடிக்கவும் வைத்தார். பயிற்சி முடித்து, 1999ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.
எனக்கு 56 வயதாகிறது. மதுரை ம.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். மாணவர்களின் கையெழுத்தை சிறப்பாக மாற்றியமைப்பதில், அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இதற்கு வித்திட்ட என் வகுப்பாசிரியர் சவுந்திரபாண்டியனை முன்மாதிரியாக, மனதில் கொண்டுள்ளேன்.
- ரா.ரமேஷ், மதுரை.
தொடர்புக்கு: 97870 20561
