
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, ஆசிரியை ஜான்வி உதவியுடன் மீட்க திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை, குட்டி மனுஷங்களில் ஒருவனான லியோவுடன் இணைந்து செயல்படுத்த துவங்கினர். இனி -
சுரங்கக்காரர்கள் படகின் ஒயர்களை துண்டித்தால், அதை பயன்படுத்த முடியாது என்று ரீனா கூறிய யோசனையை, மாலினியும் ஏற்றுக்கொண்டாள்.
ரீனாவும், மாலினியும் ஒரே நேரத்தில் லியோவைத் திரும்பி பார்த்தனர்.
“இது என்ன பிரமாதம். நான் செய்து விடுகிறேன்...'' என்றான் லியோ.
“இதையெல்லாம் என்றைக்குச் செய்ய வேண்டும்...''
சந்தேகம் எழுப்பினாள் மாலினி.
''அரசு நடவடிக்கை எடுக்கவிருக்கும் நாளுக்கு முன்தினம், இவற்றை செயல்படுத்தலாம்... இன்று இரவு, இந்தத் திட்டங்களை ஜான்வி மிஸ்ஸிடம் சொல்லிவிடலாம் மாலினி...''
''இதைச் செய்யும்போது, இந்த தீவின் சுரங்க தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு போய் விட வேண்டும். இல்லையா...''
திட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டான், லியோ.
''உங்கள் தலைவரிடம் பேசும் போது ஏதோ, 'வினோதமான சமிக்ஞை ஒலி' என்று கூறினாரே, அது என்ன...''
சட்டென நினைவு வந்தவளாக, லியோவிடம் கேட்டாள் ரீனா.
' 'ஓ... அதுவா... ஏதாவது ஆபத்து என்றாலும், அவசர உதவி தேவைப்பட்டாலும் மட்டுமே அந்த ஒலியை எழுப்புவோம். ஒலி கேட்கும் இடத்திற்கு எல்லாரும் ஓடி வருவர். அந்த ஒலியையே, ஒன்றுக்கு மேற்பட்ட முறை எழுப்பினால், எங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள சாமி மைதானத்தில் எல்லாரும் கூடி விடுவர்...''
''அந்த சத்தத்தை எழுப்ப உனக்கும் தெரியுமா...''
''எனக்கு மட்டுமல்ல... எங்கள் இனத்தில் உள்ள அனைவருக்கும் அந்த சமிக்ஞை ஒலியை எழுப்பத் தெரியும். இப்போது கூட உங்களுக்கு அந்த ஒலியை எழுப்பிக் காட்டி விடுவேன். ஆனால் அந்தச் சமிக்ஞையை கேட்டால், எல்லாரும் இங்கே ஓடி வந்து விடுவர். பரவாயில்லையா...''
சிரித்தபடி, ரீனாவிடம் கூறினான் லியோ.
''ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் குறும்பு...''
செல்லமாக அவன் தலையில் கொட்டினாள், மாலினி.
''உணவுக்கான நேரம் வந்துவிட்டது. நீயும் வா லியோ... கூடாரத்தில் சாப்பாடு இருக்கிறது. சாப்பிடலாம்...'' என்றாள், ரீனா.
''நாம சாப்பிடுறது இருக்கட்டும்... எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்...''
பதிலை எதிர்பாராமல், மரங்களில் தாவி சென்றான் லியோ.
மாலினியும், ரீனாவும் கூடாரத்தை நோக்கி நடந்தனர்.
கூடாரத்தை நெருங்கிய போது, ரீனாவை முன்னே நகர விடாமல் தடுத்தாள் மாலினி.
''நாம் ஆபத்தில் இருக்கிறோம். அங்கே பார்...''
அவள் சுட்டிக்காட்டிய மரக்கிளையைப் பார்த்த ரீனா, அதிர்ந்தாள்.
மாலினி சுட்டிக்காட்டிய மரக்கிளையில், கூடாரத்தை நோக்கி ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கூடாரத்திற்கு வருவது, கூடாரத்திலிருந்து வெளியே செல்வது போன்ற எல்லாவற்றையும் கண்காணிக்கும் வகையில், அது அமைக்கப்பட்டிருந்ததது.
''இந்தக் கண்காணிப்பு கேமரா இதுவரை இல்லை. இப்போது தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நம்மை அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்...'' என்றாள், மாலினி.
''அப்படியானால் லியோ நம்மோடு இருப்பதையும் அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்பர்...'' என்றாள், ரீனா.
''முதலில் இந்த கேமராவை பிடுங்கி எறிய வேண்டும்...''
கோபத்தில் கொந்தளித்தாள் மாலினி.
''இந்த ஒரு கேமராவை பிடுங்கி எறிந்து விடலாம். ஆனால், இதை போல இன்னும் எத்தனை கேமராக்கள் இருக்கிறதோ தெரியவில்லையே...''
மாலினியிடம் கூறியபடி, சுற்றிலும் உன்னிப்பாக கவனித்தாள் ரீனா.
''அதோ, அங்கே ஒன்று இருக்கிறது...'' என, ரீனா சுட்டிக்காட்டிய திசையிலும், மரத்தில் ஒரு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.
''இடது பக்கம் பார், ரீனா. தொலைவில் அந்த மரத்தில்... அதுவும் கேமரா தானே...''
''ஆம், கேமராதான்... நம் நடமாட்டம் முழுவதையும் அவர்கள் கண்காணிக்கின்றனர். அப்படியானால் நாம் சுரங்கத்துக்கு போய் வருவதும் அவர்களுக்குத் தெரிந்திருக்குமே...'' என்றாள், ரீனா.
அவர்களுக்குள் பதற்றம் ஏற்பட்டது.
''என்ன செய்வது...''
அச்சத்துடன் கேட்டாள், மாலினி.
''இப்போது, நாம் இந்த கேமராக்களைப் பார்ப்பதைக் கூட அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்பர்...'' என்றாள், ரீனா.
''அங்கு யாரும் இல்லையென்றால், நாம் போய் கேமராக்களின் தொடர்பு ஒயரை துண்டித்து விடலாமே...'' என்றாள், மாலினி
''சூப்பர் ஐடியா...'' என்றாள் ரீனா, உற்சாகமாக.
அப்போது மீண்டும் அவர்களிடம் வந்து சேர்ந்தான் லியோ.
''லியோ, நீ அவர்களை திசை திருப்பி கூடாரத்திலிருந்து தள்ளி அழைத்து சென்று விடு... எங்களுக்கு கூடாரத்தில் ஒரு வேலை இருக்கிறது...'' என்றாள், ரீனா.
''அது என்ன பிரமாதம்... செய்து விடுகிறேன்...'' என்றான் லியோ, வழக்கமான உற்சாகத்துடன்.
''மொபைல் போனை கீழே போட்டு விடாதே. அவர்கள் கையில் கிடைத்து விடக்கூடாது...''
எச்சரித்தாள் மாலினி.
''வா, மாலினி...''
மாலினியை அழைத்துக் கொண்டு, ரீனா அந்த கூடாரத்துக்கு வந்த போது, அங்கு யாரும் இல்லை. லேப்டாப் திறந்த நிலையில் இருந்தது. அதில் மூன்று கேமராக்கள் இயங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. சுரங்கத்தின் உட்புற காட்சிகள் தெரிந்தன.
''இங்கே யாரும் இல்லையா... சுரங்கத் தொழிலாளர்களைக் கூட காணோம், ரீனா...''
''அவர்கள் சாப்பிட போயிருப்பர். வா, நாம் வேலையைப் பார்ப்போம்...''
''இந்த லேப்டாப்பை 'சுட்டு' விடலாம் ரீனா...''
''சூப்பர் ஐடியா...'' என்றாள், ரீனா.
அவர்கள் அந்த லேப்டாப்பை அப்படியே மூடி எடுத்துக் கொண்டதோடு, அதன் மின் இணைப்புக்கான ஒயரையும் கழற்றி எடுத்துக் கொண்டனர்.
அங்கிருந்து அவசரமாக கன்டெய்னர் இருக்கும் இடத்திற்கு வந்தனர். பைபர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்த அந்த கன்டெய்னரின் கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்

