sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வினோத தீவு! (19)

/

வினோத தீவு! (19)

வினோத தீவு! (19)

வினோத தீவு! (19)


PUBLISHED ON : டிச 06, 2025

Google News

PUBLISHED ON : டிச 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, ஆசிரியை ஜான்வி உதவியுடன் அவர்களை மீட்க திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை செயல்படுத்த துவங்கினர். இனி -



''கோ யா... நான் இந்த பாதையில் படுத்தபடி தலையை மட்டும் நீட்டி சுரங்கத்தைப் பார்க்க விரும்புகிறேன். கேமரா இந்த பக்கம் திரும்பாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்...''

'சரி' என, கோயா தலையசைத்தார்.

இதுவரை ரீனாவின் பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருந்த நப்தலியும், அபியாவும் அவளை ஆர்வமுடன் பார்த்து புன்னகைத்தனர். பிற தொழிலாளர்களும் அவளை வியப்புடன் பார்த்தனர்.

''நீ உள்ளே வர முடியாது பாப்பா. இந்தப் பகுதி வரை தான் வெளிக்காற்று இருக்கும். இன்னும் கீழே போகப் போக, உயிர் காற்றின் அளவு குறைந்து கொண்டே வரும்...'' என்றார் கோயா.

''சுரங்கத்தின் அமைப்பை பார்க்கத்தான் வந்தேன். ஆனால், இது சுரங்கம் மாதிரியே இல்லையே...'' என்ற ரீனா, பார்வையை சற்றும் முற்றும் சுழற்றினாள்.

''இங்கே நீங்கள் எடுத்த ரத்தின கற்களை நான் பார்க்க முடியுமா...''

''கீழே மணலுடன் கலந்து இருக்கிறது. எடுத்து வரச் சொல்கிறேன்...'' என்ற கோயா, அங்கிருந்த தொழிலாளி ஒருவரிடம் கண்ணசைத்தார்.

உடனே, அவன் கீழே போய் ஒரு கைப்பிடி அளவுக்கு மண்ணை அள்ளி வந்து ரீனாவிடம் கொடுத்தான். அவன் கை சிறிதாக இருந்ததால், குறைவான அளவே மண் இருந்தது. அந்தக் கைப்பிடி மண்ணுக்குள், ரத்தின கற்கள் மூன்று இருந்தன. இரண்டு நீல கற்கள்; ஒன்று வெள்ளை.

ரீனாவின் முகத்தில் குழப்பம் தெரிந்தது.

அந்த சுரங்கத் தொழிலாளி கொண்டு வந்து கொடுத்த கைப்பிடி மணலுக்குள் இருந்த மூன்று ரத்தின கற்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு அளவிலும், வெவ்வேறு வண்ணங்களிலும் இருந்தன.

''இன்னும் கொஞ்சம் மண் கொடுங்கள்...''

சுரங்கத் தொழிலாளி கொடுத்த இரண்டாவது கைப்பிடி மண்ணில், பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற ரத்தினங்கள் இருந்தன.

மூன்று கைப்பிடி மண்ணை வாங்கி, அதை தன் உடையில் பத்திரப்படுத்திக் கொண்டாள் ரீனா.

''உள்ளே எத்தனை பேர் இருக்கிறீர்கள்...''

''இங்கே, சுரங்கத்திற்குள் 14 பேர் இருக்கிறோம்... மண்ணை வாங்கி ரத்தினங்களைப் பிரித்தெடுக்க வெளியில் உள்ள கூடாரத்தில், 18 பேர் இருக்கின்றனர்...''

எண்ணிக்கையை தெரிவித்தார் கோயா.

''இன்று இரவு ஜான்வி மிஸ்சுடன் பேசி விடுகிறேன். இன்னும் இரண்டே நாளில் இந்த சுரங்கக்காரர்களின் கொடுமைக்கு முடிவு கட்டிவிடலாம்...'' என்று, நம்பிக்கை தந்தாள் ரீனா.

சுரங்கத்தின் அமைப்பு, அங்கே அவர்கள் வேலை பார்க்கும் விதம், மூவர் உடலிலும் கட்டப்பட்டிருக்கும் வீடியோ கேமராவின் அமைப்பு, தான் பயன்படுத்திய பாதை போன்றவற்றை நன்றாக கவனித்து, மனதில் பதித்துக் கொண்டாள் ரீனா.

''நாளை முழுமையான திட்டத்தோடு வருகிறேன்...''

அவர்களிடம் கையசைத்து விடை பெற்று, தான் வந்த வழியில் திரும்பினாள் ரீனா.

வாசலின் அருகே அவள் வந்த போது, பேச்சு சத்தம் கேட்டது. அதுவும் வாசலுக்கு மிக அருகிலேயே கேட்டது.

'யார் அவர்கள், என்ன பேசுகின்றனர்' என்பதை புரிந்து கொள்ள முயன்ற ரீனா, ஒளிந்து நின்று அவர்களது உரையாடலை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். அப்போது, அவளது மொபைல் போன் அதிர்ந்தது.

லியோவிடமிருந்து அழைப்பு.

''பலமுறை உன்னைக் கூப்பிட்டுப் பார்த்தேன். அது ஆங்கிலத்தில் எதுவோ சொல்லுகிறது. நீ ஏன் போன் எடுக்கவில்லை...'' என்றான், லியோ.

''சுரங்கத்தின் உள்ளே இருந்ததால் என் மொபைல் போன் இயங்கவில்லை. டவர் பிராப்ளம், சரி, அதை விடு... என்ன விஷயம் சொல்லு...''

கிசுகிசுப்பான குரலில் பேசினாள் ரீனா.

''நீ வெளியில் வந்து விடாதே. நுழைவாயில் அருகில் சுரங்கக்காரர்கள் இருவர் இருக்கின்றனர்...''

''ஆமாம்... எனக்கும் அவர்கள் பேசும் சத்தம் கேட்கிறது. எப்போது வந்தனர்...''

''முன்பே வந்து விட்டனர். அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை உள்ளேயே இரு...'' என்றான், லியோ.

அவனது தகவலுக்காக காத்திருந்தாள் ரீனா. உள்ளே மிகக் குறைந்த அளவு காற்று இருந்ததால் சுவாசிப்பதற்கு திணறினாள்.

சிறிது நேரத்தில் லியோ, மீண்டும் போன் செய்தான்.

''அவர்கள் போய்விட்டனர். நீ வெளியில் வரலாம்...''

சுரங்கத்திற்கு வெளியில் வந்த ரீனா, வாய் வழியாக வேகவேகமாக சுவாசித்தாள்.

மரத்திலிருந்து கீழே வந்த லியோ, ''உனக்கு இன்னொரு சிக்கலும் இருக்கிறது...'' என்று சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்தாள் ரீனா.

''படகில் சென்ற அந்த இருவரும் மீண்டும் வந்து விட்டனர். எப்போது வேண்டுமானாலும் உங்கள் கூடாரத்துக்கு அவர்கள் வரக்கூடும்...''

லியோவின் தகவல், ரீனாவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

''வா... நாம் கூடாரத்துக்கு போகலாம்...''

அவன் வழி காட்ட, கடற்கரையை நோக்கி விரைந்தாள். ஓரிடத்தில் அவளை நிறுத்தினான் லியோ.

''இனி நீ போ... நான் மரத்தில் ஏறி கண்காணிப்புப் பணியை தொடர்கிறேன்...'' என்று சிரித்தவன், சட்டென பாய்ந்து மரத்தில் ஏறி, கிளைகளில் தாவி, உச்சிக்கு போய் விட்டான்.

கூடாரத்தில் மாலினியை சந்தித்தாள் ரீனா.

''என்னாச்சு...''

''அவர்கள் வந்தனர்... நீ சிப்பி ஆய்வுக்கு கடற்கரை சென்றிருப்பதாக கூறினேன். 'மரங்கள் இருக்கும் காட்டுப் பகுதிக்குச் செல்ல வேண்டாம்' என்று வழக்கமான பல்லவியைப் பாடிவிட்டு சென்றுவிட்டனர், ரீனா...''

மாலினியின் பதிலில், ரீனாவுக்கு திருப்தி ஏற்பட்டது.

''அதுவரை நல்லது. ஆனாலும் அவர்களை முழுமையாக நம்பக்கூடாது. அவர்கள் நம்மை சந்தேகக் கண்ணுடன் தான் பார்த்துக் கொண்டிருப்பர்...''

''அதுவும் சரிதான்... நான் உன்னை இரண்டு முறை தொடர்பு கொள்ள முயன்றேன். உன் மொபைல் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது...''

''ஆமாம்... நான் சுரங்கத்திற்குள் சென்று வந்தேன். அந்தச் சுரங்கத்தை பற்றி பல சந்தேகங்கள் இருக்கின்றன. அதில் இருந்து மண் மாதிரி கொஞ்சம் எடுத்து வந்திருக்கிறேன்...'' என்றாள், ரீனா.

அன்று இரவே அவர்கள் ஜான்வியைச் சந்தித்தனர். சுரங்கம் பற்றிய விவரங்களைக் கூறி, அங்கிருந்து கொண்டு வந்திருந்த ரத்தினங்களுடன் கூடிய மண்ணையும் கொடுத்தாள் ரீனா.

அதில் நீலம், வெள்ளை, இளம்பச்சை, இளஞ்சிவப்பு வண்ண ரத்தினங்கள் இருந்தன.

- தொடரும்...

நரேஷ் அருண்குமார்







      Dinamalar
      Follow us