
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் நெருங்கிய தோழியர். பள்ளி ஆண்டு விடுமுறையை கொண்டாட குடும்பத்தினருடன் லட்சத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். பல இடங்களையும் சுற்றிப் பார்த்தனர். ஒரு தீவுப்பக்கம் பயணித்த போது வினோத குட்டி மனுஷன் லியோவை கண்டனர். பயத்துடன் காணப்பட்ட அவன் தங்களை அடிமையாக வைத்திருப்பதாக கூறினான். அது பற்றி அறிய முயற்சி எடுத்தனர் சிறுமியர். இனி -
''உ ங்களை அடிமையாக வைத்திருப்போருக்கு நீங்கள் என்ன மாதிரி வேலைகளை செய்ய வேண்டும்...''
ரீனா கேட்டதற்கு, லியோ சொன்ன பதில் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
''இந்த தீவில் பூமிக்கு அடியில் ரத்தினச் சுரங்கங்கள் உள்ளன. அவற்றில் எங்கள் இனத்தை சேர்ந்த ஆண்கள் வேலை செய்கின்றனர்...''
''ரத்தினச் சுரங்கங்களா...''
''ஆம்... இந்த தீவில் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் இருக்கின்றன...''
''சுரங்கங்கள் அரசு சொத்தாயிற்றே...''
''அது பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது...''
''அங்கே எவ்வளவு பேர் வேலை செய்கின்றனர்...''
''எங்கள் இனத்து ஆண்கள் மட்டும் தான். வேறு யாரும் அங்க வேலை செய்ய முடியாது...''
''ஏன் லியோ...''
''இங்கு இருப்பவை எல்லாம் மிகவும் குறுகிய சுரங்கங்கள். சாதாரண மனிதர்களால் அதனுள் புகுந்து செல்ல முடியாது. எங்கள் இனத்தவர் உருவத்தில் குட்டியாக இருப்பதால், அவற்றுக்குள் சுலபமாக சென்று வர இயலும்... அந்த சுரங்கங்களில் இருந்து தான் ரத்தினக் கற்களை எடுக்கின்றனர்...''
''உங்களை தான் இதற்கு பயன்படுத்துகிறார்களா...''
ரீனாவும், மாலினியும் ஆச்சரியமாக பார்த்தனர்.
''வெளியாட்கள் யாரும் இங்கே வரமுடியாது. இப்படி உருவத்தில் குட்டியாக மனுஷங்க இங்கே இருப்பதே யாருக்கும் தெரியாது...''
பரிதாபமாக சொன்ன லியோ, சிறுமியரை மாறி மாறி பார்த்தான்.
பின் சற்று கவலையுடன், ''எங்களை காப்பாற்ற முடியுமா...'' என, கெஞ்சலான குரலில் கேட்டான் லியோ.
ரீனாவும், மாலினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
''தயவுசெய்து எங்களை காப்பாற்றுங்கள். பிறந்தது முதல் நாங்கள் எல்லாரும் அடிமையாகவே இருக்கிறோம்...''
லியோ முகத்தில் சோகம் தெரிந்தது. அந்த சிறிய கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.
ரீனா நெகிழ்ந்து போனாள். மாலினியும் தான்.
''அதிகாரிகளிடம் சொல்லி இவர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம் ரீனா...''
இதை சொன்னதும் லியோ பதறினான்.
''அதை மட்டும் செய்து விடாதீர். பல அதிகாரிகள், எங்களை அடிமையாக வைத்திருப்பதற்கு உடந்தை. வெளி மனிதர்கள் இங்கே வராமல் தடுப்பது அதிகாரிகள் தான். இங்குள்ள ரகசியத்தை வெளியே சொன்னதாக தெரிந்தால், இங்கிருக்கும் கொடியவர்கள் எங்களை கொன்று விடுவர்...''
''பின் எப்படி உங்களை காப்பாற்றுவது...''
''வேறு எதாவது ஒரு வழியில் காப்பாற்றுங்கள்...''
லியோ கெஞ்சி கொண்டிருக்கும் போது, மரங்களுக்கு இடையே ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டது.
உஷாரான லியோ, ''ஐயோ அந்த கொடியவர்கள் மீண்டும் வந்து விட்டனர்...'' என்று பதறியபடி சட்டென அருகில் இருந்த மரத்தில் ஏறி, கிளைகளில் தாவி மறைந்து போனான்.
அவனது கலங்கிய கண்கள் ரீனாவையும், மாலினியையும் பரிதவிக்க வைத்தது.
''எப்படியாவது குட்டி மனுஷங்களை காப்பாற்றி விட வேண்டும் மாலினி...''
''இது ரொம்ப பெரிய விஷயம், நம்மால் முடியுமா ரீனா...''
''கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் நிச்சயம் முடியும்...''
''ஆனால், நாம் இங்கே இருக்கப் போவது இன்னும் இரண்டு நாட்கள் தானே. அதற்குள் என்ன செய்ய முடியும்...''
''இரண்டு நாட்களில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது தான். ஆனால், திரும்பவும் இங்கே வந்தால்...''
''திரும்பவும் இங்கே வருவதா, அது சாத்தியமா ரீனா...''
''அதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது...''
இப்படி சொன்ன ரீனாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள் மாலினி.
ல ட்சத்தீவு சுற்றுலாவை முடித்து ரீனாவும், மாலினியும் டில்லிக்கு திரும்பினர். அங்கு பள்ளியில் அவர்களுக்கு பிடித்த உடற்கல்வி ஆசிரியை ஜான்வியை சந்தித்தனர். சிறுமியரை பார்த்ததும் மிகவும் நட்பாக சிரித்தார் ஆசிரியை.
''உங்கள் லட்சத்தீவு சுற்றுலா எப்படி இருந்தது...''
''ரொம்ப சிறப்பாகவே இருந்தது மிஸ்...'' என்றாள் ரீனா.
மாலினியும் தலையசைத்தாள்.
''ஏதாவது, தனிப்பட்ட முறையில் பேச வேண்டுமா...'' என்று கேட்டார் ஜான்வி.
''ஆமாம் மிஸ்... நம் பள்ளி சார்பில் சுற்றுலாவும், சேவா பணியும் இணைந்து நடத்த வேண்டும் என்று சொல்லியிருந்தீர்களே, அது எப்போ மிஸ்...'' என்றாள் ரீனா.
''அடுத்த மாத ஆரம்பத்தில் நடத்த திட்டமிடுகிறோம். இந்த சுற்றுலாவை அந்தமானில் வைத்துக்கொள்ளலாமா என ஆலோசனையும் நடக்கிறது ரீனா...''
இதை எதிர்பார்த்தது போல் ரீனா முகத்தில் மலர்ச்சியை வெளிப்படுத்தினாள்.
தொடர்ந்து, ''உங்களுக்கும் ஜாலி தான். விடுமுறையில் லட்சத்தீவு போய் வந்து விட்டீர். அடுத்த ஒரு மாதத்தில் அந்தமான் போக போகிறீர்...'' என்றார் ஜான்வி.
'மிக்க மகிழ்ச்சி மிஸ்...'
சிறுமியர் சொல்லியதும், ''ஆமாம்... நீங்கள் இருவரும் பள்ளி சுற்றுலாவுக்கு வருகிறீர்கள் தானே...'' என்று கேட்டார் ஜான்வி.
''ஆமாம் மிஸ்... சுற்றுலா என்றால் எங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அதிலும் பொதுச்சேவையுடன் கூடிய சுற்றுலா என்னும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி...''
''மாணவ, மாணவியருக்கு பயணச்சலுகை உள்ளது. தவிர சேவை முகாமுக்கு செல்வதால் மேலும் ஒரு பகுதி செலவு குறைந்து விடும். சுற்றுலா கட்டணம் மிக குறைவாகத்தான் செலுத்த வேண்டியிருக்கும்...''
''மிஸ்... சிறு வேண்டுகோள். நாம் அந்தமானுக்கு பதிலாக லட்சத்தீவுகளுக்கு செல்லாமா...''
ரீனாவின் கோரிக்கை கேட்டு ஆச்சரியத்துடன் பார்த்தார் ஜான்வி.
''இப்போது தானே போய் வந்தீர்... வேறொரு புது இடத்திற்கு போவது தானே சுவாரசியமாக இருக்கும்...''
''அதில்லை மிஸ்... துணிச்சலும், உதவும் உள்ளமும், உங்களுக்கு இருப்பதால் சொல்கிறேன். அங்கே ஒரு தீவில் வினோத உருவம் உடைய பழங்குடி இனத்தவர் இருக்கின்றனர். அவர்களை மீட்க வேண்டும்...'' ரீனா சொல்ல, ஆச்சரியத்துடன் பார்த்தார் ஜான்வி.
லட்சத்தீவில் லியோவை சந்தித்ததையும், அவன் சொன்ன தகவல்களையும் விவரித்தாள் ரீனா.
அதை கவனமாக கேட்டார் ஜான்வி. அடுத்து ஆசிரியை என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்ப்புடன் இருந்தனர் ரீனாவும், மாலினியும்.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்