PUBLISHED ON : பிப் 21, 2026

முன்னொரு காலத்தில் வாழ்ந்த நாடோடி, ஊர் ஊராகச் சென்று கொண்டே இருப்பான். இந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற குறிக்கோள் எதுவும் கிடையாது. அந்த காலத்தில் வாகன வசதி ஏதும் கிடையாது. எவ்வளவு தொலைவு என்றாலும், நடைபயணம் தான்.
வசதி ஏதும் இல்லாதவன் நாடோடி. மிகவும் நல்லவன். நடைபயணமாக ஊர் ஊராக சென்று, பலவித அனுபவம் பெறுவதையே, முழுநேர வேலையாக வைத்திருந்தான். ஆர்வம் குன்றாமல் எவ்வளவு துாரம் வேண்டுமானாலும் நடப்பான்.
இப்படி ஊர்களுக்கு செல்லும் போது, அங்கு யாராவது ஏதாவது வேலை கொடுத்தால் செய்வான். கிடைக்கும் பணத்தை, தன் அன்றாடச் செலவிற்கு பயன்படுத்திக் கொள்வான். அடுத்த நாள் பற்றியெல்லாம், அவனுக்குக் கவலை இல்லை.
அ து ஒரு கோடைக்காலம். அன்று ஒரு காட்டுப் பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். வெப்பம் கடுமையாக இருந்தது.
அவனுக்குக் களைப்பாக இருக்கவே, வழியில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழ், சற்று நேரம் நின்றான். அங்கே இளைப்பாற ஒரு கல்படுக்கை காணப்பட்டது. இளைப்பாற விரும்பி, அதில் படுத்துக் கொண்டான்.
பச்சைப்பசேல் என அந்த ஆலமரம் பரந்து விரிந்திருந்தது. காற்று இதமாக வீசியது. நாடோடியும், படுத்த சற்று நேரத்தில் நன்றாக துாங்கி விட்டான்.
சில மணிநேரம் உறங்கிய பின், கண்விழித்துப் பார்த்தான். களைப்பெல்லாம் நீங்கி, உடல் புத்துணர்ச்சியோடு விளங்கியது.
நல்ல ஓய்வளித்த ஆலமரத்திற்கு மனப்பூர்வமாக நன்றி சொன்னான்.
அந்த ஆலமரத்து நிழலில், இதுவரை பலர் இளைப்பாறி சென்றிருக்கின்றனர். ஆனால், இதுபோல மனப்பூர்வமாய் அதற்கு யாரும் நன்றி சொன்னதில்லை. அந்த ஆலமரம் ஆச்சரியப்பட்டது.
'ஓ, மானிடனே... பலரும் என் நிழலில் இளைப்பாறிச் சென்றிருக்கின்றனர். ஆனால், இதுவரை எனக்கு, யாரும் உன்னைப் போல மனப்பூர்வமாக நன்றி சொன்னதில்லை...' என்றது, ஆலமரம்.
ஆலமரம் பேசுகிறதே என்று ஆச்சரியமாகப் பார்த்தான், நாடோடி.
'நீ எனக்கு உதவினாய். உனக்கு நன்றி சொன்னேன். அவ்வளவுதான்...' என்றான், நாடோடி.
'இது உன் பெருந்தன்மையைக் காட்டுகிறது. உனக்கு ஏதாவது பரிசு தர நினைக்கிறேன்...' என்றது, ஆலமரம்.
'உன்னால் என்ன பரிசு தரமுடியும்...'
வியப்புடன் கேட்டான், நாடோடி.
விளக்கமாக பதில் கூறியது, ஆலமரம்...
'பல ஆண்டுகளுக்கு முன், ஒரு துறவி இங்கே அமர்ந்து தியானம் செய்தார். புறப்படும் போது தியானம் நன்றாக கைகூடியதாக கூறிய அவர், என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டார். எதுவும் வேண்டாம் என்று சொல்லியும், அவர் எனக்கு ஒரு வரம் கொடுத்துச் சென்றார்...
' அந்த வரத்தை நான் யாருக்கும் தரலாம். வரம் பெற்றவர் அழைத்தால், அவர் முன் ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும். இதுவரை அந்த வரத்தை நான் பயன்படுத்தவில்லை. நீ நல்ல மனிதனாக இருக்கிறாய். அதனால், உனக்கு நான் அந்த வரத்தைத் தர விரும்புகிறேன். தேவைப்படும் போது, 'தேவதையே வா...' என்று அழைத்தால், அங்கு தேவதை தோன்றி உனக்கு உதவும்...' என்று முடித்தது, ஆலமரம்.
'மகிழ்ச்சி... தேவைப்பட்டால் அழைக்கிறேன்...' என்றான், நாடோடி.
பின், ஆலமரத்திற்கு மீண்டும் நன்றி கூறி, தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
சில அடிகள் நடந்ததும், ஏதோ மனதிற்குள் தோன்ற, உடனே திரும்பிப் பார்த்தான், நாடோடி.
அப்போது, அந்த ஆலமரத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே தீயை அணைத்து காப்பாற்ற நினைத்தான். ஆலமரம் சற்று முன் கொடுத்த வரம் நினைவிற்கு வந்தது. உடனே, 'தேவதையே, வா...' என்றான்.
ஒரு தேவதை அங்கு தோன்றியது.
'என்ன உதவி வேண்டும், கேள்...' என்றது, தேவதை.
'அந்த ஆலமரம் தீப்பற்றி எரிகிறது. தீயை அணைத்து, அதைக் காப்பாற்ற வேண்டும்...' என்றான், நாடோடி.
ஆலமரத்தை பார்த்து அந்த தேவதை கையசைத்ததும், தீ முற்றிலும் அணைந்து, ஆலமரம் முன்பு போலானது.
ஆலமரம் மகிழ்ச்சி அடைந்தது.
'நான் கொடுத்த வரத்தை வைத்தே, என்னை நீ காப்பாற்றி விட்டாய். உனக்கு என் நன்றி...' என்றது, ஆலமரம்.
நாடோடி தன் பயணத்தைத் தொடர்ந்தான். விரைவில் அவன் ஒரு ஆபத்தில் சிக்கப் போகிறான்.
- தொடரும்...
- ஆர்.வி.பதி

