
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, ஆசிரியை ஜான்வி உதவியுடன் மீட்க திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை விவரிக்க ஆரம்பித்தாள், ஜான்வி. இனி -
''ஆ ப்ரேஷன் லியோ அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது. உடனடியாக இந்த மண்ணையும், ரத்தினங்களையும் ஆய்வுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். ஆய்வு முடிவுகள் தெரியவந்ததும், சுரங்கத்தைப் பற்றிய முழு விவரத்தையும் நாம் அறிந்து கொள்ள முடியும்...'' என்று விவரித்தாள், ஆசிரியை ஜான்வி.
''அரசுத் தரப்பில் என்ன செய்தி, மிஸ்...'' என்று கேட்டாள், ரீனா.
''இந்தத் தீவை சோதனையிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறேன். சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்ததில், 'அங்கே எந்த ஒரு சட்டவிரோத நடவடிக்கையும் நடப்பதாகத் தெரியவில்லை' என்று முதல் கட்டமாக அறிக்கை கொடுத்திருக்கின்றனராம்...''
கவலையுடன் கூறினாள், ஜான்வி.
''ஆச்சரியம் தான்...''
''நீ கொண்டு வந்திருக்கும் இந்த மண்ணையும், ரத்தினங்களையும் ஆய்வுக்கு அனுப்பி, இது குறித்த விவரம் கிடைத்தால் தான், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாம் அழுத்தம் கொடுக்க முடியும்...'' என்றாள், ஜான்வி.
''அப்படியானால், இன்னும் தாமதமாகுமே மிஸ்...''
''ஆம். அலுவலக ரீதியாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் இருக்கும். அவற்றை பின்பற்றித் தானே அரசு நடவடிக்கை எடுக்க இயலும்...''
''சரி...'' என்றாள் ரீனா, சுரத்தில்லாமல்.
''எப்படியானாலும் இரண்டு நாட்களில் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்து விடுவேன். அதிகபட்சம் மூன்று நாட்கள்...''
''நாட்கள் குறைவாக இருக்கின்றனவே மிஸ்...''
''புரிகிறது ரீனா. அரசு நடைமுறைன்னு ஒன்று இருக்கிறதல்லவா...''
சமாதானம் கூறினாள் ஜான்வி.
''அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்... நாம் என்ன செய்ய வேண்டும் மிஸ்...''
மாலினி கேட்க, ஜான்வி விவரிக்க ஆரம்பித்தாள்...
''சிறப்பு புலனாய்வு குழுவினரும், மத்திய அரசின் சுரங்கத் துறை அதிகாரிகளும் வருவர். காவல் துறையினரோடு சேர்ந்து பணியாற்ற, மத்திய காவல் பாதுகாப்பு படை வீரர்களையும் மத்திய அரசு இங்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கிறேன். கடலோர காவல் படையினர், தீவைச் சுற்றி வளைப்பர். சுரங்கக்காரர்களை அதிரடியாக கைது செய்யும் நடவடிக்கை துவங்கும்...'' என்று நிறுத்திய ஜான்வி, யோசனையில் ஆழ்ந்தாள்.
' 'அந்த சமயத்தில், இங்குள்ள ஆதிவாசி மக்களுக்கும், அந்த இனப் பெண்களுக்கும் சுரங்கக்காரர்களால் எந்தவித தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது. அவர்களை முற்றிலும் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருக்க வைக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை, அங்கிருப்போருடன் கலந்து பேசி நீங்கள் திட்டமிடுங்கள்...'' என்றாள் ஜான்வி.
''சரி, மிஸ்... நாங்கள் செய்கிறோம்..'' தீர்க்கமாக கூறினாள் ரீனா.
''அந்த மக்களுக்கு தைரியம் கொடுங்கள். இந்தக் கொடுமையில் இருந்து அவர்கள் தப்ப வேண்டுமென்றால், அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்போரை எதிர்த்து, சில விஷயங்களை செய்ய வேண்டியதிருக்கும் என்பதை தெளிவு படுத்துங்கள். அவர்களை மனதளவில் தயார் செய்யுங்கள்...'' என்றாள், ஜான்வி.
ஆ ப்ரேஷன் லியோவின் ஐந்தாம் நாள்...
பழைய சுரங்கம் இருந்த பகுதிக்கு வந்தனர் ரீனாவும், மாலினியும். லியோ அங்கே காத்திருந்தான்.
''சுர்ஜித்தும், மதன்லாலும் தீவுக்கு வந்திருக்கின்றனரா...'' என்று கேட்டாள், ரீனா.
''இன்னும் இல்லை, ரீனா...''
''உங்கள் இனத் தலைவர்களிடம், நாங்கள் பேச வேண்டுமே லியோ...''
''சுரங்கத்திற்குள் தான் செல்ல வேண்டும்...''
''மாலினி நீயும் வருகிறாயா...''
மாலினி சற்று யோசித்தாள்.
''பரவாயில்லை, வந்து பார்... ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்...''
ரீனா அவளை உற்சாகப்படுத்த, துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, ஒப்புதலைத் தெரிவித்தாள் மாலினி.
அவர்கள் லியோவிடம் திரும்பினர். அவன் புரிந்து கொண்டான்.
''நான் மரத்தில் ஏறி, யாராவது வருகின்றனரா என்று கண்காணிக்கிறேன்...'' என்றவன், மரத்தின் மீது சரசரவென ஏறினான்.
சற்றிலும் பார்த்துவிட்டு, அந்தப் பகுதியில் யாரும் இல்லை என்பதை மொபைல் போன் மூலமாக தெரிவித்தான்.
''நீ முதலில் போ ரீனா. நான் பின்னால் வருகிறேன்...'' என்றாள் மாலினி.
''அங்கு போய், தரையில் உட்கார்ந்து காலை அந்த நுழைவாயிலில் வைத்து உள்ளே செல்ல வேண்டும். நான் எப்படி செல்கிறேன் என்று பார். அதேபோல் வந்துவிடு...''
''ம்...''
''உள்ளே மிகவும் நெருக்கடியாகத் தான் இருக்கும். எனக்கு பின்னால் தான் நீ வர முடியும். பார்த்து வா...'' என்ற ரீனா, நுழைவாயிலுக்கு சென்று, சுரங்கத்தினுள் இறங்கினாள்.
அவள் இறங்குவதை கவனித்துக் கொண்டிருந்த மாலினி, அவளை பின்பற்றி தானும் சுரங்கத்திற்குள் இறங்கினாள்.
ரீனாவின் மீது ஊர்ந்து, அவள் முதுகில் படுத்தபடி, சுரங்கத்தினுள் எட்டிப் பார்த்தாள், மாலினி.
அவர்கள் இரண்டாவது சுரங்கத்திற்கு வர, அவர்கள் வருவதை பார்த்த குட்டி மனுஷங்களின் தலைவர்களில் ஒருவரான கோயா அருகில் வந்தார்.
''மூன்று கேமராவிலும் மண்ணை துாவி விடுங்கள். அதற்கு முன் யாராவது ஒருவர் சுரங்கக்காரர்களிடம் போய், 'உள்ளே மணல் மிக அதிகமாக பறந்து கொண்டிருக்கிறது; சற்று நேரம் ஆகும்' என்று தெரிவியுங்கள்...''
ரீனாவின் ஆலோசனையை ஏற்று, ''நானே போகிறேன்...'' என்றார் கோயா.
மேலே வந்த கோயாவிடம், ''கேமராக்களுக்கு என்ன ஆச்சு... விஷுவல் தெளிவாக இல்லை...'' என்று, எரிச்சலுடன் கேட்டான், அன்பரசன்.
மூன்று கேமராவிலும் மண் துாவப்பட்டிருந்ததால், லேப்டாப்பில் அவனுக்குத் தெளிவான காட்சி கிடைக்கவில்லை.
''உள்ளே இருக்கும் மண் மிகவும் கடினமாக இருக்கிறது. சுரண்டும் போது நிறைய துாசி பறக்கிறது...'' என்றார் கோயா.
நப்தலியும், அபியாவும் உடனிருந்தனர்.
''என்ன சொல்ல வருகிறாய்...''
''வேலை தாமதமாகும். அந்தத் தகவலைச் சொல்வதற்காக வந்தேன்...''
''சரி, சரி... போய் வேலையை பார்...'' என்றான் அன்பரசன்.
மீண்டும் சுரங்கத்திற்குள் வந்தார் கோயா.
''நாம் பேசுவது அவருக்கு கேட்காது தானே...''
ரீனாவிடம் சந்தேகத்துடன் கேட்டார் கோயா.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்

