தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (16)

நாடோடியின் சாகசங்கள்! (16)

நாடோடியின் சாகசங்கள்! (16)


PUBLISHED ON : ஜூன் 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, அழைக்கும் போதெல்லாம் வந்து உதவுவதாக ஒரு தேவதை வரம் கொடுத்தது. அணிந்தவுடன் பிறர் பார்வையில் இருந்து மறைய வைக்கும் மாய மோதிரம் ஒன்றும் கிடைத்தது. இவற்றை பயன்படுத்தி மக்களுக்கு உதவி ஊர் ஊராக சென்றான் நாடோடி. ஒரு தம்பதியர் இல்லாதபோது வீட்டில் திருட்டு நடந்ததை அறிந்தான். உதவும் எண்ணத்துடன் ஊருக்கு வெளியில் பழைய பங்களாவுக்கு வந்தான் நாடோடி. இனி -



பழைய பங்களாவில் ஒரு பெரிய நிலவறை. உள்ளே சில படிக்கட்டுகள் காணப்பட்டன. அதன் வழியாகச் சென்றான் நாடோடி. ஒரு மூலையில் நிறைய தங்க நகைகளும், வெள்ளிப் பொருட்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

நிலவறைக்குள்ளிருந்து வெளியே வந்தான் நாடோடி. மெல்ல நடந்து புதர்களை விலக்கி பழைய பங்களாவை விட்டு வெளியே வந்தான். தான் தங்கியிருந்த மண்டபத்திற்கு வந்து ஓய்வெடுத்தான்.

அப்போது அந்த வழியாக சிறுத்தை துரத்தியதாகச் சொல்லியபடி ஓடியவன் வந்து கொண்டிருந்தான். அவனை அழைத்து பேச்சு கொடுத்தான் நாடோடி.

''நேற்று உங்களை சிறுத்தை துரத்தியதாக சொன்னீங்களே... அது எந்த பக்கமா போச்சுன்னு தெரியுமா...''

''அதையெல்லாம் எதுக்கு என்கிட்ட கேட்குறீங்க... நீங்க யாரு... உங்கள இந்த ஊர்லேயே பார்த்ததில்லையே...'

''ஊருக்குப் புதுசா வந்திருக்கிற நாடோடி. உங்களுக்கு உதவி செய்யலாம்னு நினைக்கிறேன்...''

''உங்க உதவி எதுவும் தேவையில்லை. முதல்ல இந்த ஊரை விட்டுப் புறப்படுங்க... வீணா சிறுத்தைகிட்டே சிக்கி உயிரை விடாதீங்க...'' என்றான் அவன்.

''சரி... எனக்கு இந்த ஊரிலே ஒரு வேலை இருக்கு. முடிஞ்சதும் ரெண்டொரு நாள்ளே இந்த ஊரைவிட்டுக் கிளம்பிடறேன்...'' என்றான் நாடோடி.

இதை கேட்டதும் அந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள் விட்டால் போதும் என்று வேகமாக நடக்க துவங்கினான்.

நாடோடி சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை.

உடனே தன்னை ஒரு சிறுத்தையாக மாற்றிக் கொண்டு அந்த ஆளைத் துரத்தினான், நாடோடி.

திரும்பிப் பார்த்தவன் பயந்து தலைதெறிக்க ஓடத் துவங்கினான்.

பின் நாடோடி சுயரூபத்திற்கு வந்து மண்டபத்திற்குள் சென்றான்.

அ ன்று இரவு -

மாயமோதிரத்தை அணிந்து யாருடைய பார்வையிலும் படாதவாறு பங்களாவின் அருகில் காத்திருந்தான் நாடோடி.

நடுஇரவில் இரண்டு உருவங்கள் பங்களாவை நோக்கி வருவதைக் கண்டான். அதில் ஒருவன் ஏற்கனவே பார்த்த நாற்பது வயது ஆள். மற்றொருவன் புதிதாக இருந்தான். கையில் ஒரு பை இருந்தது.

நாடோடி தன்னை பேய் போல் மாற்றிக் கொண்டு அவர்கள் முன் போய் நின்று பயமுறுத்தினான்.

பேயைக் கண்ட இருவரும் அலற முற்பட்டனர். ஆனால், பயத்தில் பேச்சு வரவில்லை. பயந்து ஓடத் துவங்கி வழியில் தடுக்கி விழுந்தனர்.

உடல் வியர்த்துப் போயிருந்தது.

நாடோடி சுயஉருவத்திற்கு மாறியபடி அவர்களிடம் போனான்.

இருவரையும் பிடித்து, கைகளை கட்டி ஊருக்குள் இழுத்துச் சென்றான்.

விடியும் வரை மண்டபத்தில் வைத்திருந்தான். விடிந்ததும் இருவரிடமும் விசாரணை நடத்தினான்.

''நீங்க ரெண்டு பேரும் திருடர்கள்னு தெரியும். என்ன நடந்ததுன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லது...''

மிரட்டி விசாரித்த போது உண்மைகளை சொல்லி விட்டனர்.

'நாங்க திருடங்கதான்... ஊர் மக்களின் நகை பொருட்களைக் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்திருக்கோம்... இரவில் ஊர் மக்கள் வெளியே வருவதைத் தடுக்க சிறுத்தை உலாவுவதாக பொய்யை பரப்பி விட்டோம்... பங்களா அருகில் யாரும் வராமல் இருக்க பேய் உலாவுவதாகச் சொல்லி ஊர் மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறோம்...'

விஷயத்தை ஒன்று விடாமல் கூறினர் திருடர்கள். திருடிய நகைகளை பங்களா நிலவறையில் பதுக்கி வைத்திருந்த விபரங்களையும் தெரிவித்தனர்.

விஷயம் தெரிந்து ஊர்மக்கள் எல்லாரும் கூடினர்.

நடந்த விஷயத்தை திருடர்களின் வாயிலாகவே வெளிப்படுத்தினான், நாடோடி.

திருடர்கள் இருவரையும் ஊரை விட்டே துரத்தினர் மக்கள். இனி எக்காரணம் கொண்டும் ஊருக்குள் நுழையக் கூடாது என, தடை விதித்தனர்.

நகைகளைக் கண்டுபிடித்து கொடுத்த நாடோடியை பாராட்டிய ஊர் மக்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடும்படியும் கேட்டுக் கொண்டனர்.

நாடோடி அன்பாக அதை மறுத்து அடுத்த சாகசத்தைச் செய்ய பயணத்தைத் தொடர்ந்தான்.

- தொடரும்...

- ஆர்.வி.பதி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us