PUBLISHED ON : அக் 03, 2026

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 10ம் வகுப்பு படித்தேன். கணித ஆசிரியையாக இருந்த அன்னமேரி எளிமையாக பழகுவார். பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்று வந்த நான், கணிதத்தில், 'அல்ஜீப்ரா'வுக்கு பயந்து நடுங்கினேன்.
என் போன்றோரை அழைத்து தைரியமூட்டி, புரியும் வகையில் கற்பித்தார் கணித ஆசிரியை.
பயத்தை போக்கி, கணிதம் கடினமானது என்ற எண்ணத்தை அகற்றினார். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற நம்பிக்கையை விதைத்தார்.
ஆண்டு இறுதித் தேர்வில் கணிதத்தில், 81 மதிப்பெண்களுடன், பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன்; பாராட்டையும் பெற்றேன்.
என் வயது, 73. அஞ்சலக சேமிப்பு முகவராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். கணிதப் பாடத்தின் மீதிருந்த பயத்தை போக்கி, புரியும் வகையில் கற்றுத் தந்த ஆசிரியை அன்னமேரியை நன்றியோடு நினைவில் கொண்டு வாழ்கிறேன்.
- எம்.ராஜகுமாரி, ஆரணி.
