தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அச்சம் தவிர்!

அச்சம் தவிர்!

அச்சம் தவிர்!


PUBLISHED ON : பிப் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பத்தாவது படிக்கிறாள் காயத்ரி. மிகவும் பயந்த சுபாவமுடையவள்.

அன்று இரவு, முன்னதாகவே உறங்கி விட்டாள். வீட்டிலும் எல்லாரும் படுத்துக்கொண்டனர். திடீரென்று கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு விழித்தாள் காயத்ரி. பதற்றத்தோடு பார்த்தாள். பக்கத்தில் படுத்திருந்த அப்பாவை எழுப்பினாள்.

எழுந்து உட்கார்ந்த அப்பா, ''கதவை திறந்து பாரம்மா...'' என்றார்.

''நானா...'' என, அதிர்ந்தாள், காயத்ரி.

''தைரியமா போ... பயப்படாதே...''

அப்பா தைரியம் கொடுத்தாலும், பயம் முழுவதும் விலகாமலேயே, கதவை திறந்தாள்.

மழை வரும் அறிகுறியாக, சூறைக்காற்று முகத்தில் அடித்தது. காலில் எதுவோ கடிக்க, 'சுருக்'கென உறைத்தது. மனம் படபடக்க, காலை உதறினாள். காலருகே, பூனை நின்றிருந்தது.

அவளுக்கு, இப்போது தான் எல்லாம் புரிந்தது.

மாலையில், பூனைக்கு சாப்பாடு வைக்க மறந்து விட்டாள். சாப்பாடு கிடைக்காமல், பூனை வெளியே சுற்றியிருக்கிறது. இரவில் கதவை மூடி, எல்லாரும் துாங்கிவிட்டதால், கதவின் அருகிலேயே பூனை படுத்துக் கொண்டது. மழை வரும் அறிகுறி தென்பட்டதால், வீட்டிற்குள் வர, கதவை பிறாண்டியுள்ளது.

தேவையில்லாமல் பயந்து விட்டோம் என, நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

அப்பா எழுந்து சென்று, குடிக்க தண்ணீர் எடுத்து வந்து தந்தார். காயத்ரியின் தோளை மெதுவாக அணைத்தபடி, அமர வைத்தார்.

''பார்த்தாயா... தேவையில்லாமல் பயந்து, பதற்றமானதால் உன்னால் யோசிக்க முடியவில்லை. எதையும் நிதானமாக செய்தால் போதும். இப்போது மணி இரவு 10:00 தான். உனக்கு தைரியம் வர வேண்டும் என்பதால் தான், கதவை உன்னை திறக்க செய்தேன். பயப்படக் கூடாது. தைரியமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும்... தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும்...'' என்றார், அப்பா.

அப்பா பேசியது, அப்படியே காயத்ரியின் மனதில் பதிந்தது.

''இனி, காரணமின்றி எதற்கும் அஞ்சாமாட்டேன், அப்பா...'' என்றாள், காயத்ரி புன்னகையுடன்.

குழந்தைகளே... காரணமின்றி இருளை கண்டு பயப்படக் கூடாது.

சு.பிரபாகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us