
புதுச்சேரி, வீரமாமுனிவர் அரசுப் பள்ளியில், 1972ம் ஆண்டில், 9ம் வகுப்பு படித்தேன். அப்போது, மாநில அளவிலான தமிழ் நாடகப் போட்டி அறிவிக்கப்பட்டது. எங்கள் தமிழாசிரியர் முத்துக்குமாரசாமி, 'சித்தார்த்தன் துறவு' என்ற, புத்தர் பற்றிய நாடகத்தை எழுதி, இயக்கினார்.
நடிகர்களைத் தேர்வு செய்யும் போது, கதாநாயகன் சித்தார்த்தன் பாத்திரத்தில், பலத்த போட்டிக்கு இடையே என்னை நடிக்க அழைத்தார். ஆனால், தமிழ் உச்சரிப்பில் என்னை விட சிறந்து விளங்கும், சக மாணவன் குணசேகரனை, நான் பரிந்துரைத்தேன். நாடகம் சிறப்பாக அரங்கேற்றப்பட்டு, மாநில அளவில் முதலிடம் பெற்றது.
அப்போது நடந்த பாராட்டு விழாவில், மறக்காமல் என் பெயரைக் குறிப்பிட்டார், தமிழாசிரியர். கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருந்தும், பெருந்தன்மையுடன் அந்த வாய்ப்பை சரியான ஒரு மாணவனுக்கு வழங்கியதாக, என்னுடைய செயலை மிகவும் பாராட்டிப் பேசினார்.
'சுயநலம் கருதாமல் எடுத்த இந்த முடிவு, நாடகம் வெற்றி பெறக் காரணமாக அமைந்தது' என்றும், என்னை, 'உண்மையான கதாநாயகன்' என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டர். இந்நிகழ்வு, இன்றும் என் மனதில் பசுமையாக நிழலாடுகிறது.
தற்போது என் வயது, 67. மத்திய அரசு அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். ஆசிரியராக பணியாற்றும் என் மனைவி, நண்பர்கள், மாணவர்கள் ஆகியோர், நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் உருவாக்கி, அதில் திருத்தம் கேட்டு வந்தால், மகிழ்ச்சியுடன் உதவி செய்கிறேன். என்னுடைய சிறப்பான பங்கு அதில் நிச்சயம் இருக்கும்.
என்னுள் தமிழ் ஆர்வத்தை வளர்த்த, தமிழாசிரியர் முத்துக்குமாரசாமிக்கு என் மனமார்ந்த நன்றியையும், வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறேன்.
- கே.எஸ்.குரு, புதுச்சேரி. தொடர்புக்கு: 99445 37044

