sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வினோத தீவு! (15)

/

வினோத தீவு! (15)

வினோத தீவு! (15)

வினோத தீவு! (15)


PUBLISHED ON : நவ 08, 2025

Google News

PUBLISHED ON : நவ 08, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து ஆசிரியை ஜான்வி உதவியுடன் மீட்க திட்டமிட்டு செயல்பட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசி தகவல்கள் அறிந்தனர். சந்தேகத்தில் விசாரித்த சுரங்கக்காரர்களுக்கு சாமார்த்தியமாக பதில் தந்து தவிர்த்தனர் சிறுமியர். இனி -

''நா ம் ஒரு விஷயத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் மாலினி. உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் பல குழப்பங்களும், பெரும் பிரச்னைகளும் ஏற்படும்...''

ரீனாவை நிமிர்ந்து பார்த்தாள் மாலினி.

''என்ன செய்ய வேண்டும்...''

''முதலில் நமக்கும், குள்ள மனுஷங்களுக்கும் இடையில் தகவல் தொடர்பை உறுதிப்படுத்த வேண்டும்...''

மாலினியும் அந்த கருத்தை ஒப்புக்கொண்டாள்.

மறுநாள் காலை தீவுக்கு வந்த சிறுமியர் இருவரும் ஒரு மொபைல் போனை, லியோவிடம் கொடுத்தனர்.

''சூப்பர்... இதே போன்ற போனை சுரங்கக்காரர்கள் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்...'' என்றான் லியோ.

சைலன்ட் மோடில் இருக்கும் அதை எப்படி பயன்படுத்துவது என லியோவுக்கு கற்றுத் தந்தனர்.

பேசவும், அழைப்புகளை ஏற்கவும், புகைப்படம் எடுக்கவும், அனுப்பவும் சுலபமாக கற்றுக் கொண்டான்.

''தினமும் நாங்கள் பேட்டரி பேங்க் கொண்டு வந்து போனை சார்ஜ் செய்து கொடுத்து விடுவோம். மொபைலை மிக கவனமாக வைத்துக்கொள். நீ மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தொலைத்து விடக் கூடாது...''

மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு தலையசைத்தான் லியோ.

''நாங்கள் அழைத்தால் இது ஒலிக்காது. வெறும் அதிர்வு மட்டுமே இருக்கும். அதிர்வை உணர்ந்து நீ எடுத்து பயன்படுத்த வேண்டும்...''

''சரி... அப்படியே செய்கிறேன்...''

''எங்க நம்பரை மட்டுமே பதிவு செய்து கொடுத்துள்ளோம். அதை மட்டும் பயன்படுத்து. மற்றபடி இதை வைத்து வேறு யாரையும் அழைக்கவோ, வேறு வகையில் புகைப்படங்கள் எடுக்கவோ முயற்சிக்காதே... அது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும்... அதே நேரம், பேட்டரியையும் காலி செய்துவிடும்...''

''சரி... சரி...''

''இன்னொரு முக்கியமான விஷயம் லியோ. உன்னிடம் மொபைல் போன் இருக்கும் விஷயம் உங்கள் தலைவர்கள் தவிர எவருக்கும் தெரியக்கூடாது...'' எச்சரித்தாள் ரீனா.

''சரி... நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்...'' என்ற லியோ தயக்கத்துடன், ''நான் சற்று தள்ளி மரத்துக்கு மேல் போய் இருந்து கொள்கிறேன். நீங்கள் என்னோடு பேசுகிறீர்களா...'' என்றான்.

''சரி...'' என மாலினி தலையசைக்க அவன் மொபைல் போனுடன் அருகே மரத்தில் ஏறி மறைவாக இருந்து கொண்டான்.

மாலினி அவனுக்கு போன் செய்தாள். அவன் கட் செய்தான். பின் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

''என்ன ஆச்சு...''

''பொத்தானை மாற்றி அழுத்திவிட்டேன். நீங்கள் பேசுவது ரொம்ப நன்றாக கேட்கிறது...''

''எந்த நிகழ்வு சுரங்கத்தில் நடந்தாலும் இந்த எண்ணை அழுத்தி எங்களுக்கு சொல்ல வேண்டும். சரியா...''

''சரி... சரி...''

பேசி முடித்ததும் மரத்தின் அருகில் சென்றனர் சிறுமியர்.

''இப்போ சொல்லு லியோ... நேற்று என்ன நடந்ததாம்...''

''நீங்கள் சொல்லியபடி முழு வெடி மருந்தையும் பயன்படுத்தாமல் தலைவர் பாதியை மறைத்து வெளியில் எடுத்து வந்து விட்டார். மருந்து குறைவாக பயன்படுத்தப்பட்டதால் சுரங்கத்தின் உள்ளே வெடித்து சிதறிய மண்ணின் அளவு குறைவாக இருந்திருக்கிறது. அதை கவனித்து விட்டு சுரங்கக்காரர்கள் சந்தேகத்துடன் விசாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்...''

தகவல் சொன்னான்.

''அவர்கள் சுரங்கத்தின் உள்ளே போய் ஆராய்ந்து பார்ப்பார்களா...''

''அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அந்த சுரங்கம் மிகவும் ஒடுக்கமானது. சுரங்க வாசல் வழியாக எங்களைப் போன்ற குள்ள மனிதர்களை தவிர வேறு எவரும் நுழைய முடியாது. அதனால் தான் கேமராவை அபியின் உடலில் பொருத்தி உள்ளே அனுப்பி கண்காணித்தனர்...''

''இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்...''

உற்சாகமாக சொன்னாள் ரீனா.

''எதை...''

''அவர்கள் உள்ளே செல்லாமல் இருப்பதை...'' என்றவள் லியோ பக்கம் திரும்பினாள்.

''கோயாவை எப்போது சந்திக்கலாம்...''

''அது என்ன பிரமாதம். இப்போதே சந்திக்கலாம்...'' என்ற லியோ, சிறுமியரை அழைத்து சென்றான்.

சிறிது நேரத்தில் மரங்கள் அடர்ந்த மறைவான இடம் ஒன்றில் கோயாவை சந்தித்தனர்.

''இன்றும் உடல் வலி என கூறி விடுப்பு சொல்லி இருக்கிறேன். அதனால் சுரங்கத்துக்கு தாமதமாக போனால் போதும்...''

தொடர்ந்து முன்தினம் நடந்தவற்றை விவரித்தார் கோயா.

''எவ்வளவு வெடி மருந்து எடுத்தீர்கள் கோயா...''

''எனக்கு கொடுத்ததில் பாதியை எடுத்து வந்து விட்டேன்...''

''அது எங்கே இருக்கிறது...''

ஆர்வமாக விசாரித்தாள் ரீனா

''இதோ என்னிடம் தான் இருக்கிறது...''

ஒரு பொட்டலத்தை காட்டியவர், ''இதை எங்கே மறைத்து வைப்பதென்று தெரியவில்லை. சின்னதாக உரசினாலோ, வெப்பம் அதிகரித்தாலோ இது வெடித்து விட வாய்ப்புள்ளது...''

பயத்துடன் சொன்னார் கோயா.

''வெடி மருந்தை வெளியில் பயன்படுத்த போவதில்லை. சுரங்கத்திற்கு உள்ளே ஒரு பகுதியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்...''

''அது சாத்தியமில்லை. இதை உள்ளே வைத்திருந்தால் ஒவ்வொரு முறை வெடி மருந்து பயன்படுத்தும் போதும் ஏற்படக்கூடிய வெப்பத்தில் இதுவும் சேர்ந்து வெடித்து விடக் கூடும். வெடிமருந்து வைத்திருப்பது விளையாட்டு காரியம் அல்ல. மிகவும் அபாயகரமானது...'' என்றார் கோயா.

''ஓ... அப்படியா...''

''வெடி மருந்தை எதற்காக கேட்டாய்...''

''நீங்கள் ஏற்கனவே தோண்டிய சுரங்கம் மூடப்படாமல் தானே இருக்கிறது...''

எதிர் கேள்வி எழுப்பினாள் ரீனா.

''ஆமாம்... அது இன்னும் மூடப்படவில்லை...''

''உள்ளே நீங்கள் பயன்படுத்தும் வெடி மருந்திலிருந்து பாதியை தனியாக எடுத்து, அதை பயன்படுத்தி பழைய சுரங்கத்திலிருந்து புதுசுரங்கத்திற்கு ஒரு பாதை அமைக்க வேண்டும் என்பது தான் என் திட்டம்...''

''பழைய சுரங்கத்திற்கும், புதிய சுரங்கத்திற்கும் இடையில் பாதையா...''

வியப்புடன் கேட்டார் கோயா.

''ஆமாம்... சுரங்கக்காரர்களுக்கு தெரியாமல் வெளியிலிருந்து உள்ளே போகவும், உள்ளே இருந்து வெளியே வரவும் அந்த பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம்...''

ரீனா திட்டத்தை சொல்ல கோயாவும், லியோவும் அசந்து போயினர்.



- தொடரும்...

நரேஷ் அருண்குமார்







      Dinamalar
      Follow us