
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் சுரங்கத்தில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து ஆசிரியை ஜான்வி உதவியுடன் மீட்க திட்டமிட்டு செயல்பட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் விசாரித்தனர். சுரங்ககாரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது . இனி -
சுரங்கக்காரர்களின் சந்தேகத்தை உணர்ந்து உரையாடலில் குறுக்கிட்டான் பழங்குடியின தலைவர்களில் ஒருவரான அபியா.
''கோயாவுக்கு உடம்பு சரியில்லை என்று லீவு எடுத்தான். நாங்கள் தான் கஷாயம் காய்ச்சி கொடுத்து ஓய்வெடுக்க சொல்லி வந்தோம். அவன் வேலைக்கு வந்துள்ளதால் உடல்நிலை எப்படி இருக்கிறது என விசாரித்தோம்...''
அந்த பதில் எரிக்சனுக்கு திருப்தி அளித்ததா என, அவன் முகபாவத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியவில்லை. எரிக்சன் கேள்வியில் சந்தேகம் இருந்ததால், சுரங்கத்தின் உள்ளே நடந்ததை பார்த்திருக்கிறான் என்பதை தவிர, அங்கு பேசிய எதையும் அவன் முழுமையாக கேட்கவில்லை என குட்டி மனுஷங்களின் தலைவர்களுக்கு புரிந்தது.
மூவரும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டிருக்க மற்ற தொழிலாளர்கள் பயத்திலேயே இருந்தனர்.
''இப்படி அவ்வப்போது கூட்டமாக நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் வேலை எப்படி நடக்கும். இந்த சுரங்கத்தின் வேலையை ஒரு வாரத்திற்குள் முடித்துவிட்டு அடுத்த சுரங்கத்திற்குப் போக வேண்டும். புரிகிறதா...'' என, சற்று கண்டிப்பான குரலில் கூறினான் அன்பரசன்.
அதை சமாளிக்கும் வகையில், ''சரி ஐயா... நேரத்தை வீணாக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம் அல்ல; கோயாவின் உடல் நலனை விசாரித்தோம். அவரும் வந்து விட்டதால் வேலை சீக்கிரமாக நடக்கும்...'' என்றான் நப்தலி.
''வேலைகளை துரிதமாக பாருங்கள்...''
உள்ளே வைக்கப்பட்ட வெடிமருந்தை வெடிக்க வைக்க பேட்டரி ஒயர்
இணைப்பை பொருத்த
நகர்ந்தான் அண்டனி.
இந்த காட்சிகளை துாரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த மாலினி, ''அங்கே ஏதோ குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்...'' என்றாள்.
''நடவடிக்கைகளை பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் தெரிகிறது...'' என்றாள் ரீனா.
''சுரங்கத்துக்குள் செல்லும் போது உடலில் வீடியோ கேமரா எல்லாம் பொருத்தி அனுப்புகின்றனரே... உள்ளே நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அது படம் பிடிக்கும் அல்லவா... குட்டி மனுஷங்களின் தலைவர்கள் ஏதாவது செய்யப்போய் அதை சுரங்கக்காரர்கள் பார்த்துவிட்டால் விபரீதம் ஆகிவிடுமே ரீனா...''
''நீ சொல்வதும் சரி தான். அதற்கு ஏதாவது ஒரு தீர்வு கண்டாக வேண்டும்...''
யோசிக்க ஆரம்பித்தாள் ரீனா.
கூடாரத்தில் போய் உட்கார்ந்த அபியாவும், நப்தலியும், கோயாவிடம் விபரம் கேட்டனர்.
'அந்த பெண்கள் எப்படிப்பட்டவர்கள்... என்ன சொன்னார்கள்...'' அபியா கேட்டான்.
''புத்திசாலியாக தான் தெரிகின்றனர்...''
''என்ன சொன்னாள் ரீனா...''
''நாம் இங்கிருந்து தப்புவதற்கு எல்லாரும் சேர்ந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாள்...''
''எல்லாரும் தயாராக தானே இருக்கிறோம். என்ன செய்ய வேண்டும்...''
''சுரங்கக்காரர்களை எதிர்க்க எல்லாரும் ஒருசேர முடிவெடுக்க வேண்டும் என்று கூறினாள்...''
''நம் மக்கள் சொன்னால் கேட்டுக்கொள்வர். சரி அப்புறம்...''
''நமக்கு கொடுக்கப்படும் வெடிமருந்தை முழுதுமாக பயன்படுத்தாமல், பாதியைப் பயன்படுத்திவிட்டு மீதியை சேமித்து வைக்க சொல்லி இருக்கிறாள்...''
''ஓ... அதனால் தான் நீ கொஞ்சம் வெடி மருந்தை அங்கிருந்து எடுத்து வந்து விட்டாயோ...''
''ஆம்... நான் கொண்டு வந்தது கொஞ்சம் அல்ல; பாதி அளவு...''
''அதை வைத்து என்ன செய்வது...''
''இப்போது அதை பற்றி அந்த பெண் எதுவும் சொல்லவில்லை. இந்த வெடி மருந்தை சமயம் வரும்போது சுரங்கக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தி கொள்ளலாம் என்று மட்டும் கூறினாள்...'' என்றான் கோயா.
இந்த நிகழ்வை ரீனா, மாலினி, லியோ மூவரும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தனர். அங்கு பேசுவது கேட்கவில்லை என்றாலும், சுரங்கத்தில் எச்சரிக்கப்பட்டதையும் தற்போது கலந்து பேசுவதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
சுரங்கத்தில் வைக்கப்பட்ட வெடிமருந்து மெல்லிய அதிர்வுடன் குறைந்த சத்தத்தில் வெடித்தது.
வெடித்த தன்மையை கவனித்த எரிக்சன், ''என்ன இது... சரியாகவே வெடிக்கவில்லை...'' என்றான்.
அவன் குரலிலும், பார்வையிலும் சந்தேகம் தெரிந்தது.
கோயா உள்ளிட்ட குட்டி மனுஷங்களின் தலைவர்களும் வயிற்றில் அமிலம் சுரந்தது.
இப்போது ஆண்டனி நெருங்கி வந்தான்.
''உள்ளே வைத்த வெடி மருந்து சரியாக வெடிக்கவில்லை... ஏதோ பிரச்னை இருக்கிறது... அது என்னவென்று கண்டுபிடித்தாக வேண்டும்...'' என்றபடி அங்கிருந்தோரை பார்த்தான் ஆண்டனி.
பின், ''அபியா... நீ வயிற்றில் ஒன்றும், நெற்றியில் ஒன்றும் என, இரண்டு வீடியோ கேமராக்களை உடலில் கட்டி, சுரங்கத்தில் இறங்கு... உள்ளே என்ன பிரச்னை என்பதை ஆராய வேண்டும்...'' என்றான்.
குட்டி மனுஷங்களின் தலைவர்கள் மூவருக்கும் பெரும் பதற்றம் வந்தது.
அபியா உள்ளே இறங்கியதும், 'சுரங்கத்தில் வெடி பொருளை குறைவாகப் பயன்படுத்தியதை வீடியோ கேமரா காட்டி கொடுத்து விடுமே' என எண்ணியபடி பதறினர்.
அபியாவிடம் ஒரு ப்ளூடூத் கருவி கொடுத்து, ''இந்த கருவியை காதில் மாட்டிக்கொள்; நான் சொல்வது உனக்கு கேட்கும். அதன்படி செய்...'' என்றான் எரிக்சன்.
அந்த கருவியை பொருத்திக்கொண்டு கேமராவை தலையிலும் வயிற்றிலும் கட்டியபடி சுரங்கத்திற்குள் இறங்கினான் அபியா.
''வலது புறம் திரும்பு... இடதுபுறம் திரும்பு... இன்னும் கீழே போ... குனிந்து பார்...''
எரிக் சன் கட்டளைக்களுக்கு ஏற்ப செயல்பட்டான் அபியா.
உள்ளே வெடித்து சிதறி கிடந்த மண் அளவு, லேப்டாப் மானிட்டரில் தெரிந்தது.
மானிட்டரை கூர்ந்து பார்த்தான் எரிக்சன்.
''வெடி பொருள் வைத்ததில் பாதி அளவுக்கு தான் மண் வெடித்து சிதறி இருக்கிறது...''
சுரங்கத்தில் இருந்த அபியா வை வெளியே அழைத்தான்.
''நாம் வைத்த வெடி மருந்தின் அளவுக்கு இதை விட அதிகமாக மண் சிதறி இருக்க வேண்டும். ஆனால், குறைவாக சிதறி இருக்கிறதே...'' என்றான் எரிக்சன்.
யோசனையுடன் அபியா பதில் சொல்லாமல் நின்றான். வெடி மருந்தை குறைத்து பயன்படுத்தியதை கண்டுபிடித்து விட்டானோ என்று அச்சம் அவனுக்குள் எழுந்தது.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்

