PUBLISHED ON : ஜூன் 27, 2026

கோவை, ராம்நகர், சபர்பன் மேல்நிலைப் பள்ளியில், 1997ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி...
உடற்பயிற்சி ஆசிரியையாக இருந்த சிவகாமி, மாநில அளவில் பரிசுகளை பெற்றவர். பாகுபாடின்றி பயிற்சி அளிப்பார். விளையாட்டுகளில் பங்கேற்க துாண்டுவார். கூடைப்பந்து விளையாட்டு எனக்கு மிகவும் விருப்பமானது. மிகவும் குள்ளம் என்பதால், நான் போடும் பந்து, கூடைக்குள் விழாது; கைப்பந்து விளையாட்டிலும், வலையை தாண்டி செல்லாது.
முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டதால், கவலையில் விளையாட்டை தவிர்த்து வந்தேன். சோர்ந்து, மரத்தடியில் அமர்ந்திருந்த என்னை கவனித்து விசாரித்தார், உடற்பயிற்சி ஆசிரியை. உயரம் குறைவால் ஏற்பட்ட மனக்குறையை கூறினேன்.
நம்பிக்கையூட்டும் வகையில், 'வெற்றியோ, தோல்வியோ... தைரியமாக பங்கு கொள். அதுவே புகழைத் தேடித் தரும்...' என, அறிவுரைத்து உற்சாகம் ஊட்டினார். பின், தைரியமாக பங்கேற்று பரிசுகள் வென்றேன். பள்ளி ஆண்டு விழாவில் இரண்டாம் பரிசு பெற்றேன்.
எனக்கு, 39 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறேன். சோர்வை போக்கும் வகையில், உடற்பயிற்சி ஆசிரியை சிவகாமி, அன்று தந்த அறிவுரையை, நான் சந்திக்கும் மாணவ செல்வங்களிடம் பகிர்வதை வழக்கமாக்கி இருக்கிறேன். நல்வழிகாட்டியவருக்கு, உள்ளம் நிறைந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.
- ப.நித்யா, கோவை. தொடர்புக்கு: 98426 48906
