PUBLISHED ON : செப் 27, 2025

திண்டுக்கல் மாவட்டம்,பழனி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 9ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார் கோபாலகிருஷ்ணன். மிகவும் கண்டிப்பானவர்; கணித பாடமும் கற்பிப்பார். கரும்பலகையில் குண்டுகுண்டாக எண்களை எழுதி புரியும்படி கற்றுக் கொடுப்பார்.
ஒரு நாள் மதிய உணவுக்கு பின், பள்ளி வளாக புளியமரத்தில் ஏறி, பழம் பறித்துக் கொண்டிருந்தோம். அங்கு வந்த வகுப்புத் தலைவன், 'மதியம் வகுப்பு துவங்கி வெகு நேரமாகிவிட்டது...' என கூறி அழைத்தான். வகுப்புக்கு சென்றதும் விசாரித்த ஆசிரியர், பிரம்பால் இரண்டு அடி தந்தார். அடிக்கும் சத்தம் தான் கேட்டதே தவிர வலி ஏதுமில்லை. அன்று முதல் வகுப்பு நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து பாடங்களை ஆர்வமாக கற்று முன்னேறினேன்.
எனக்கு, 69 வயதாகிறது; அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணி உயர்ந்து ஓய்வு பெற்றேன். பள்ளியில் கண்டிப்புடன் நல்வழிகாட்டிய ஆசிரியர் கோபாலகிருஷ்ணனிடம் பயின்றதால் நல்லனுபவம் பெற்றேன். பணி காலத்தில் கற்பிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றேன். அந்த பள்ளி துவங்கி நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அந்த ஆசிரியரை நினைவுடன் பாராட்டுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
- ப.சந்திரசேகர ஹரிஹர சுவாமிநாதன், பழனி. தொடர்புக்கு: 95782 21718