PUBLISHED ON : ஜூலை 18, 2026

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, துாய சவேரியார் கல்லுாரி பள்ளியில், 1969ல், 7ம் வகுப்பு படித்தபோது, தமிழாசிரியராக இருந்தார், கிரகோரி. மிகவும் கண்டிப்பானவர். அவரை பார்த்தவுடனே நடுக்கம் வந்து விடும். அச்சம் காரணமாக, 'மீசை கிரகோரி' என அவருக்கு பட்டப்பெயர் சூட்டியிருந்தோம்.
கையெழுத்து, வடிவமாக அமையாதோருக்கு, விரல்களுக்கு இடையே உருண்டை பென்சிலை வைத்து, நெருக்கி அழுத்தி, வலி உண்டாகும் வகையில் தண்டிப்பார். அதற்கு பயந்தே, வடிவமாக எழுத கற்றுக் கொண்டேன்.
தமிழ் பாடத்தை தனித்துவத்துடன் சொல்லித் தருவார். உலக நடப்பு, பொது அறிவு விபரங்களையும் எடுத்து கூறுவார். வகுப்பில் பாடம் நடத்தும்போது, யாராவது கொட்டாவி விட்டால், அவ்வளவு தான். கரும்பலகையில் எழுதும் சாக்பீசால், குறிபார்த்து முகத்தில் வீசி தண்டிப்பார் தமிழாசிரியர்.
செய்யுள்களை ராகம் தவறாமல் பாட சொல்லித் தந்தார். அதனால், மனப்பாட பகுதி எளிதாக மனதில் பதிந்தது. வித்தியாசமான கற்பித்தல் முறையால் இலக்கணத்தை புரிய வைத்தார். அது, பிழையின்றி மொழியை எழுதவும், படிக்கவும் உதவுகிறது. அவருக்கு பிடித்த தலைவரான அண்ணாதுரை இறந்த செய்தியறிந்து, வகுப்பறையிலே தேம்பி அழுததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.
தற்போது என் வயது, 70. வங்கியில் முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். வித்தியாசமான கற்பித்தல் முறையால் மொழி மீது பற்றுதல் ஏற்படுத்தி உயர்வுக்கு வழிகாட்டிய, தமிழாசிரியர் கிரகோரியை பணிந்து வாழ்கிறேன்.
- ஆ.நல்லமுத்து, கோவில்பட்டி.
தொடர்புக்கு: 97909 83937
