
படுசோம்பேறியாக இருந்தான் சிறுவன் பொழில்.
பொறுப்புணர்வு இன்றி காணப்பட்டான்.
இதை கண்டு, அவ்வூர் முதியவரிடம் அழைத்து சென்று அறிவுரை கூற வேண்டினார் அவன் தந்தை.
சிறுவனிடம் கனிவாக, ''கரும்பாக இரு...'' என்றார் முதியவர்.
பின், அதன் பொருளை பொறுமையாக விளக்கினார்.
ம றுநாள் -
வகுப்பில் எல்லாரிடமும் அன்புடன் பேசி பழகினான் சிறுவன்.
கடுஞ்சொல் தவிர்த்தான்.
இந்த மாற்றம் கண்டு மகிழ்ந்தார் தந்தை.
ஒ ரு வாரத்திற்குப் பின் -
மறுபடியும் முதியவரிடம் சிறுவனை அழைத்து சென்றார் தந்தை.
மிகவும் மென்மையாக, ''எறும்பாக இரு...'' என்றார் முதியவர்.
பொருள் புரிந்து சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தான் சிறுவன்.
சோம்பேறித்தனம் நீங்கியது. நண்பர், உறவினர்களிடம் நல்ல பெயர் கிடைத்தது. எல்லாரும் பாராட்டினர்.
அதை கண்டதும் சிறுவனுக்கு சிறிது தலைக்கனம் ஏறியது.
மீண்டும் முதியவரை பார்க்க அழைத்தார் தந்தை.
தேவையில்லை என மறுத்து விட்டான் சிறுவன்.
பின், வற்புறுத்தி அழைத்து சென்றார் தந்தை.
சிறுவன் முகத்தில் கர்வம் குடியிருப்பது கண்டு, ''துரும்பாக இரு...'' என்றார் முதியவர்.
அதன் பொருள் உணர்ந்தான் சிறுவன். தவறை திருத்தி செயல்பட்டு நற்பெயர் பெற்றான் சிறுவன்.
குழந்தைகளே... முதியோர் அறிவுரை கேட்டால் சிறப்பாக வாழலாம்.
- ஆர்.சுந்தரராஜன்