
கோவை, ஸ்ரீ நரசிம்மலு நாயுடு உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 8ம் வகுப்பில் படித்த போது நடந்த சம்பவம்...
தமிழாசிரியராக இருந்த புலவர் புவியரசு, கையெழுத்து அழகுடன் அமைய கவனம் செலுத்துவார். தக்க பயிற்சி தருவார். என் நோட்டு புத்தகத்தை பார்த்ததும், 'கோழி கிண்டியது போல இருக்கிறது...' என கண்டித்தார்.
அது அடித்தல் திருத்தலுடன் அலங்கோலமாகயிருந்ததால், 'தினமும் அரை மணி நேரம் எழுத்துப் பயிற்சியில் ஈடுபடு... நேர் கோட்டில் கோணல் மாணல் இன்றி எழுத்துகளை கொம்பு நீட்டி, வார்த்தைக்கு வார்த்தை இடம் விட்டு சீராக எழுதுவதற்கு பயிற்சி செய்...' என உத்திகளை கற்றுக் கொடுத்தார்.
அதன்படி கையெழுத்தை முத்து முத்தாக ஜொலிக்க வைத்தேன். பள்ளியில் நடந்த அழகு கையெழுத்து போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.
படிப்பை முடித்து தனியார் தொழில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். அங்கு வங்கி காசோலைகளில் முத்து கோர்த்தது போல் அழகாய் எழுதி, நிர்வாகத்தின் பாராட்டை பெற்றேன்.
தற்போது என் வயது 63. கைத்தறி ஜரிகை சில்லறை விற்பனையாளராக உள்ளேன். கோழி கிண்டியது போல் இருந்த என் கையெழுத்தை அழகிய கோலம் போல் மாற்றியமைக்க உதவிய, தமிழாசிரியர் புவியரசுவை நன்றியோடு நினைவில் கொள்கிறேன்.
- கே.ஜெகதீசன், கோவை.
தொடர்புக்கு: 88704 69103