
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒ.வி.சி., உயர்நிலைப் பள்ளியில், 1957ல் எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது தமிழாசிரியராக இருந்தார் நாகராஜன். நற்பண்புகள் நிறைந்தவர். அவரது வகுப்பு என்றாலே குதுாகலம் பற்றிக்கொள்ளும். இனிமை நிறைந்திருக்கும். கலகலப்பு ஏற்படும் வகையில் பாடம் நடத்துவார்.
திருக்குறள் விளக்க வகுப்பு என்றால் தவறவிடமாட்டோம். நேர்த்தியாக ஒவ்வொரு குறளையும் விளக்கி, சுவாரசியம் தரும் கதையாக அதன் கருத்தை மனதில் பதிய வைப்பார். ராமாயண பாடத்தில் கம்பன் கவிநயம் நாவில் ஆட்சி செலுத்தும்.
வகுப்பறையில் மட்டும் இன்றி எங்கு பார்த்தாலும் தோழமை உணர்வுடன் பேசுவார். அவருடன் நெருக்கமாக பழகி தமிழ் மொழி மீதான ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டேன். இதையடுத்து மேடைப் பேச்சுக்கு தகுதியாகும் பயிற்சிகள் தந்தார். அதை புரிந்து உள்வாங்கி செயல்பட்டு நிபுணத்துவம் பெற்றேன். பின்னாளில், தமிழாசிரியர் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் பேசும் வாய்ப்பையும் பெற்றேன்.
எனக்கு, 86 வயதாகிறது. அரசுப்பணியிலிருந்து 28 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றேன். தமிழ் மொழி ஆக்கங்களை படிப்பதால் தளர்ச்சியின்றி செயல்பட்டு வருகிறேன். வகுப்பறையில் தமிழாசிரியர் நாகராஜனிடன் பெற்ற மொழி அறிவு உணர்வாக உள்ளத்தில் பதிந்திருக்கிறது.
- அ.அப்துல் அஜீஸ், மதுரை.தொடர்புக்கு: 98438 30277