
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார், கந்தசாமி கவுண்டர் உயர்நிலைப் பள்ளியில், 1951ல், 6ம் வகுப்பு படித்தேன். அப்போது என் வயது, 11. கணக்கு எனக்கு சுத்தமாக வராது. என்னுடைய கணக்கு ஆசிரியர், கல்யாணசுந்தர அய்யர்.
சுத்த சிவப்பழமாக பள்ளிக்கு வருவார். கணக்கு கற்றுக் கொடுப்பதில், அவருக்கு நிகர் அவரே என்று சொல்லலாம். மாணவர்களிடம் கேள்வி கேட்டபடி, வகுப்பறை முழுவதும் சுற்றி வருவார். திடீரென ஒருவரை எழுப்பி, கேள்வி கேட்பார்.
ஒரு முறை, என்னை அவர் கேள்வி கேட்க, எனக்கு விடை தெரியாமல் முழித்தேன். அவர், என் தலையில் 'நங்'கென்று குட்டினார். அன்று முதல், வகுப்பறையில் இனி எந்த கேள்வி கேட்டாலும், குட்டு வாங்காமல் பதில் சொல்ல வேண்டும் என, வெறி ஏற்பட்டது.
அந்த வெறியுடன், கணக்கு படிக்க ஆரம்பித்தேன். கணக்கு விருப்பப் பாடமாக மாறியது. என் பள்ளி இறுதி ஆண்டில், சிறப்பு கணிதத்தை விருப்பப்பாடமாக எடுத்தேன். அதில், 95 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றேன்.
நான் 12ம் வகுப்பில் சேர்ந்த போது, கணக்கு ஆசிரியராக இருந்தவர், கே.சி.சோலைமுத்து. ஒருமுறை, வகுப்பறை கரும்பலகையில், ஒரு கணக்கை எழுதி, விடை காணும் படி மாணவர்களை பணித்தார். பெரும்பாலானோருக்கு விடை கண்டுபிடிக்க தெரியவில்லை. நான் எழுந்து, விடை கூறினேன்.
அவர் என்னை அழைத்து, கரும்பலகையில் விடையை எழுதும் படி கூறினார். அந்தக் கணக்கை, கரும்பலகையில் போட்டு காண்பித்தேன். அதை பார்த்து, அவர் ஆச்சரியமடைந்தார். 'உண்மையிலேயே, நீ கணக்கில் புலி தான்...' என்று புகழ்ந்தார். அந்த பெருமைக்கு, பள்ளி கணித ஆசிரியர் கல்யாணசுந்தர அய்யர் தான் காரணம்.
தற்போது, என் வயது, 85. மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அவ்வப்போது, நான் படித்த பள்ளியில் மாணவர்கள் இடையே பேசுவதற்கு, என்னை அழைப்பர். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், கணித ஆசிரியர் கல்யாண சுந்தர அய்யர் குறித்து பேசாமல் இருந்ததில்லை. அவர், இன்றும் என் நினைவில் வாழ்கிறார்.
- எஸ்.சம்பந்தம், சென்னை. தொடர்புக்கு: 94449 09779

