தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (15)

நாடோடியின் சாகசங்கள்! (15)

நாடோடியின் சாகசங்கள்! (15)


PUBLISHED ON : மே 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. அணிந்தால் பிறர் பார்வையில் இருந்து மறைய வைக்கும் மாய மோதிரமும் கிடைத்தது. இவற்றை பயன்படுத்தி பணியாளர்களை கொத்தடிமையாக நடத்தி கொடுமைப்படுத்திய கருமியை, உணவின் சுவை அறிய முடியாதபடி நுாதனமாக தண்டித்தான் நாடோடி. மனம் திருந்தினார் கருமி முதலாளி. இனி -



'என்னை மன்னித்து விடுங்கள். நான் திருந்திவிட்டேன். பணியாளர்களுக்கு சுவையான உணவு மட்டுமின்றி, உழைப்புக்கு உரிய கூலியையும் வழங்கிவிடுவேன்...' என்று உறுதி அளித்தார், கருமி முதலாளி கண்ணாயிரம்.

அதை, அப்போதே செயல்பாட்டிற்கும் கொண்டு வந்தார்.

துணி துவைக்கும் பணியாளருக்கு உதவும் வகையில் பொதி சுமக்கும் கழுதை ஒன்றை வழங்கினார் முதலாளி. மற்ற பணியாளர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தந்தார். பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்; வேலைகளை சிறப்பாக செய்தனர்.

தேவதை உதவியோடு, கண்ணாயிரத்திற்கு சுவை உணர்வை திரும்பக் கொடுத்தான், நாடோடி. பின், அங்கிருந்து வேறு ஊரை தேடி புறப்பட்டான்.

நீ ண்ட பயணத்திற்கு பின், ஒரு புதிய நகரை வந்தடைந்தான் நாடோடி. அங்கு அபூர்வமாகவே மக்கள் நடமாடினர். விசாரித்த போது, திருடர்களால் அந்த நகர மக்கள் அச்சத்துடன் இருந்ததை அறிந்தான்.

அது மட்டுமின்றி, நகரின் ஒதுக்குப்புறமாக இருந்த பாழடைந்த பங்களாவில் பேய்கள் உலாவுவதாக கதைகள் உலாவின. காட்டுப்பகுதியில் இருந்து ஒரு புலி ஊருக்குள் புகுந்து, கால்நடைகளை அடித்து கொல்வதாகவும் தகவல் பரவியிருந்தது.

இதனால் அந்த நகர மக்கள் பீதியில் இருந்தனர். சூரியன் மறைந்ததும் அனைவரும் வீட்டுக்குள் பதுங்கினர்; இரவில் நகரமே முடங்கியது.

இதை கவனித்த நாடோடி, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடிவெடுத்தான். சிறிய தங்கும் விடுதியில் அன்றைய இரவை கழித்தான்.

மறுநாள் நகரை சுற்றிப் பார்க்க புறப்பட்டான், நாடோடி.

வழியில் ஒரு வீட்டின் திண்ணையில், கண்களில் நீர்வழிய ஒரு ஆணும், பெண்ணும் சோகமே உருவாக உட்கார்ந்திருந்தனர்.

அவர்களிடம் விசாரித்தான், நாடோடி.

'நாங்கள் கணவன் - மனைவி. இரண்டு நாளுக்கு முன், வெளியூருக்குப் போயிருந் தோம். திரும்பி வந்து பார்த்த போது, நாங்க பாடுபட்டு உழைச்சு சேர்த்து வெச்சிருந்த தங்க நகைகளை, யாரோ திருடிட்டு போயிட்டாங்க...' என்றார் அந்த ஆண்.

அப்போது, அலறியடித்தபடி ஓடி வந்தான் ஒருவன்.

அவனை தடுத்து நிறுத்தினான், நாடோடி.

ஓடிவந்தவன் பயத்தில் இருந்தான்; உடல் முழுதும் வியர்வையால் நனைந்திருந்தது.

நாடோடி அவனிடம் விசாரித்தான்.

'ஊருக்குள் புகுந்திருந்த சிறுத்தை துரத்தியது. நல்ல வேளையாக தப்பித்தேன்...' என்றபடி பதிலுக்கு காத்திராமல் ஓடி மறைந்தான்.

திண்ணையில் சேகமாக அமர்ந்திருந்த கணவன் - மனைவி பீதியில் வீட்டிற்குள் சென்று பூட்டி கொண்டனர்.

யோசனையுடன் அங்கிருந்து கால்போன போக்கில் நடந்தான், நாடோடி.

நகரின் ஒதுக்குப்புறத்திற்கு வந்தான். அங்கு சிதைந்த நிலையில் இருந்த பங்களாவை பார்த்தான். அதை சுற்றி வந்தான்.

சுற்றிலும் முட்செடிகளும், புதர்களும் மண்டியிருந்தன. புதர்களை விலக்கி பங்களாவிற்குள் நுழைந்தான்.

அப்போது, கருங்கல் பலகையால் மூடப்பட்டிருந்த பள்ளத்தில் இருந்து, திடீரென ஒரு கருப்பு பூனை வீறிட்டபடி வெளியேறி ஓடியது.



- தொடரும்...- ஆர்.வி. பதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us