PUBLISHED ON : ஜூலை 18, 2026

அழகிய வனத்தில் மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன. அதில் குயில், மைனா என, பல பறவையினங்கள் வசித்து வந்தன. சிட்டும் அதில் ஒன்று. மாமரத்தின் உச்சி கிளையை அடைவது தான், சிட்டுவின் ஆசை.
அன்று காலை சிறிய இறக்கைகளை முழு பலத்துடன் அடித்து, மாமரத்தின் மேல் பகுதிக்கு பறக்க ஆரம்பித்தது, சிட்டு. உயரப் போகும் போது, திடீரெனப் பலத்த காற்று வீசியது. சிட்டுவின் சிறிய உடலால், காற்றின் வேகத்தைத் தாங்க முடியவில்லை. அது தடுமாறியது. பறக்க முடியாமல் மரத்தின் கீழ்இ புல்வெளியில் விழுந்தது. இறக்கைகள் வலித்தன. மனம் உடைந்து போனது.
அழுகையுடன் எழுந்து, அருகில் இருந்த குட்டி மரத்தில் அமர்ந்தது.
சிட்டுவின் முயற்சியை உற்று கவனித்துக் கொண்டிருந்தது, ஒரு புறா. ஆறுதலாக அருகில் சென்று அமர்ந்தது.
' ஏன் சோகமாக இருக்கிறாய்...' சிட்டுவிடம் கேட்டது, புறா.
'அந்த மாமரத்தின் உச்சிக்கு போக முயற்சித்தேன். காற்று என்னைத் தள்ளி விட்டது. அது என் சக்திக்கு மீறியது...' வருத்தத்துடன் கூறியது, சிட்டு.
'நீ பறந்ததிலேயே இது தான் அதிகபட்ச உயரம், இல்லையா...'
தலையை ஆட்டி ஆமோதித்தது, சிட்டு.
'ஒவ்வொரு முறை விழும் போதும், மரத்தின் உச்சி இன்னும் எவ்வளவு துாரத்தில் இருக்கிறது; எவ்வளவு பலத்துடன் காற்று வீசுகிறது; அதை ஈடு கொடுக்க முடியுமா என்பதைக் கற்றுக் கொள்கிறாய்...
'விடாமுயற்சி என்றால் என்ன தெரியுமா... தோல்வி அடையும் போது, 'என்னால் முடியாது' என, அழுது ஓடுவது அல்ல... 'இன்னும் பலமாக முயற்சிப்பேன்' என, வைராக்கியம் கொள்வது தான் உண்மையான விடாமுயற்சி...'
புறாவின் ஆறுதலான பேச்சு, மனம் துவண்டிருந்த சிட்டுவுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
'இந்த முறை, நிச்சயம்' என, தனக்குள் சொல்லியபடி, சிட்டு மீண்டும் பறந்தது. காற்றின் திசையை உணர்ந்தது.
உயரத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் மனதில் நிறைந்திருந்தது.
இறுதியாக, மாமரத்தின் உயரமான கிளையை அடைந்து, அதில் கம்பீரமாக அமர்ந்தது, சிட்டு. புறாவும் மகிழ்ச்சி அடைந்தது.
பட்டூஸ்... விடாமுயற்சியும், பயிற்சியும் இருந்தால், எல்லா தடைகளையும் தாண்டி, வெற்றி அடைய முடியும்.
பி.சி.ரகு
