தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாற்றம்!

மாற்றம்!

மாற்றம்!


PUBLISHED ON : ஆக 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''வினோத்... எழுந்திரு... மணி ஏழாகப் போகுது... சீக்கிரம்...'' அக்கா அகிலாவின் குரலை மதிக்காமல் புரண்டு படுத்தான், வினோத்.அப்படியொன்றும் ஆழ்ந்த துாக்கம் இல்லை. விழிப்பு வந்திருந்தது. சோம்பேறித்தனத்தால் துாங்குவது போல பாசாங்கு செய்தபடி படுத்திருந்தான் வினோத்.

குறித்த நேரத்தில் பள்ளிக்கு கிளம்பிவிட்டாள், அகிலா. அவள், 10ம் வகுப்பு மாணவி என்பதால், சிறப்பு வகுப்புக்காக முன்னதாகவே செல்ல வேண்டியிருந்தது.

''வினோத்...''

அம்மாவின் குரலில் சீற்றத்தை கண்டதும் எழுந்து, பாத்ரூமுக்கு ஓடினான். அவசரமாகக் கிளம்பி சைக்கிளை எடுத்தான் வினோத்.

'ஐயோ... காற்று இல்லையே... அம்மா கிட்ட சொன்னா செமத்தியா திட்டு விழும்... அப்பா வேற வெளியூர் போயிருக்காரு' என, எண்ணியபடி நகர்ந்தான்.

அருகிலிருந்த சைக்கிள் கடைக்கு அவசரமாக சென்று காற்றடித்து வேகமாக மிதித்தபடி பள்ளியை நெருங்கினான்.

இறைவணக்கக் கூட்டம் முடிந்து, சாரை சாரையாக வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர் மாணவர்கள்.

தாமதமாக வந்தோருடன் வினோதும் ஓரமாக நின்றிருந்தான்.

அங்கு வந்த உடற்கல்வி ஆசிரியர், ''ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு காரணம் சொல்ற வினோத்... தாமதமா வர்றோமே என்ற குற்ற உணர்ச்சியே இல்ல... தண்டனையால திருத்த முடியாது. நீயே திருந்தினாத்தான் உண்டு. உன் அக்கா ஒரு நாள் கூட தாமதமா வர்றதில்ல... ஆனா, நீ பாதி நாள் லேட்டு...'' என்றார்.

''சாரி சார்... சைக்கிளில் காற்று இல்ல... அடிச்சுட்டு வர, 'லேட்'டாயிடுச்சு...''

''இது ஒரு காரணமா... முதல் நாள் இரவே, அடுத்த நாள் என்னென்ன தேவையோ எல்லாம் எடுத்து வெச்சுக்கணும்... சைக்கிளில் காற்று இருக்குதான்னு, 'செக்' பண்ணிக்கணும்... பாட்டில்ல தண்ணீர் நிரப்பி வைக்கணும். இப்படி தயார் செஞ்சு வச்சிக்கிட்டா, காலையில் கிளம்புறது ஈசி... இதெல்லாம் உனக்கு புரியுது தானே...''

உடற்கல்வி ஆசிரியர் பேசிக் கொண்டிருந்த போதே பயத்தில் நெளிந்தான் வினோத். அவன் எண்ணம் கணித வகுப்பில் இருந்தது.

அன்று, முதல் பாடவேளை கணிதம். அந்த ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். வீட்டுப்பாட நோட்டை திருத்தம் செய்ய எடுத்து வருமாறு கண்டிப்புடன் சொல்லி இருந்தார். அவசரத்தில் அதை வீட்டிலே விட்டு வந்திருந்ததால், 'நல்லா மாட்டிக்கிட்டேன்' என கலங்கியபடி நின்ற வினோத், உடற்கல்வி ஆசிரியருக்கு பதிலேதும் சொல்லவில்லை.

மிகவும் கோபமானவர், ''இவ்ளோ துாரம் எடுத்துச் சொல்றேன்... பேச்சைக் கேட்க மாட்டியா...'' என, தண்டனை கொடுத்தார், உடற்கல்வி ஆசிரியர்.

அந்தப் பக்கமாக வந்த அகிலா, தம்பி முட்டி போட்டு நிற்பதைப் பார்த்தாள். அவளுக்கு ஒருபுறம் கோபமாகவும், மற்றொரு புறம் வருத்தமாகவும் இருந்தது.

எப்படியோ மைதானத்தில் முட்டி போட்டதால், கணித பாடவேளை அன்று முடிந்திருந்தது.

அடுத்து நடக்கவிருந்த தமிழ் வகுப்புக்கு சென்றான் வினோத்.

எல்லாரும் கேலி செய்ய, ''எங்கடா உன் கணக்கு வீட்டுப்பாட நோட்டு... எல்லா நோட்டையும் வாங்கி, 'டீச்சர்ஸ் ரூம்'ல வைக்க சொன்னாரு

கணித ஆசிரியர்...'' என்று, வகுப்பு தலைவன் கேட்டான்.

'திருதிரு'வென விழித்தபடி, ''அவசரத்துல மறந்து வந்துட்டேன்டா...'' என்றான் வினோத்.

''இன்னிக்கு 'சப்மிட்' பண்ணாதவங்க பெயர் எல்லாம் ஆசிரியர் எழுதிக் கொடுக்க சொல்லியிருக்காரு... உனக்கே தெரியும்... மொத்த நோட்டையும் எண்ணிப் பார்ப்பாரு... அப்புறம் நான்தான் மாட்டிப்பேன்...'' என்றபடி, நோட்டுக்களை எடுத்து சென்றான்.

முப்பது பேர் இருக்கும் வகுப்பில் மூன்று பேர் அன்று பள்ளிக்கு வரவில்லை. நோட்டு எடுத்து வராத ஒரே மாணவன் வினோத் தான்.

ஒரு வழியாக அரை நாள் முடிந்தது.

மதியம் மீண்டும் வினோத் மாட்டிக் கொண்டான். அறிவியல் பாடப் புத்தகத்தையும் மறந்திருந்தான். வகுப்புக்கு வெளியே நிறுத்தி தண்டித்தார் ஆசிரியர். அதையும் பார்த்து விட்டாள், அக்கா அகிலா.

அன்று மாலை, முகத்தைத் தொங்கப் போட்டபடி, வீட்டுக்கு புறப்பட்டான், வினோத்.

'அக்காவிடமிருந்து விஷயம் தெரிந்து, அம்மா கோபமாக இருப்பார்' என, பயந்தபடி வீட்டில் நுழைந்தான், வினோத்.

அம்மா கோபமாக இல்லை; வருத்தமுடன் காணப்பட்டார். யோசிக்க ஆரம்பித்தான், வினோத்.

அம்மா...

ஒவ்வொரு வாரமும் தவறாமல், சீருடையை துவைத்து, உலர்த்தி

வைப்பார். ஒரு நாள் கூட சீருடை அணியாமல் அவன் பள்ளிக்கு போனதில்லை.

முதல் நாள் இரவே, மறுநாளுக்குத் தேவையான காய்கறிகளை தயார் செய்து வைத்து கொள்வார்.

காலைச் சிற்றுண்டி, மதிய உணவு என, சரியாகத் திட்டமிட்டு, நேரத்துக்கு சமைத்து, தட்டில் சூடு பறக்க வைத்து அழைப்பார்.

ஒரு நாள் கூட, தாமதமாக எழுந்ததில்லை, அம்மா.

அப்பா...

புத்தகங்களுக்கு அழகாக அட்டை போட்டு கொடுப்பார்.

அன்புடன் தின்பண்டங்கள் வாங்கி வந்து உண்ணக் கொடுப்பார்.

ஒவ்வொரு வார இறுதியிலும், சைக்கிளை நன்றாகத் துடைத்து, எண்ணெய் போட்டு வைப்பார்.

அலுவலக வேலையாக வெளியூர் சென்றாலும், மறக்காமல் கேட்டதை வாங்கி வருவார், அப்பா.

அக்கா அகிலா...

ஒரு நாளும் பள்ளிக்குத் தாமதமாக சென்றது கிடையாது.

அனைத்தையும் கருத்துடன் செய்வாள்.

குறித்த நேரத்தில் வேலைகளை முடித்து விடுவாள், அக்கா.

என் சோம்பேறித்தனமும், அலட்சியமும் தான் எனக்கு முதல் எதிரியாக இருக்கின்றன. இனி வருந்தும்படி நடந்து கொள்ள மாட்டேன்.

இவ்வாறு எண்ணியபடி, அம்மாவிடம் போனான், வினோத்.

எதையும் கேட்கவில்லை அம்மா. நடந்ததையெல்லாம் ஒப்பித்து, ''என் தவறுகளை புரிஞ்சிகிட்டேன்... இனிமே சரியா நடந்து கொள்வேன்... நீங்க வருத்தப்படற மாதிரி எதையும் செய்ய மாட்டேன்மா...'' என்று நெகிழ்ந்தான், வினோத்.

அவனை அணைத்துக் கொண்டார், அம்மா.

குழந்தைகளே... தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதால் மட்டுமே, சரியான பாதையை கண்டு உணர முடியும்.

- மாலா ரமேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us