
ம துரை மாவட்டம், சோழவந்தான், அரசு சண்முகனார் மேல்நிலைப் பள்ளியில், 1964ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பில் 44 மாணவர்கள். செங்கோட்டை அருகே, தவணை என்ற கிராமத்தை சேர்ந்த சுரேந்திரன் என்பவர், எங்கள் வகுப்பு ஆசிரியராக இருந்தார். மிகவும் நல்லவர்; ஆங்கிலம் மற்றும் சரித்திரப் பாடங்கள் நடத்துவதில் வல்லவர்.
பள்ளி இறுதி ஆண்டு பிரிவுபசார விழா செலவிற்காக, ஒவ்வொரு மாணவரிடமும் மொத்தம் 85 ரூபாய் வசூலானது. அந்தப் பணத்தை ஒரு கவரில் போட்டு, வகுப்பறையில் இருந்த மர அலமாரியில் பத்திரப்படுத்தினோம்.
மறுநாள் கவரோடு, பணமும் காணாமல் போனது. வகுப்பாசிரியர் சுரேந்திரனிடம் முறையிட்டோம். வகுப்பறைக்கு ஒரே மாதிரியான கவர்களுடன் ஆசிரியர் வந்தார்.
'பணத்தை எடுத்தவர்கள் யாராக இருந்தாலும், எடுத்த பணத்தில் எவ்வளவு செலவழித்திருந்தாலும் பரவாயில்லை... நான் தரும் கவரில் மீதிப் பணத்தை வைத்து இந்த அட்டைப் பெட்டியில் போட்டு விடுங்கள்' என்று கூறினார்.
மாணவர்களிடம் கவர்களை கொடுத்த பின், பெட்டியை கரும்பலகையின் கீழ் வைத்து, மறுநாள் காலை சந்திப்பதாக கூறி சென்றார்.
மறுநாள் காலை, அட்டைப் பெட்டியை மேஜை மீது வைத்து, ஒவ்வொரு கவராகப் பிரிக்கலானார். ஒரு கவரில், 75 ரூபாய் இருந்தது. அப்போது ஆசிரியர், 'பணத்தை எடுத்துச் சென்ற மாணவன் மிகவும் நல்லவன். 10 ரூபாய் செலவழித்து விட்டு, 75 ரூபாயை கொடுத்து விட்டான். அவன் திருந்தி விட்டான். இனி, நன்கு படித்து, நல்ல பெயரெடுத்து சிறந்த பிரஜையாக வாழ்வான்' என்று கூறினார். பின், தன் பையிலிருந்து, 10 ரூபாய் எடுத்து, 85 ரூபாயை எங்களிடம் ஒப்படைத்தார்.
தற்போது என் வயது, 75. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். இன்றும் என் வகுப்பு ஆசிரியர் சுரேந்திரன் மற்றும் உடன் பயின்ற மாணவர்களையும் எண்ணும் போது, நெஞ்சம் பெருமித்தால் பூரிப்படைகிறது.
- கே.சங்கர நாராயணன், மதுரை. தொடர்புக்கு: 99442 42950

