தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வினோத தீவு! (18)

வினோத தீவு! (18)

வினோத தீவு! (18)


PUBLISHED ON : நவ 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, ஆசிரியை ஜான்வி உதவியுடன் அவர்களை மீட்க திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை செயல்படுத்த துவங்கினர். இனி -



லியோவிடம் பேசிய மாலினியின் முகம் மாறியது.

''ரீனா... நீ சந்தேகப்பட்டது சரிதான்...” என்றாள் மாலினி.

''அவர்கள் மரங்களின் மறைவில் இருந்து பைனாகுலர் மூலம் நம்மை கண்காணிக்கின்றனராம். லியோ தகவல் சொன்னான்...'' என்றாள்.

''நினைத்தேன்... சரி, வா... சிறிது நேரம் கடற்கரையில் சிப்பி தேடுவது போல நடிக்கலாம்...''

மாலினியை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தாள் ரீனா.

அவர்கள் இருவரும் கடற்கரையில் சிப்பியை தேடி எடுப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தனர். சுரங்கக்காரர்கள் இருவரும் சிறிது நேரம் கண்காணித்து விட்டு, அங்கிருந்து நகர்ந்தனர்.

அன்று நான்காம் நாள்.

அதிரடி செயல்பாட்டிற்கு தயாராக வந்தாள் ரீனா.

லியோவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ''அந்த சுரங்கக்காரர்கள் இருவரும் தீவில் இருக்கின்றனரா...'' என்று விசாரித்தாள்.

''இல்லை... அவர்கள் சென்று விட்டனர்...'' என்றான் லியோ.

''அப்படியானால் நீ கடற்கரை பக்கம் வா...''

அவளையும், மாலினியையும் சந்தித்த போது, லியோ உற்சாகமாக இருந்தான். மொபைல் போன் மூலம் பேசியதில் அவனுக்கு பெருமையும், மகிழ்ச்சியும் தாளவில்லை.

''பழைய சுரங்கத்திற்கும், புதிய சுரங்கத்திற்கும் இடையிலான பாதை எந்த அளவுக்கு முடிவடைந்து இருக்கிறது என்ற விவரம் தெரியுமா...''

''பாதை அமைக்கப்பட்டு விட்டதாக, தலைவர் தகவல் சொல்ல சொன்னார்...''

ரீனாவின் கேள்விக்கு பதிலளித்தான் லியோ.

''அப்படியானால் நான் சுரங்கத்திற்குப் போகப் போகிறேன்...'' என்றாள் ரீனா.

லியோ சற்று அதிர்ச்சி அடைந்தான்.

''சுரங்கத்திற்கா... இதைப்பற்றி தலைவரிடம் நாம் சொல்லவில்லையே...'' என்றான்.

''அதனால் என்ன... இப்போது சொல்லி விடு, லியோ...'' என்றாள் ரீனா.

அவன் மிரண்டு போய் பார்த்தான்.

''அந்தப் பக்கம் போனாலே என்னை பிடித்துக் கொள்வர். அப்புறம் நான் அவ்வளவு தான்...''

''நீ ஏன் அந்த பக்கம் போகிறாய்... நமக்குத்தான் இப்போது புது வழி இருக்கிறதே. பழைய சுரங்கம் பக்கமாக போ. அங்கே யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா...''

தைரியம் கூறினாள் ரீனா.

''இருக்க மாட்டார்கள்தான்... அந்த சுரங்கத்தின் பக்கம் எப்போதாவது தான் வருவர்...''

லியோவிடம் இன்னும் தயக்கம் இருந்தது.

''அந்த சுரங்கத்திற்குள் நீ இறங்கி போய், கோயாவைச் சந்தித்து தகவலை சொல்லு. நானும் வருகிறேன். புறப்படு...'' என்ற ரீனா, லியோவின் பதிலை எதிர்பாராமல் கிளம்பினாள்.

''மாலினி நீ இங்கேயே இருந்து கொள். கூடாரத்தில் இரு. சுரங்கக்காரர்களான மதன்லால், சுர்ஜித் வந்தால், நான் அருகில் சென்றிருப்பது போல பேசி சமாளி. எனக்கு எதாவது தகவல் சொல்ல வேண்டுமென்றால், லியோவிடம் உள்ள மொபைல் போனில் பேசிக் கொள்ளலாம்...''

ரீனா கூறியதை ஏற்று, தலையசைத்தாள் மாலினி.

ரீனாவும், லியோவும் பழைய சுரங்கம் இருந்த பகுதிக்கு, 15 நிமிடத்தில் வந்தனர்.

மரங்களின் மறைவில் ரீனா நின்று கொண்டாள்.

லியோ ஒரு மரத்தின் மீது தாவி ஏறி, மேலிருந்து கண்காணித்தான். எவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு கீழே வந்து, பழைய சுரங்கத்தின் உள்ளே நுழைந்தான்.

புதிதாக அமைக்கப்பட்ட பாதை தெரிந்தது. அந்தப் பாதை அதிக ஆழமில்லாத பகுதியில் இருந்ததால், அவனுக்கு ஆக்சிஜன் உருளை தேவைப்பட வில்லை. இறங்கியவன், நல்ல அகலமான அந்த பாதையில் நுழைந்து, சுலபமாக சென்றான்.

சில நிமிடங்களில் இரண்டாவது சுரங்கத்தை இணைக்கும் இடத்திற்கு வந்து விட்டான், லியோ. சுரங்கத் தொழிலாளர்கள் சிதறிக் கிடந்த மணலை ரத்தினங்களோடு சேர்த்து அள்ளிக் கொண்டிருந்தனர். முதலில் நப்தலி தான், லியோவின் கண்ணில் பட்டான்.

''நப்தலி...'' என்று அழைத்தான் லியோ.

சத்தம் கேட்டு, நப்தலி திரும்பிப் பார்த்தான்.

''நீ எங்கே இங்கே வந்தாய்... ''

தாழ்ந்த குரலில், வியப்புடன் கேட்டான் நப்தலி.

''தலைவரிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும்...''

''நீ இங்கே இருப்பது பெரும் ஆபத்து...''

''கேமராவை இந்த பக்கம் நீ திருப்பாத வரை எனக்கு ஆபத்து இல்லை...'' என்று எச்சரித்தான் லியோ.

சற்று துாரத்தில் இருந்த கோயாவும் சத்தம் கேட்டு, லியோ அருகே வந்தார். அவர் அணிந்திருந்த கேமராவில் மண் பூசப்பட்டிருந்தது. ஆனாலும், அவர் கேமராவை அவன் பக்கம் திருப்பாதபடி கவனமாக நின்று கொண்டார்.

''நீ எதற்காக இங்கே வந்தாய் லியோ. இது ஆபத்தான பகுதி...'' ரகசியமான குரலில் கேட்டார் கோயா.

''நான் வந்தது இருக்கட்டும்; ரீனா வந்திருக்கிறாள் தெரியுமா...''

லியோ சென்னதும், கோயா அதிர்ந்து போனார்.

''ரீனாவா...''

''ஆமாம்... அவள் மரத்தடியில் மறைவாக இருக்கிறாள். அவள் உள்ளே இறங்கி வர வசதியாக, சுரங்கத்தின் வாசலை சற்று பெரிதாக்க வேண்டும்...''

அங்கிருந்த சுரங்கத் தொழிலாளி ஒருவனை அழைத்தார் கோயா.

''அந்த இடத்தில் மண் அவ்வளவு கடினமாக இருக்காது. சிறு குச்சி அல்லது கல்லால் தட்டினாலே உதிர்ந்து அந்த வழி பெரிதாகிவிடும்...'' என்ற கோயா, லியோவுடன் அவனை அனுப்பினார்.

அவன் மிகச் சுலபமாக பழைய சுரங்கத்தின் நுழைவாயிலை பெரிதாக்கினான். மெல்ல, தலையை வெளியில் நீட்டினான் லியோ. சுற்றுமுற்றும் பார்த்து, யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அங்கிருந்து வெளியேறி ரீனாவிடம் வந்தான்.

''நுழைவாயில் பெரிதாக்கப்பட்டு விட்டது, ரீனா. நீ போகலாம்...''

''மரத்தின் உச்சிக்கு சென்றிருந்து, யாராவது வருகின்றனரா என்பதைக் கவனி. வந்தால் எனக்கு தகவல் சொல்லு...'' என்ற ரீனா, விருட்டென விரைவாக ஓடி, நுழைவாயிலை அடைந்தாள்.

அது மிகச்சரியாக அவள் நுழையும் அளவுக்கு மட்டுமே இருந்தது. சற்று சிரமப்பட்டு தான் அவளால் உள்ளே நுழைய முடிந்தது.

தரையில் உட்கார்ந்து, கால்களை சுரங்க வாயிலினுள் செலுத்தி, பிறகு உடலை உள்ளே இழுத்து சுரங்கத்தினுள் இறங்கினாள். தவழ்ந்து செல்லும் அளவுக்கு அந்த பாதை இருந்தது. இரண்டாவது சுரங்கத்திற்கு அருகே தவழ்ந்து சென்று, அங்கிருந்த கோயாவை சந்தித்தாள்.



- தொடரும்...

நரேஷ் அருண்குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us