PUBLISHED ON : ஜூலை 11, 2026

வேலுார் மாவட்டம், பென்னாத்துார், அரசு உயர்நிலை பள்ளியில், 2011ல், 10ம் வகுப்பு படித்த போது, சமூக அறிவியல் ஆசிரியராக இருந்தார், மனோகர். வரலாறு பாடங்களில் வரும் நாயகர்கள், அந்த காலத்தில் எப்படி இருந்திருப்பர் என்பதை, கற்பனை வடிவம் கொடுத்து கற்பிப்பார். அது அபாரமாக இருக்கும். இந்த மாறுபட்ட அணுகுமுறை மாணவர்களிடம் வரவேற்பை பெற்றது.
ஒரு பாடம் நடத்தி முடித்த மறுநாள் வகுப்பில், ஒரு வித்தியாசமான நிகழ்வு நடக்கும். அந்த பாடம் குறித்து, எழும் ஐயங்களை கேள்வியாக கேட்போம். பொறுமையாகவும், தெளிவாகவும் பதில் அளிப்பார், சமூக அறிவியல் ஆசிரியர். இது, நல்ல புரிதலையும், உரையாடல் சூழலையும் உருவாக்கியது.
தேர்வை எவ்வாறு அணுகினால், அதிக மதிப்பெண் பெறலாம் என்பதை தெளிவு படுத்தினார். அதன் விளைவாக, பொதுத்தேர்வில், சமூக அறிவியல் பாடத்தில் அனைவரும் வெற்றி பெற்றோம்.
எனக்கு, 32 வயதாகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், பராமரிப்பு மற்றும் இயக்க பிரிவில் வேலை செய்கிறேன். பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர் மனோகர் கற்றுத் தந்த பாடங்களும், கற்பித்த முறையும் மனதில் நிலைத்திருக்கின்றன. அவரது நினைவை போற்றுகிறேன்.
- கு.விக்னேஷ், வேலுார்.
தொடர்புக்கு: 98402 42392
