
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, ஆசிரியை ஜான்வி உதவியுடன் மீட்க திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை, குட்டி மனுஷங்களில் ஒருவனான லியோவுடன் இணைந்து செயல்படுத்த துவங்கினர். இனி -
கன்டெய்னர் கதவு பூட்டப்படாததால், அதை எளிதாக திறந்து உள்ளே நுழைந்தனர், ரீனாவும், மாலினியும்.
கதவை திறந்ததும், ஒரு சிறிய சமையலறை, அலமாரிகளில் மாற்று உடைகள், தண்ணீர் கேன்கள், காபி மேக்கர், மடக்கு கட்டில்கள், ஒரு ஈசி சேர் ஆகியவை இருந்தன. உள்ளே, ஒரு பெரிய மானிட்டரும் இருந்தது. அதில் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த, 32 கேமராக்களின் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.
''இதை எல்லாம் நின்று, கவனித்துப் பார்க்க நமக்கு நேரம் இல்லை; முதலில் இதன் ஒயரை அறுத்து விடு...'' என்றாள் மாலினி.
அதன் ஒயரைப் பிடித்து இழுத்து, அறுக்க முயன்றனர்; இயலவில்லை. அதை வெட்டுவதற்கு ஏதாவது கருவி கிடைக்குமா என்று தேடினர். அரிவாள் ஒன்று இருந்தது.
ரீனா அதை எடுத்து, ஒயரை துண்டிக்க முயன்றாள்.
''ஒரு நிமிஷம் ரீனா... அவசரப்படாதே. ஆபத்து...'' என்று தடுத்தாள், மாலினி.
''அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும். முதலில் மின் இணைப்பை துண்டித்து விடலாம்...'' என்றாள்.
அங்கிருந்த மின்சார கேபிள்களை, பிளக்கிலிருந்து பிடுங்கி மின் இணைப்புகளை துண்டித்தனர். பின், வெளியில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்களுக்கு செல்லும் ஒயர்களையும் துண்டித்தனர்.
''அவர்கள் வருவதற்குள் ஓடிவிடலாம், வா...''
அவரசரப்படுத்தினாள் மாலினி.
''கொஞ்சம் இரு...'' என்றாள், ரீனா.
“நேரம் ஆகிறது. வா... முதலில் இங்கிருந்து நாம் ஓடிவிட வேண்டும்...''
''அவசரப்படாதே... நாம் ஒயரை துண்டித்தாலும், இந்தக் கேமராவின் காட்சிப்பதிவுகள், இங்கிருக்கும் டிஜிட்டல் வீடியோ பதிவு கருவியில் பதிவாகி இருக்கும். அதனால் அதிலிருந்து, 'ஹார்ட் டிஸ்க்'கை எடுத்துவிட வேண்டும்...''
எச்சரித்த ரீனா அங்கும், இங்கும் தேடினாள்.
திறந்தநிலை அலமாரியில், வீடியோ கண்காணிப்பு கேமராவின் டிஜிட்டல் பதிவு கருவி இருந்தது.
''இதைக் கழற்றி, ஹார்டு டிஸ்க்கை எடுக்க போதுமான நேரம் இல்லை. அப்படியே துாக்கிக் கொள், மாலினி...''
ஏற்கனவே ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்ததால் அந்தக் கருவியை எடுப்பது எளிதாக இருந்தது. கருவியுடன் இருவரும் வெளியில் வந்தனர்.
''இன்னும் ஏதேனும் கருவிகள் இருக்கின்றனவா என்று பார்க்கலாமா, ரீனா...''
''இதை துாக்கிக் கொண்டு ஓடுவதே சிரமமாக இருக்கிறது, மாலினி. போதும் வா...''
''சிரமமாக இருந்தால், இதை இங்கேயே ஏதாவது புதரில் மறைத்து வைத்து விடலாமா...''
யோசனை தெரிவித்தாள் மாலினி.
''அவர்கள் கண்டுபிடித்து விடக்கூடும்...''
சுற்றுமுற்றும் பார்த்தாள் ரீனா.
''ஒரு ஐடியா...''
''சொல்லு மாலினி...''
''பழைய சுரங்கம் இருக்கிறதல்லவா... அதனுள் இதை போட்டுவிடலாம். அவர்களால் எடுக்கவும் முடியாது; இது இருப்பதும் தெரியாது...''
“சூப்பர்...” என்ற ரீனா, அந்தக் கருவியை பழைய சுரங்கத்தின் வாசல் வழியாக உள்ளே தள்ளினாள்.
''வா... போகலாம்...''
கூடாரத்தை நோக்கி நகர முயன்ற போது, ரீனா தடுத்தாள்.
''இந்தச் சூழலில் கூடாரத்துக்குச் செல்வது எவ்வளவு பாதுகாப்பானது என்று தெரியவில்லை. முதலில், லியோ எங்கிருக்கிறான் என்று பார், மாலினி...''
லியோவுக்கு போன் செய்தாள், மாலினி.
''எங்கிருக்கிறாய் லியோ...''
''நான் பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன். மரத்தில் ஏறி சுரங்கக்காரர்களின் கண்ணில் படுமாறு கிளைகளில் அங்குமிங்கும் தாவி, அவர்களைச் சுரங்கத்திலிருந்து வெகு தொலைவுக்கு அழைத்து வந்து விட்டேன். இன்னும் கொஞ்ச துாரம் சென்றால், தீவின் மறு கரையே வந்துவிடும்...''
சிரித்தபடி சொன்னான், லியோ.
''அவர்கள் கண்ணில் படாமல், நாங்கள் இருக்கும் இடத்திற்கு வர முடியுமா...” என்றாள், மாலினி.
''அது என்ன பிரமாதம்... இதோ, வந்து விடுகிறேன்...''
வழக்கமான உற்சாகத்துடன் கூறினான் லியோ.
''அவர்கள் உன்னைப் பின்தொடர்ந்து வந்தால்...''
''அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. மரத்தின் உச்சிக்குச் சென்று விட்டால், அவர்கள் கண்ணில் படாமல் மறைந்து வந்து விடுவேன். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்...''
''பழைய சுரங்கம் அருகில் இருக்கிறோம்...''
''அங்கேயே இருங்கள்... நான் பத்து நிமிடத்திற்குள் வந்து விடுகிறேன். தரை வழியாக அவர்கள் வருவதற்கு, எப்படியும் அரை மணி நேரத்திற்கும் மேலாகும். ஆனால், மரங்களின் வழியாக நான் உடனே வந்து விடுவேன்...'' என்றான், லியோ.
சொன்னபடி வந்து சேர்ந்தான், லியோ.
அவன், மூன்று மொபைல் போன்களுடன், ஒரு வாக்கி டாக்கி கருவியையும் எடுத்து வந்திருந்தான்.
''இது போன் அல்ல; வாக்கி டாக்கி கருவி...'' என்றாள், அதைப் பார்த்த மாலினி.
''இது நமக்கு உதவும். அந்த மொபைல் போன்களில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்க முடியுமா என்று பார்... மெசேஜ் பார்க்க முடியுமா... வாட்ஸாப் தகவல்கள் ஏதாவது இருக்கின்றனவா...''
''கேள்விகளை அடுக்காதே, ரீனா... 'பாஸ்வேர்டு' போட்டு 'லாக்' செய்து இருக்கின்றனர். இப்போதைக்கு வேலைக்காகாது...''
''இந்த மொபைல் போன்கள் நம்மிடம் இருப்பது மிகவும் ஆபத்து...''
ரீனா எச்சரித்தாள்.
''ஏன், வெடித்து விடுமா...'' என்றான், லியோ.
''உன் குறும்பு வாயைக் கொஞ்ச நேரம் கூட மூடிக்கொண்டு இருக்க மாட்டாயா... இதில் ஜி.பி.எஸ்., இருக்கும். இந்த போன் எங்கே இருக்கிறது என்பதை, அவர்களால் மிக எளிதில் கண்டுபிடித்து விட முடியும். முதலில் இதை 'ஸ்விட்ச் ஆப்' செய்ய வேண்டும்...''
போன்களின் இயக்கத்தை நிறுத்தினாள், ரீனா.
“போன் இயங்காவிட்டால் கூட, அதன் ஜி.பி.எஸ்.,சும், அதன் கடிகாரமும் இயங்கிக் கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது...'' என்றாள், மாலினி.
ரீனாவுக்கு குழப்பம் ஏற்பட்டது.
-- தொடரும்...
நரேஷ் அருண்குமார்

