
ஐரோப்பிய நாடான போலந்து, நோவே ஜர்னோவா கிராமத்தில், 'க்ஸ்வி லாஸ்' எனப்படும் கோணல் காடு அமைந்துள்ளது. இங்கு, 400 பைன் மரங்கள், தரைப்பகுதியில் வடக்கு நோக்கி வளைந்து, பின் நிமிர்ந்து வளர்ந்திருக்கும் காட்சி வியப்பில் ஆழ்த்துகிறது.
இந்த மரங்கள் 9 அடி வரை வளைந்து, பின் நெடிதாக நிற்கின்றன. இவற்றை சுற்றி வழக்கமான பைன் மரங்கள் அடர்ந்த காடும் உள்ளது.
இந்த மரங்கள் பெரும் புயலால் வளைந்ததாக கூறப்பட்டது. புவி ஈர்ப்பு விசையால் வளைந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் விஞ்ஞானிகள் இதை மறுக்கின்றனர். ஏனெனில் புவி ஈர்ப்பு விசை கீழ்நோக்கியே இழுக்கும்.
இந்த பகுதி விவசாயிகள், படகு கட்டுவதற்காக, 1930ல் மரங்களை செயற்கையாக வளைத்து இந்த பகுதியில் வளர்க்க முயன்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இது பரவலாக ஏற்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரில், ஐரோப்பிய நாடான ஜெர்மனி, 1939ல் போலந்தைக் கைப்பற்றிய போது, விவசாயிகளின் செயல்பாடு தடைபட்டு, திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுபோன்று மரங்களை வளைத்து வளர்ப்பது சாத்தியமா என்பதற்கு அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள, 'ஜில்ராய் கார்டன்' முன் உதாரணமாக உள்ளது. அங்கு, இது போல் வளைந்து, வளர்ந்துள்ள மரங்கள் உள்ளன.
போலந்தில் உள்ள கோணல் காடு, அதன் தனித்துவத்தால் உலகப் புகழ் பெற்றுள்ளது. அதை பாதுகாக்கப்பட்ட இயற்கை சின்னமாக பராமரித்து வருகிறது, போலந்து அரசு.
- வி.திருமுகில்

