PUBLISHED ON : ஜூன் 27, 2026

முன்கதை: தேவதையிடம் வரம் பெற்றிருந்த நாடோடி, பிறர் பார்வையில் இருந்து மறையும் மாய மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தான். இவற்றை பயன்படுத்தி மக்களுக்கு உதவியபடி, ஊர் ஊராக சுற்றி வந்தான். புதிதாக வினோத நகருக்கு வந்தவன், அங்கு உருவில் மிகவும் சிறிய குள்ள மனிதர்கள் இருப்பதை கண்டு ஆராய்ந்தான். அதற்கு காரணமான சாபம் கொடுத்திருந்த துறவியை சந்தித்தான். சாபம் போக்க வேண்டியதால் அவரது கோபத்துக்கு உள்ளானான், நாடோடி. இனி -
துறவியின் செயலால் சற்று விழிப்படைந்தான், நாடோடி.
'ஒரு தவறும் செய்யாத போது, எதற்காக துறவிக்கு பயப்பட வேண்டும்' என, எண்ணியபடி, துறவியை கவனித்தான், நாடோடி.
மிகவும் கோபமாக, 'எனக்கே நீ கட்டளை பிறப்பிக்கிறாயா... இங்கிருந்து உடனே போய் விடு. இல்லை என்றால், அற்ப மனிதனான உன்னையும் சித்திரக் குள்ள மனிதனாக்கி தண்டித்து விடுவேன்...' என, வெறுப்பு ஊட்டும் வகையில் கூறினார், துறவி.
கோபத்தை கட்டுப்படுத்தியபடி, மீண்டும் பணிந்து, அந்த நகர மக்களை மீட்கும் வகையில் விண்ணப்பத்தை முன்வைத்தான், நாடோடி.
'ஐயா... தாங்கள் அறிவும், சக்தியும் மிக்க துறவி; கருணையே வடிவானவர். உங்களை அனைத்து மக்களும் மதிக்கின்றனர். அப்படியிருக்கும் போது, கோபம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தங்கள் மகிமையை அறியாத மன்னர் செய்த தவறுக்காக, நகர மக்கள் அனைவரும் கஷ்டப்பட வேண்டுமா...'
மக்கள் பக்கம் உள்ள நியாயத்தை, துறவியின் மனதில் பதியும்படி அமைதியாக எடுத்துரைத்தான், நாடோடி.
துறவிக்கு கோபம் அடங்கவில்லை. அது சற்று அதிகமானது.
'இப்போது இங்கிருந்து போகப் போகிறாயா... இல்லையா... இல்லை என்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்...'
எதைப் பற்றியும் கவலைப்படாமல், 'அடுத்து என்ன செய்யலாம்' என, யோசித்தான், நாடோடி.
மீண்டும் ஒருமுறை கேட்டுப் பார்க்கலாம் என எண்ணியபடி, 'ஐயா... தாங்கள் முற்றும் துறந்த துறவி. இதுபோல கோபப்படலாமா... தயைகூர்ந்து அண்டை நாட்டு மன்னரையும், மக்களையும் மன்னித்து, பழைய நிலைக்கு கொண்டு வந்து விடுங்கள்...' என, தயவுடன் கேட்டான், நாடோடி.
துறவியின் கோபம் சற்றும் குறையவில்லை. மிகவும் கடுமையாக, 'நீ நாயாக கடவது...' என்று சாபம் கொடுத்தார்.
அக்கணமே, நாயாக மாறினான், நாடோடி.
துறவியை சுற்றி வந்து, 'வள்... வள்...' என, குரைத்தான்.
'சாதாரண நாடோடி நீ... என்னிடமா வாலாட்டுகிறாய்... என் சக்தி தெரியாமல் மோதி விட்டாய்... உனக்கு சாப விமோசனமே கிடையாது. காலம் முழுதும் இப்படியே கிடந்து அல்லல் படு...' என்று கூறி, ஆணவத்துடன் சிரித்தார், துறவி.
ஆனால், அடுத்த கணமே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம், கந்தர்வனிடம் பெற்றிருந்த வரத்தைப் பயன்படுத்தி, மீண்டும் சுய உருவத்தை அடைந்தான், நாடோடி.
இதை எதிர்பார்க்காததால், 'யார் நீ... சொல்... என் சாபத்திற்கு உள்ளானோர், நான் மனது வைத்தால் மட்டுமே, விமோசனம் பெற முடியும். ஆனால், நீ எப்படி என் சாபத்திலிருந்து விடுபட்டாய்... உண்மையை சொல்...' என, கடுகடுப்புடன் கேட்டார், துறவி.
'ஐயா... தங்களைப் போல சக்தி மிக்கவன் அல்ல நான்... ஒரு சாதாரண நாடோடி...'
'இல்லை, நீ பொய் கூறுகிறாய்...'
'நான் கூறுவது உண்மை. நான் ஏன் தங்களிடம் பொய் பேச வேண்டும்? ஆனாலும், மீண்டும் மீண்டும் பணிந்து கேட்கிறேன். அந்நாட்டு மன்னரையும், மக்களையும் சாபத்திலிருந்து விலக்கி மகிழ்ச்சியாக வாழ விடுங்கள்...'
'அது மட்டும் முடியாது... அந்த மன்னர், என் பாதங்களில் விழுந்து, செய்தது தவறு என்று கெஞ்சினால் மட்டுமே, சாபத்தில் இருந்து விடுவிப்பேன்...'
துறவியின் ஆவணப் பேச்சு, நாடோடிக்குப் பிடிக்கவில்லை.
உடனே, மாய மோதிரத்தை விரலில் அணிந்து கொண்டான்; அடுத்த நொடியில் மறைந்து போனான், நாடோடி.
இதைக் கண்டு, மேலும் அதிர்ந்தார், துறவி. மனதிற்குள் சற்று பயம் உண்டானது.
யோசிக்க ஆரம்பித்தார், துறவி.
'பார்க்க சாதாரண மனிதனை போலத் தான் இருக்கிறான். பணிவாய் பேசுகிறான். சக்தி வாய்ந்த மனிதன் என்றால், இவ்வளவு பணிவாகப் பேச மாட்டான். யார் இவன்...'
பலமுறை யோசித்தும், துறவியால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. குழம்பி தவித்தபடி நின்றார்.
யார் கண்ணிலும் படாமல் நின்றபடி, தேவதை துணையை நாட முடிவு செய்தான், நாடோடி.
மறைவான உடலோடு, தேவதையை அழைக்க, அவன் முன் தோன்றியது, தேவதை.
'எதற்காக அழைத்தாய், சொல்... செய்து முடிக்கிறேன்...'
நடந்த முழு விபரங்களையும், தேவதையிடம் கூறினான், நாடோடி.
'சரி... நான் என்ன செய்ய வேண்டும்...'
'நீ, இந்த துறவியை பூனையாக மாற்ற வேண்டும். முதலில் இதைச் செய்... பின் என்ன செய்ய வேண்டும் என, கூறுகிறேன்...'
இப்படி, நாடோடி சொன்னதும், துறவியை பூனையாக மாற்றியது, தேவதை.
இதை சற்றும் எதிர்பார்க்காததால், செய்வதறியாது தவித்தார், துறவி.
- தொடரும்...
- ஆர்.வி.பதி
