தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (20)

நாடோடியின் சாகசங்கள்! (20)

நாடோடியின் சாகசங்கள்! (20)


PUBLISHED ON : ஜூலை 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: தேவதையிடம் வரம் பெற்றிருந்த நாடோடி, பிறர் பார்வையில் இருந்து மறையும் மாய மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தான். இவற்றை பயன்படுத்தி மக்களுக்கு உதவியபடி ஊர் ஊராக சுற்றி வந்தான். புதிதாக வினோத நகருக்கு வந்தவன், அங்கு உருவில் மிகவும் சிறிய குள்ள மனிதர்கள் இருப்பதை கண்டு ஆராய்ந்தான். அதன் மர்மம் அறிந்து, குள்ள மனிதர்களை மீட்பதற்காக, துறவியை சந்தித்தான். கோபத்தில் துறவி மறுக்கவே, தேவதையின் வரத்தால் அவரை பூனையாக மாற்றிவிட்டான், நாடோடி. இனி -

நாடோடியின் செயலால் பதற்றமடைந்தார், துறவி.

'சர்வ சக்தி படைத்த பெருந்துறவியான என்னை, நீ எப்படி பூனையாக மாற்றினாய்...'

'நான் தங்களைப் போல சக்தி படைத்தவன் அல்ல. மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். பக்கத்து நாட்டு மன்னரையும், மக்களையும் தங்கள் சாபத்திலிருந்து விலக்கி, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்...'

'அப்படிச் செய்யா விட்டால்...'

'வாழ்நாள் முழுதும் நீங்கள் பூனையாகவே வாழும்படி ஆகி விடும்...'

ஒரு சாதாரண மனிதன், இவ்வளவு சக்தி மிக்கவனாக இருப்பதை, துறவியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

யோசனையில் மூழ்கினார், துறவி.

அந்த நேரத்தில், 'அதிகம் யோசிக்க வேண்டாம். நான் நினைத்தால் அந்நாட்டு மக்களையும், மன்னரையும் மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும். ஆனால், அப்படிச் செய்ய விரும்பவில்லை. தங்கள் கருணையால் அவர்களை, சாபத்திலிருந்து மீட்க விரும்புகிறேன்...' என்றான், நாடோடி.

சற்று நேரம் யோசித்தார், துறவி.

வேறு வழியின்றி, நாடோடியின் திட்டத்தை ஏற்று, ஒப்புக் கொள்ள முடிவெடுத்தார்.

'சரி, நீ கேட்டுக் கொண்டபடியே நான், சாபத்தை விலக்குகிறேன். இப்போது, என்னை பழைய நிலைக்கு மாற்று...' என்றார், துறவி.

'நிச்சயம் செய்கிறேன். ஆனால், சத்தியம் செய்து தர வேண்டும். மீண்டும் அந்த நாட்டுக்கு எந்த தொந்தரவையும் தரமாட்டேன் என உறுதி அளிக்க வேண்டும்...' என்றான், நாடோடி.

'அப்படியே செய்கிறேன்...'

துறவி சொன்னதும், தேவதையை அழைத்தான், நாடோடி.

துறவியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும்படி கூறினான்.

தேவதையும், துறவியை சுய உருவை அடையச் செய்தது.

நிம்மதிப் பெருமூச்சு விட்டார், துறவி.

துறவியை அழைத்து கொண்டு, சந்திரபுரிக்கு மீண்டும் சென்றான், நாடோடி.

இதைக் கண்டதும் குள்ள மனிதர்கள், ஏதோ நடக்கப் போகிறது என எண்ணி ஆரவாரம் செய்தனர்.

மன்னரிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டது.

அனைவரையும் சாபத்திலிருந்து விலக்கி, பழைய உருவத்தை அடையச் செய்தார், துறவி.

கட்டடங்களும் முன்புபோல பெரியதாகக் காட்சி அளித்தன.

மன்னரும், மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாடோடியையும், துறவியையும் வரவேற்றார், மன்னர்.

நாடோடியிடம், 'மிக்க நன்றி, பேரன்புமிக்கவனே... உன்னால் தான் நாங்கள் சுய உருவத்தை அடைந்தோம்...' என்றார், மன்னர்.

அருகில் நின்ற துறவியிடம், 'தாங்கள் முற்றும் துறந்தவர். தங்களிடம் கர்வம், ஆணவம் போன்ற குணங்கள் இருக்கவே கூடாது. மன்னர், தங்களை சந்திக்க விரும்பவில்லை என்பது, அவரது விருப்பம்... அதை, தங்களைப் போன்றோர் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை தாங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே, தங்களைக் கொண்டே சாபத்தை விலக்க முடிவு செய்தேன். உங்களை நான், பூனையாக மாற்றியதற்காக மன்னிப்பு கோருகிறேன்...' என்றான், நாடோடி.

இந்த பேச்சு, துறவியின் மனதை மாற்றியது.

'பரவாயில்லை... நான் செய்தது தவறு என்பதை, உணர்த்தி விட்டாய். இனி, எவரிடமும் இதுபோல நடந்து கொள்ள மாட்டேன்...'

மனம் வருந்தி திருந்தினார், துறவி.

'மிக்க நன்றி...' என்றான், நாடோடி.

மன்னரும் தவறை உணர்ந்து, 'துறவியே... நாட்டிற்கு வந்த உங்களை வரவேற்றிருக்க வேண்டும். இனி, தங்களைப் போன்றவர் வந்தால், நிச்சயம் மனப்பூர்வமாக வரவேற்பேன்...' என்றார்.

'பரவாயில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். நான் புறப்படுகிறேன்...'

'எங்கள் நாட்டில் சிறிது காலம் தங்கி, மக்களுக்கு அறிவுரைகளை கூறிச் செல்ல வேண்டும் என்பது, என் விருப்பம்...'

துறவியிடம் கேட்டுக் கொண்டார், மன்னர்.

'அப்படியே செய்கிறேன்...'

மந்திரியை அழைத்து, துறவி தங்குவதற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து தரும்படி உத்தரவிட்டார், மன்னர்.

நாடோடியிடம், 'தாங்களும் எம் நாட்டில் சிறிது காலம், அரசு விருந்தினராகத் தங்கிச் செல்ல வேண்டும்...' என்றார்.

பல வேலைகள் காத்திருப்பதாக கூறி, விடை பெற முயன்றான், நாடோடி.

அவனிடம், 'நீ யார் என்று கூறி விட்டு செல்லலாம் அல்லவா...' என்றார், துறவி.

'நான் ஒரு சாதாரண நாடோடி...'

மீண்டும் கூறியபடி, பயணத்தைத் தொடர்ந்தான், நாடோடி.



- தொடரும்...

- ஆர்.வி.பதி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us