
மும்பையில் இருந்து 110 கி.மீ., தொலைவில் உள்ள அழகிய மலைவாழிடம் மாதரன். இதற்கு, 'காடுகளின் தலைவன்' என்ற பெயரும் உண்டு. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. அடர்ந்த பசுமை காடுகளால் சூழப்பட்டு, எழில்மிகு காட்சியை வழங்குகிறது.
ஆங்கிலேயர் ஹக்மாலட் என்பவரால், 1870ல் கண்டறியப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மாதரன் மலை உச்சி, அரிய வகை தாவரம், விலங்கினங்களின் வாழிடமாக உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து, 800 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இங்கு மோட்டார் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் குதிரை வண்டியில் தான் செல்ல முடியும். இதன் குளிர்ந்த காலநிலை, மூடுபனியில் மூழ்கிய பள்ளத்தாக்கு மற்றும் அழகிய நீர்வீழ்ச்சிகள், பயணியரை மயக்கும்.
பிரமிக்க வைக்கும் சூரிய உதயம் மற்றும் மாலைநேர காட்சிகளை ரசிக்க, ஏராளமான பகுதிகள் உள்ளன. அவற்றில், லுாயிசா பாயின்ட், எக்கோ பாயின்ட் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இயற்கை ஆர்வலர்களுக்கும், அமைதி விரும்பிகளுக்கும் மாதரன் மலை ஒரு பொக்கிஷம்.
- -வி.கவுதம சித்தார்த்

