
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து ஆசிரியை ஜான்வி உதவியுடன் மீட்க திட்டமிட்டு செயல்பட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் விசாரித்தனர். சுரங்கக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இனி -
சந்தேகத்துடன் கேள்விகள் கேட்ட சுரங்கக்காரர்களிடம் சற்று தள்ளி நின்றிருந்த பழங்குடியின தலைவர்களில் ஒருவரான கோயா, ''ஐயா... இங்கே மண்ணின் தன்மை கடினமாக இருக்கிறது. அதனால் தான் சிதறிய அளவு குறைந்து இருக்கிறது என நினைக்கிறேன்...'' என விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டனரா என்பது தெரியவில்லை.
சற்றும் சம்பந்தமில்லாமல், ''சரி... நீங்கள் காற்று வாங்கியது போதும். ரத்தினங்களை வெளியே கொண்டு வாருங்கள்...'' என்றான் அன்பரசன்.
குட்டி மனுஷங்களில் பாதி பேர் வெளியே நிற்க, மீதி பேர் சுரங்கத்தில் இறங்கினர்.
சற்று தொலைவில் மரங்களுக்கு இடையே மறைந்தபடி இதை கவனித்துக் கொண்டிருந்த ரீனா, ''என்ன நடக்குது அங்கே...'' என்றாள்.
''ஒரு நபரின் உடலில் இரண்டு கேமராக்களை பொருத்தி சுரங்கத்திற்குள் அனுப்பியதை பார்த்தால் உள்ளே நடந்த நிகழ்வு குறித்து சுரங்கக்காரர்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது என நினைக்கிறேன்...'' என்றாள் மாலினி.
''எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது...'' என்ற ரீனா, ''ஒரு சிலர் வெளியில் இருக்க, மற்றவர்கள் மட்டும் உள்ளே செல்கின்றனரே...'' என வினா எழுப்பினாள்.
''உள்ளே வெடி வைத்து தகர்த்தனர் அல்லவா... அப்போது சுரங்கத்தின் பக்கவாட்டில் மண்ணும் அதனுடன் கலந்திருக்கும் ரத்தினங்களும் சிதறி சுரங்கத்திற்குள் விழுந்திருக்கும். அதை மேலே கொண்டு வந்து மண்ணையும், ரத்தினங்களையும் தனித்தனியே பிரிப்பர்...'' என்று விளக்கினான் லியோ.
இப்படி சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போதே திடீரென லியோ அலர்ட் ஆனான்.
''சுரங்கக்காரர்கள் வருகின்றனர். நான் இங்கு இருந்தால் ஆபத்து... மறைந்து கொள்கிறேன்...'' என, சட்டென அங்கிருந்த மரம் ஒன்றில் ஏறினான். கிளைகளுக்குள் மறைந்தான்.
சற்று தொலைவில் மனிதர்கள் நடமாடும் சத்தம் கேட்டது.
''வா நாம் கூடாரத்திற்கு போய்விடலாம்...''
மாலினியை அங்கிருந்து இழுத்து கொண்டு நகர்ந்தாள் ரீனா.
''ஏய் நில்லு...''
ஒரு சத்தம் கேட்டது.
ரீனாவும், மாலினியும் நின்று திரும்பி பார்த்தனர்.
முரட்டு தோற்றத்தில் இருவர் அவர்களை நோக்கி வந்தனர்.
''முகத்தில் பயத்தையோ, பதற்றத்தையோ காட்டிக்கொள்ளாதே... ஆரம்பத்திலேயே தைரியமாக எதிர்த்து பேசி சமாளிக்க வேண்டும்...''
தாழ்ந்த குரலில் கூறினாள் ரீனா.
''யார் நீங்கள்... இங்கே எப்படி வந்தீர்கள்...'' என்றான் ஒருவன்.
''நாங்கள் மாணவியர். இங்கே சிப்பிகளை ஆராய்ச்சி செய்ய வந்திருக்கிறோம். என் பெயர் ரீனா. இது மாலினி...''
''நான் மதன்லால்... இவர் சுர்ஜித்...''
தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர் முரட்டு ஆசாமிகள்.
''வேறு யாரும் வந்திருக்கின்றனரா...''
''இல்லை நாங்கள் மட்டும் தான் இந்த தீவுக்கு வந்தோம்...''
''நீங்கள் மட்டும் எப்படி தனியாக...''
''எங்களுடன் ஆசிரியர்களும், பிற மாணவர்களும் வந்திருக்கின்றனர்...''
''அவர்கள் எங்கே...''
''அவர்கள் இன்னொரு தீவில் சமூக சேவை முகாமில் இருக்கின்றனர். நாங்கள் மட்டும் இந்த தீவுக்கு வந்தோம்...''
இருவரும் சந்தேகமாக பார்த்தனர்.
''இது மிகவும் ஆபத்தான தீவு. கொடிய விலங்குகள் எல்லாம் இருக்கின்றன. இங்கு யாரும் வரக்கூடாது...''
''அப்படியானால் நீங்கள் எப்படி இருங்கே வந்தீர்கள்...''
துடுக்காக கேட்டாள் ரீனா.
''நாங்கள் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள். அரசு அனுமதியுடன் வந்திருக்கிறோம்...''
''எங்களுக்கும் தான் அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. டில்லியில் எங்கள் பள்ளி நிர்வாகத்தினர் மத்திய அரசிடம் அனுமதி வாங்கியிருக்கின்றனர்...''
தைரியமாக பேசும் ரீனாவை கண்டு சற்று தயங்கினர்.
''எங்கே தங்கி இருக்கிறீர்கள்...''
''கத்மத் பகுதியில் ஓட்டலில் நாங்கள் எல்லாரும் தங்கியிருக்கிறோம்...''
''எத்தனை நாள் இங்கே இருப்பீர்கள்...''
''பத்து நாட்கள்... தினமும் காலையில் எங்களை இங்கே கொண்டு வந்து இறக்கிவிடுவர். நாங்கள் கூடாரம் அமைத்து இங்கே சிப்பிகளை சேகரிப்போம்; குறிப்புகள் எடுப்போம். மீண்டும் மாலையில் படகு வந்து எங்களை அழைத்து செல்லும்...''
''சிப்பி ஆராய்ச்சி என்றால் இன்னொரு தீவு இருக்கிறது... இந்த கடற்கரையை விட அங்குள்ள கடற்கரையில் இன்னும் வித விதமான அபூர்வ ரக சிப்பிகள் கிடக்கும். நாங்கள் அதை காட்டுகிறோம்... அது உங்கள் ஆராய்ச்சிக்கு உகந்த இடமாக இருக்கும்...''
''இல்லை இந்த தீவுக்கு தான் அரசு எங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது...''
''சரி... நீங்கள் சிப்பிகளை ஆராய்ச்சி செய்வதானால் கடற்கரையிலேயே இருந்து கொள்ளுங்கள். மரங்கள் இருக்கும் பகுதிக்கு வர வேண்டாம். அது ஆபத்தான பகுதி...'' எச்சரிக்கை செய்வது போல பேசினான் சுர்ஜித்.
'சரி' என தலையாட்டினர் ரீனாவும், மாலினியும்.
''நல்லது... நாங்கள் கூட இந்த தீவுக்கு அடிக்கடி வருவதில்லை; இன்று தற்செயலாக இந்த பக்கம் வந்தோம். கவனம் குழந்தைகளே...''
சொல்லிவிட்டு இருவரும் நகர்ந்தனர்.
''சூப்பரா பேசின ரீனா... நானாக இருந்தால் பயந்து உளறி கொட்டியிருப்பேன்...'' என்றாள் மாலினி.
அவர்கள் சென்றதும் இருவரும் கூடாரத்துக்கு வந்தனர்.
''நாம் இவர்கள் கண்ணில் பட்டு விட்டோம்; இனி கவனமாக இருக்க வேண்டும். ரொம்ப வாட்ட சாட்டமாக முரட்டுத்தனமாக இருக்கின்றனர்...'' என்றாள் ரீனா.
''ஏன்... உனக்கு பயமாக இருக்கிறதா...''
''அப்படி எல்லாம் இல்லை...''
''அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகிறோம்...''
ரீனாவிடம் கேட்டாள் மாலினி.
''இன்று தானே முதல் நாள்... இங்கு வந்ததும் தான் நமக்கு சில விஷயங்கள் புரிய ஆரம்பித்திருக்கின்றன... இன்னும் சில ஆயத்த வேலைகளை செய்ய வேண்டும் மாலினி...''
''சொல்லு ரீனா... என்ன செய்ய வேண்டும்...''
''ஒரு விஷயத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறோம். உடனடியாக அதை சரிசெய்ய வேண்டும். இல்லை என்றால் பல குழப்பங்களும், பெரும் பிரச்னைகளும் ஏற்படும்...'' என்ற ரீனாவை நிமிர்ந்து பார்த்தாள் மாலினி.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்

