PUBLISHED ON : ஜூலை 04, 2026

சென்னை, மயிலாப்பூர், எம்.சி.டி.எம். சிதம்பரம் செட்டியார் உயர்நிலை பள்ளியில், 2011ல், பிளஸ் 2 படித்த போது நடந்த நிகழ்வு...
தலைமையாசிரியையாக இருந்த விஜயலட்சுமி அன்றைய வகுப்பில், 'சில நிமிடங்களில், ரத்த தான முகாம் நடக்க உள்ளது. அனைவரும் அரங்கிற்கு வந்து அதன் மகத்துவம் பற்றி அறியுங்கள். நீங்களும், 18 வயதான பின், ரத்த தானம் செய்யலாம்...' என அழைப்பு விடுத்தார்.
அதன்படி, முகாமுக்கு சென்றேன். அதை வழிநடத்திய மருத்துவர்கள், 'நீங்கள் வழங்கும் ரத்தம், உயிருக்கு போராடிக் கொண்டிருப்போரை காப்பாற்ற உதவும். தானம் செய்த, 48 மணி நேரத்தில் உடலில் புது ரத்தம் உற்பத்தியாகிவிடும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை தானம் செய்யலாம்...' என கூறினர். அது மனதில் பதிந்தது. கல்லுாரியில் படித்த போது, தைரியமாக ரத்த தானம் செய்யத் துவங்கினேன்.
தற்போது என் வயது, 32. தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறேன். தவறாமல் ரத்த தானம் செய்து வருகிறேன். இந்த விழிப்புணர்வை தந்த, பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி பாதங்களை பணிந்து வணங்குகிறேன்.
- அஜித் ரங்கசாமி, சென்னை.
