PUBLISHED ON : ஆக 15, 2026

மயிலாடுதுறை, தி.ப.தி.ரெங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில், 1989ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
வகுப்பாசிரியராக இருந்த, எம்.ராமச்சந்திரன், ஆங்கில கவிதைகளை நயமுடன் கற்றுக் கொடுப்பார். இங்கிலாந்து கவிஞர் ஆன் டெய்லர் எழுதிய, 'மை மதர்' என்ற கவிதையை கற்பித்த விதம், இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது.
கவிதையை நடத்தி முடித்து வகுப்பறையிலே அதை வாசிக்கச் சொன்னார். எந்த உணர்வும் இன்றி வாசித்தேன். அப்போது, சந்தத்துக்கு ஏற்ப, கவிதையை வாசிக்க வேண்டிய விதம்; குரலில் கொடுக்க வேண்டிய ஏற்ற, இறக்கம்; நிறுத்தி, நிதானமாக வாசிப்பதில் உள்ள சிறப்புகளை விளக்கி, புரிய வைத்தார். அதை உணர்ந்து கொண்டேன். மேடையில் கவிதை வாசிக்கும் போதெல்லாம், அந்த அறிவுரைகளை பின்பற்றுகிறேன்.
இந்திய சுதந்திர, 75-ம் ஆண்டை யொட்டி, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், கேந்த்ரிய ஹிந்தி சன்ஸ்தான், ஒரு கவிதை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில், ஹிந்தி தாய்மொழி அல்லாத, ஹிந்தி மொழியை அறிந்த கவிஞர்களுக்கான கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நான் வாசித்த கவிதையை, அனைவரும் ரசித்ததை, கூட்டத்தில் எழுந்த கர ஒலியால் அறிந்து மகிழ்ந்தேன்.
எனக்கு, 50 வயதாகிறது; எழுத்தாளராக உள்ளேன். கவிதை தொகுப்பு புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். இதற்கு, வகுப்பாசிரியர் எம்.ராமச்சந்திரன் கற்பித்த விதமே, அடிப்படையாக அமைந்துள்ளது. வாழ்வின் உயர்வுக்கு வழிகாட்டியவரை போற்றுகிறேன்.
- ஜெயஸ்ரீ எம்.சாரி, சென்னை.
தொடர்புக்கு: 94059 03763
