PUBLISHED ON : ஜூலை 11, 2026

முன்கதை: தேவதையிடம் உதவும் வரம் பெற்றிருந்த நாடோடி, பிறர் பார்வையில் இருந்து மறைக்கும் மாயமோதிரம் ஒன்றும் வைத்திருந்தான். இவற்றை பயன்படுத்தி, மக்களுக்கு உதவியபடி ஊர் ஊராக சென்றான். புதிதாக வினோத நகரம் ஒன்றில், உருவில் மிகவும் சிறிய குள்ள மனிதர்கள் இருப்பதை கண்டு வியப்பில் ஆழ்ந்தான். அதில் இருந்த மர்மத்தை அறிந்து, குள்ள மனிதர்களை மீட்கும் நடவடிக்கைக்காக, துறவியை சந்தித்தான் நாடோடி. அவர் கோபத்தில் மறுக்கவே, தேவதை உதவியால் துறவிக்கு பாடம் கற்றுக் கொடுத்து, மக்களை மீட்டு பயணத்தை தொடர்ந்தான், நாடோடி. இனி -
பழைய அனுபவங்களை அசை போட்டபடி, பயணத்தைத் தொடர்ந்தான், நாடோடி. ஒரு புதிய நாட்டை அடைந்தான். இங்கு பல விநோதமான விஷயங்களை சந்திக்கவிருந்தான்.
நாடோடி சென்ற வழியில் ஒருவன் சோகமாக, வீட்டின் முன் திண்ணையில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான், நாடோடி.
நீண்ட துாரம் நடந்திருந்ததால், நாடோடிக்கும் சற்று ஓய்வு தேவைப்பட்டது. அந்த மனிதனிடம் பேச்சு கொடுத்தான், நாடோடி.
'ஏன் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்...'
மென்மையாக, விசாரித்தான், நாடோடி.
அந்த மனிதன் சொன்ன விஷயம், நாடோடிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
'ஐயா... என்கிட்டே ஒரு கோழி இருக்கு... அது, வாரத்துக்கு ஒருமுறை, தங்க முட்டை இடும். இப்ப அது, தங்க முட்டை இடறதில்லே. அதான் ஒரே கவலையா இருக்கு...'
நாடோடியால் இதை நம்ப இயலவில்லை. சந்தேகத்துடன் அவனை பார்த்தான்.
உடனே, ஒரு தங்க முட்டையை எடுத்துக் காண்பித்தான், அந்த மனிதன்.
'இப்ப நம்புறீங்களா...'
தலையை அசைத்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டான், நாடோடி.
சற்று தொலைவில், ஒரு வீட்டின் முன், சோகமாக அமர்ந்து கொண்டிருந்தான், இன்னொருவன். அவன் அருகில் ஒரு பூனை இருந்தது. சில ஆட்கள், அவனிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கே சென்று விசாரித்தான், நாடோடி.
'ஐயா... அனைவரும் ஏதோ கவலையா இருக்கிற மாதிரி தெரியுது. என்னன்னு தெரிஞ்சுக்கலாமா...'
அங்கிருந்த ஒரு ஆள், 'அது ஒண்ணுமில்லீங்க... இவரு, ஒரு மாட்டை வளர்த்துகிட்டு இருந்தாரு. அது, தினமும் எக்கச்சக்கமா பால் கறக்கும். அதை வித்து தான், ஜீவனம் பண்ணிகிட்டு இருந்தாரு. நேத்து அந்த பசுமாடு, திடீர்னு பூனையா மாறிடுச்சி. இது தான், பூனையா மாறின அந்த பசு மாடு. அதான், ஜீவனத்துக்கு என்ன பண்றதுன்னு புரியாம கவலைபட்டுகிட்டு இருக்காரு...'
அந்த ஆள், பூனையைக் காண்பிக்க, நாடோடிக்கு ஆச்சரியமாக இருந்தது.
'அது எப்படிங்க பசு மாடு, திடீர்னு பூனையா மாறும். நம்புற மாதிரி இல்லியே...'
'நம்பித்தான் ஆகணும். நாங்க ஏன் பொய் சொல்லப் போறோம். அந்த பசு மாடு, இவர் முன்னாலேயே தான் பூனையா மாறிச்சி... அப்ப நம்பித்தானே ஆகணும். நம்பறதும், நம்பாததும் உங்க இஷ்டம்...'
நாடோடியால் இதை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
'இந்த ஊர் ரொம்பவே விநோதமா இருக்கே. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே, ஒரு கோழி, தங்க முட்டை இடறதா சொன்னான், ஒருத்தன். இப்ப என்னடான்னா, தன்னோட பசு மாடு, பூனையா மாறிடுச்சின்னு, சொல்றான், இன்னொருத்தன். இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ' என யோசித்தபடி நின்றிருந்தான், நாடோடி. சற்று நேரத்திற்குப் பின் விடைபெற்று, பயணத்தைத் தொடர்ந்தான்.
இன்னும் சற்று துாரம் நடந்து சென்றவன், வழியில் ஒரு இடத்தில் உட்கார்ந்தான்.
ஒரு ஆள் அழுது கொண்டிருந்ததை பார்த்தான், நாடோடி. அவனிடம் சென்று விசாரித்தான்.
'ஐயா... இங்க தான் என்னோட வீடு இருந்துச்சி... காலையிலே எழுந்து பார்த்தா வீட்டை காணோம்; எங்க போச்சின்னுத் தெரியலை...'
நாடோடிக்கு இதுவும் விநோதமாக இருந்தது.
'அது எப்படி... வீடு திடீர்னு காணாம போகும்...'
'நான் சொல்றதை நீங்க நம்பலை இல்லையா...' என்றவன், அங்கு வந்து கொண்டிருந்தவனைக் கூப்பிட்டான்.
'இங்க என்னோட வீடு இருந்துச்சி இல்ல...' என்று, காலியாக இருந்த இடத்தைக் காட்டிக் கேட்டான்.
'அட ஆமா... உன்னோட வீடு இருந்த இடம், காலியா இருக்கே. வீடு எங்கப்பா போச்சு...'
ஆச்சரியத்துடன் கேட்டான், அந்த ஆள்.
'வீடு, காணாம போயிடுச்சி...'
அவன் சொன்னதை நாடோடியால் நம்பாமல் இருக்க முடியவில்லை.
ஊரில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாமே, ஆச்சரியமாகவும், விநோதமாகவும் இருந்தன.
நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருந்தது.
சற்று நேரத்தில் மற்றொரு விநோத அனுபவத்தைச் சந்தித்தான், நாடோடி.
- தொடரும்...
ஆர்.வி.பதி
