sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வினோத தீவு! (17)

/

வினோத தீவு! (17)

வினோத தீவு! (17)

வினோத தீவு! (17)


PUBLISHED ON : நவ 22, 2025

Google News

PUBLISHED ON : நவ 22, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, ஆசிரியை ஜான்வி உதவியுடன் அவர்களை மீட்க திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை வகுத்தனர். இனி -

அன்று மூன்றாவது நாள்.

காலையிலேயே கடற்கரைக்கு வந்து கூடாரம் அமைத்துவிட்டு, லியோவை சந்திக்க மரங்கள் இருந்த பகுதிக்குச் சென்றனர் ரீனாவும், மாலினியும்.

அங்கு லியோவுடன், கோயாவும் இருந்தார்.

வழக்கம் போல, கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை லியோவிடம் கொடுத்தனர்.

''நேற்று அந்தச் சுரங்கக்காரர்களில் இருவர் நம்மை பார்த்து விட்டனர். மீண்டும் நாம் என்ன செய்கிறோம் என்பதை பார்க்க அவர்கள் இங்கு வர வாய்ப்பு இருக்கிறது...'' என்று எச்சரித்தாள் ரீனா.

''அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்... உயரமான மரத்தின் உச்சிக்கு நான் சென்று விட்டால், எந்த பகுதியிலிருந்து யார் வந்தாலும் எனக்கு தெரிந்துவிடும். நான் உங்களுக்கு தகவல் சொல்கிறேன்...'' என்றான் லியோ.

''அதுவும் சரிதான். நீ மரத்தில் இரு. யாராவது வந்தால் குருவி போல சத்தம் எழுப்பு லியோ...''

ஐடியா கொடுத்தார் கோயா.

''அதெல்லாம் தேவையில்லை தலைவரே... என்கிட்ட போன் இருக்கு...''

தன் உடைக்குள் மறைத்து வைத்திருந்த மொபைல் போனை எடுத்துக் காட்டினான் லியோ.

தகவல் தொடர்புக்காக அவனுக்கு மொபைல் போன் கொடுத்ததைப்பற்றி, கோயாவுக்கு விவரித்தாள் ரீனா.

சுற்றுப்புறத்தைக் கண்காணிக்க, அவர்களிடம் விடை பெற்று லியோ பறப்பட்டான்.

''நீங்கள் இன்னும் நான்கைந்து நாட்களில் சென்று விடுவீர்களே... அதற்குள் எல்லாம் சரியாகிவிடுமா என்று எங்கள் மக்கள் கேட்கின்றனர்...''

கவலையுடன் கேட்டார் கோயா.

''சரியாகிவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. டில்லியில் உள்ள சில உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஜான்வி மிஸ் பேசி இருக்கிறார். நிச்சயம் உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும்...''

நம்பிக்கையூட்டினாள் ரீனா.

''சுரங்கக்காரர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு இருக்கிறது. அதனால் தான் அவர்கள் இவ்வளவு சுதந்திரமாக எந்த ஒரு அச்சமும் இன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்...'' என்றார் கோயா.

''புரிகிறது... அதை முறியடிக்க அரசின் மேல்மட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது ஜான்வி மிஸ்சுக்கு தெரியும்...'' என்று சிரித்தாள் மாலினி.

''இரண்டு சுரங்கங்களுக்கு இடையிலான பாதை அமைக்கும் வேலையை எப்போது ஆரம்பிப்பீர்கள்...''

ரனாவுக்கு திட்டத்தை விவரித்தார் கோயா...

''இன்று ஆரம்பித்திருப்பர். அபியும், நப்தலியும் அந்த பொறுப்பை எடுத்திருக்கின்றனர். கேமரா இல்லாமல் பணிபுரியும் எங்கள் ஆட்கள் சிலர், அந்த பாதையை அமைக்கின்றனர். பாதிக்கும் மேற்பட்ட துாரத்தை அவர்கள் தோண்டி விடுவர். பின்னர் அதில் வெடிமருந்து வைத்து அகலப்படுத்தி விடலாம். இன்று இரண்டு முறை வெடி மருந்து வைக்க வாய்ப்பு கிடைத்தால், இன்றே அந்த பாதை ரெடி ஆகிவிடும்...''

கோயா சொல்ல சொல்ல, மகிழ்ச்சி அடைந்தனர் ரீனாவும், மாலினியும்.

''அந்தப் பாதையைக் கொஞ்சம் பெரியதாக அமைக்க வேண்டும்...''

ரனா கூறியது, கோயாவுக்கு புரியவில்லை.

''பெரியதாக என்றால்...''

''அது வழியாக நான் செல்லும் அளவுக்கு...''

குறுக்கிட்டு ரீனா சொல்லவும், மற்றவர்கள் அதிர்ந்தனர்.

பதட்டத்துடன் மாலினி குறுக்கிட்டாள்...

''என்ன சொல்கிறாய் ரீனா... சுரங்கத்துக்குள் நாம் போகிறோமா...''

''நாம் இல்லை... நான் மட்டும் போகிறேன்...''

''பிரச்னையில் சிக்கிவிடப் போகிறோம்...''

மாலினி அச்சமடைந்தாள்.

''பிரச்னை வராமல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நான் உள்ளே செல்லும் போது நீயும், லியோவும் வெளியே தானே இருப்பீர்கள்... ஏதாவது பிரச்னை வந்தால் சமாளிக்க வேண்டியது தான்...''

தன் முடிவில் உறுதியாக இருந்தாள் ரீனா.

மொபைல் போன் அதிர்ந்தது. மாலினி எடுத்தாள்.

பேசியது லியோ தான்.

''அந்த இரண்டு பேரும் தீவுக்கு வந்திருக்கின்றனர். படகை நிறுத்திவிட்டு, அங்கேதான் வருகின்றனர்...''

தகவல் சொன்னான்.

''ரீனா... அவர்கள் வருகின்றனராம். லியோவின் தகவல். நீ உடனடியாக கோயாவை அனுப்பிவிடு...''

''பாதை அமைக்கும் வேலை எவ்வளவு முடிந்திருக்கிறது என்ற விவரத்தை லியோவிடம் சொல்லுங்கள். அவன் எங்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிப்பான். இப்போது நீங்கள் போய்விடுங்கள். சுரங்கக்காரர்கள் வருகின்றனராம்...''

விபரமாக கூறி, கோயாவை அனுப்பினர்.

ஹோட்டலில் இருந்து வரும் போதே சிறு பையில் வாங்கி வந்திருந்த சிப்பிகளைக் கூடாரத்தில் சிறு குவியல் போல வைத்து, அதைப் பிரிப்பது போல மாலினி நடிக்க ஆரம்பித்தாள்.

ரீனா ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து, அதில் குறிப்புகள் எழுதுவது போல பாவனை செய்தாள்.

சுரங்கக்காரர்கள் இருவரும், கூடாரத்துக்கு வந்தனர்.

ரீனாவும், மாலினியும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்த அவர்கள், நட்புடன் சிரித்து, கையை அசைத்து விட்டு, சுரங்க பகுதிக்கு செல்லும் திசையில் பேசிக்கொண்டே நடந்தனர்.

''தப்பினோம்..''

நிம்மதியடைந்தாள் மாலினி.

''இவர்களை நம்ப முடியாது மாலினி. நாம் எப்படி ஆராய்ச்சி செய்வது போல பாசாங்கு செய்கிறோமோ, அதைப்போல அவர்களும் நம்மை கண்டு கொள்ளாதது போல நகர்ந்து விட்டு, நம்மை கண்காணிக்கக் கூடும்...”

''என்ன செய்வது ரீனா...''

ரீனாவின் சந்தேகத்தால், மாலினிக்கு அச்சம் ஏற்பட்டது.

''லியோவுக்கு போன் செய்து அவர்கள் என்ன செய்கின்றனர் என்று பார்க்கச் சொல் மாலினி...”

மாலினி போன் செய்தாள்.

லியோவிடம் பேசிய மாலினியின் முகம் மாறியது.

''ரீனா... நீ சந்தேகப்பட்டது சரிதான்...'' என்றாள் மாலினி.



-- தொடரும்...

நரேஷ் அருண்குமார்






      Dinamalar
      Follow us