
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, ஆசிரியை ஜான்வி உதவியுடன் மீட்க திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை செயல்படுத்த துவங்கினர். இனி -
கேமரா குறித்து சந்தேகம் எழுப்பினார் குட்டி மனுஷங்களின் தலைவர்களில் ஒருவரான கோயா.
''இவை வெறும் கேமராக்கள் மட்டுமே. நீங்கள் உள்ளே பேசுவது, வெளியில் கேட்காது. அதற்கு தனி கருவி வேண்டும். எனவே நாம் தைரியமாக பேசலாம்...'' என்றாள், மாலினி.
''அது எப்படி உனக்கு தெரியும்...''
கோயாவின் சந்தேகம் விலகவில்லை.
''முதல் முறை இந்த கேமராவை பார்த்த போதே, நான் என் மொபைல் போனில் படம் எடுத்து, அது என்ன மாடல், அதன் செயல்திறன் என்ன என்பதையெல்லாம் இணையத்தில் தேடிப் பார்த்து தெரிந்து கொண்டேன்...'' என்று புன்னகைத்தாள் அவள்.
''பாப்பா... நீ ரொம்ப புத்திசாலி...''
மாலினியை பாராட்டினர், உடனிருந்த இனத்தலைவர்கள் அபியா, நப்தலி.
''ஜான்வி மிஸ்சிடம் பேசி விட்டோம். அவர், மத்திய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். நமக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அதற்குள் நாம் வேலைகளை முடித்தாக வேண்டும்...'' என்றாள், ரீனா.
இனத்தலைவர்கள் மூவரும், அவளை நம்பிக்கையோடு பார்த்தனர்.
''உங்களுக்காக அதிகாரிகளும், காவல் பாதுகாப்பு படை வீரர்களும் வருகின்றனர். அவர்கள் இந்த சுரங்கக்காரர்களை சுற்றி வளைக்கும் போது, இந்தத் தீவின் மக்களாகிய நீங்கள், ஒரு பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மிஸ் செய்ய சொல்லி இருக்கிறார்...'' என்றாள், மாலினி.
''நாங்கள் எதற்காக பாதுகாப்பான இடத்திற்கு போக வேண்டும்... புரியவில்லையே...'' என்றான், அபியா.
''மத்திய அரசின் காவல் பாதுகாப்பு படை வீரர்கள், இந்த சுரங்கக்காரர்களை சுற்றி வளைக்கும் போது, அவர்கள் கடல் மார்க்கமாக தான் தப்பிச் செல்ல முடியும். படகில் அவர்கள் சர்வதேச கடற்பகுதிக்கு சென்று விட்டால், நம் அரசாங்கத்தால் அவர்களை எதுவும் செய்ய முடியாது...'' என்றாள், மாலினி.
''அவர்கள் போனால் போய்த் தொலையட்டும். இந்தத் தீவிலிருந்து ஒழிந்தால் சரி. எங்களுக்கு தேவை நிம்மதியான வாழ்க்கை...'' என்றார், கோயா.
''அந்த சமயத்தில் அவர்களால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் கோயா...'' என்றாள், ரீனா. அதற்கான காரணத்தையும் விளக்க ஆரம்பித்தாள்...
''காவல் வீரர்கள் சுற்றி வளைக்கும் போது, இவர்கள் தப்பிச் செல்வதற்கு உங்கள் ஆட்களைப் பணயக் கைதியாக பிடித்து வைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அப்படி எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக தான், நீங்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என்கிறோம்...''
''தீவின் நடுவில் சாமிக்குன்று என்றொரு பகுதி இருக்கிறது. குகைகளும், மரங்களும் நிறைந்த பகுதி அது. அந்த இடம் பாதுகாப்பானது. நிறைய மறைவிடங்கள் அங்கே உண்டு...'' என்றார், கோயா.
''ஆமாம்... அது பாதுகாப்பான இடம் தான்...''
ஆமோதித்தான் அபியா.
''அப்படியானால் மீட்பு நடவடிக்கையின் போது இங்குள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் அங்கே போய் விட வேண்டும்...''
கண்டிப்புடன் கூறினாள் ரீனா.
''சரி... எல்லாருக்கும் விபரம் சொல்லி விடுகிறோம்...''
''எல்லாருக்கும் ஒரே நேரத்தில் எப்படி சொல்ல முடியும்...''
''எங்களுக்கென ஒரு வினோதமான சமிக்ஞை ஒலி வைத்திருக்கிறோம். மறைவிடத்திற்கு செல்ல வேண்டிய நேரத்தில், நாங்கள் அந்த சமிக்ஞை ஒலியை எழுப்பி, எல்லாரையும் அங்கு வரச் செய்து விடுவோம்...''
அபியாவின் யோசனையில், திருப்தியடைந்தாள் ரீனா.
''சூப்பர்... அதே நாளில், இந்த ஐந்து சுரங்கக்காரர்களின் செயல்பாடுகளையும் முடக்க வேண்டும்...''
''செயல்பாடுகள் என்றால்...''
சந்தேகம் கேட்டான் அபியா.
''முக்கியமாக இரண்டே விஷயம் தான்... ஒன்று, இவர்களது தகவல் தொடர்பு; இரண்டாவது, போக்குவரத்து. இந்த இரண்டையும் முடக்கி விட்டால், அவர்களை இந்தத் தீவுக்குள்ளேயே நாம் கட்டுப்படுத்தி விடலாம்...'' என்றாள், ரீனா.
''கேட்க நன்றாக தான் இருக்கிறது. ஆனால், சாத்தியமா...'' என்றான், அபியா.
''முயற்சி செய்தால் சாத்தியம் தான். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் வெளியில் திட்டமிடுகிறோம். நீங்கள் இந்த கொடியவர்களின் பிடியிலிருந்து தப்புவதற்கு தயாராகிக் கொள்ளுங்கள்...''
திடீரென நினைவு வந்தவளாக ரீனா சொன்னாள்...
''நீங்கள் எல்லாரும் அந்தக் குன்றுக்கு போகும் போது, போதுமான உணவு, தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு நாளுக்கான சாப்பாடாவது தேவையிருக்கும்...''
''ஏன்...''
''ஒருவேளை நீங்கள் அங்கே போன பிறகு, அங்கிருந்து மீண்டும் உங்கள் குடியிருப்பு பகுதிக்கு திரும்புவதற்கு ஓரிரு நாட்களாகலாம். அந்த சமயத்தில் உணவுக்கும், தண்ணீருக்கும் என்ன செய்வீர்கள்...''
''இந்தப் பொண்ணு சொல்லுவது சரிதான் தலைவரே... சாமிக்குன்றுக்கு போய்விட்டு நாம் திரும்பி வருவதற்கு முன்னே, பின்னே ஆகுமானால் சாப்பாடும், தண்ணீரும் பிரச்னையாகிவிடும்...''
ஆமோதித்தான் அபியா.
''நீங்கள் செல்லும் நேரத்தில் இதையெல்லாம் எடுத்துக்கொண்டு போவதற்கு அவகாசம் இருக்குமோ, இருக்காதோ தெரியவில்லை. இப்போதே அந்த இடத்தில், கெட்டுப் போகாத உணவுகளையும், தண்ணீரையும் சேமித்து வைத்து விட்டால் நல்லது...'' என்று, ஐடியா கொடுத்தாள் மாலினி.
''ரொம்ப முன்னெச்சரிக்கையாக யோசிக்கிறீர்கள்...''
பாராட்டினான் நப்தலி.
''எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாத சில வகை பழங்களும், கிழங்குகளும் இருக்கின்றன. அவற்றை இப்போதே அங்கே கொண்டு போய், ஏதாவது ஒரு குகையில் வைத்துக் கொள்ளலாம். தண்ணீருக்குப் பிரச்னை இல்லை; அங்கே ஒரு சின்ன நீரூற்று இருக்கிறது...'' என்றார், கோயா.
திட்டமிடுதல் பற்றிய விவாதத்திற்கு பின், அவர்களிடமிருந்து விடை பெற்று முதலில் மாலினியும், அவளைத் தொடர்ந்து ரீனாவும் வெளியில் வந்தனர்.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்

